பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       Brahmin Today - June 2008   பிராமின் டுடே - ஜூன் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites



ஸ்ரீமத் பாகவதம் அத்தியாயம் - 15

ஜானகிராமன்

அந்த அழகியின் கடைக்கண் பார்வையால் கவரப்பட்ட சிவபெருமான் தன்வயமிழந்து சூழ்நிலையை மறந்து அவள் அருகில் சென்று அவளைத் தழுவ முயன்றார்.

அப்பொழுது, விஷ்ணு மாயையால் சக்தியை இழந்து, ஜடமாகத்தான் இருப்பதைத் திடீர் என உணர்ந்து சுதாரித்துக் கொண்டார்.

உலகின் ஆத்மாவாகிய அளப்பறிய சக்தியுடைய மஹாவிஷ்ணுவின் மஹாத்மியத்தை சிந்தித்த சிவபெருமான் விஷ்ணு மாயை தன்னையே ஒரு கணம் தடுமாற வைத்துவிட்டதை உணர்ந்தார்.

கலக்கம் நீங்கிய சிவபெருமானின் முன் ஸ்ரீமன் நாராயணன் தனது புருஷ ரூபத்தில் தோன்றி, "அறிவீனர்களால் கடத்தற்கரியதும், அவ்வப்பொழுது புதிது புதிதான ஆசைகளைத் தோற்றுவிக்கும் எனது மாயையை நீங்கள் கடந்துவிட்டீர். உம்மைத் தவிர வேறு யாருக்கும் இது இயலாதது" என்று கூறி மறைந்தார்.

சிவபெருமான் தன் அருகில் இருந்த உமையை நோக்கி, 'பிறப்பற்றவனும், பரதெய்வமுமாகிய பரமபுருஷனுடைய மாயையை நீ பார்த்தாயா? ஸித்திகளில் வல்லவனான நானே என்னை அறியாமல் ஒரு கணம் மயங்கி விட்டேனல்லவா?' என்று கூறினார்.

பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் 'முக்குண வடிவான என் மாயை தெய்வசக்தி வாய்ந்தது. கடத்தற்கரியது. யார் என்னையே சரணடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள்' என்று கூறுவது இங்க நினைவு கூறத்தக்கது.

பரீக்ஷித் மஹாராஜா மிகுந்த ஆர்வத்துடன் சுகப்பிரம்மத்தை நோக்கி, 'மஹரிஷி அவர்களே அசுரர்களின் அரசன் பலிச்சக்கரவர்த்தியையும் அசுரர்களையும் சுக்கிராச்சாரியார் காப்பாற்றி அவர்களுடைய அரசை மீட்டுக் கொடுத்தார் என்று கூறினீர்கள். உலக நாயகனாகிய நாராயணன் எதற்காக இந்த பலிச்சக்கரவர்த்தியிடம் பிச்சைக்காரன் போல மூன்றடி நிலம்யாசித்தார். அதைப்பற்றித் தெரிந்துகொள்ள மிகுந்த ஆவலுள்ளவனாக இருக்கிறேன். தயவு செய்து அந்த சரிதத்தைக் கூறுங்கள்' என்றார்.

சுகப்பிரம்மம் 'மஹாராஜா! இந்திரனால் தோற்கடிகப்பட்டு, அரசை இழந்து அநேகமாக உயிரையும்கூட இழந்த பலிச்சக்கரவர்த்தி தான் சுக்ராச்சாரியாரால் காப்பாற்றப்பட்டதால் அவரே கதியென்று அவருடைய சீடர்களும் சுக்ராச்சாரியாரும் கூறியபடி அரசாண்டு வந்தான். தனது குரு வழங்கிய தெய்வீகத் தேரில் ஏறிக்கொண்டு, மாபெரும் தேர் வீரனான மகாபலி அண்டசராசரங்கள் நடுங்க இந்திரனின் தலைநகரை அடைந்தான்.

தர்மத்தைக் கடைப்பிடிக்காதவர்கள், கொடியவர்கள், பிராணிகளுக்குத் துன்பம் கொடுப்பவர்கள், வஞ்சகர்கள், அகம்பாவம் கொண்டவர்கள். சிற்றின்பத்தில் நாட்டம் உள்ளவர்கள், கஞ்சர்கள் இவர்களுக்கு இடம் தராத இந்திரனின் தலைநகரான அமராவதியை நாற்புறமும் படைபலம் கொண்டு பலிச் சக்கரவர்த்தி முற்றுகையிட்டாள்.

அமரர்கள் மாறுவேடத்தில் அமராவதியை விட்டு நீங்கினார்கள். பலிச்சக்ரவர்த்தி அமராவதி நகரை ஆக்ரமித்துக்கொண்டான். அமரர்கள் அளவிட முடியாத துன்பத்திற்கு ஆளாகினர். இப்படி எல்லாச் செல்வங்களும் நிறைந்த தேவலோகம், அசுரர்களால் அபகரிக்கப்பட்டு அமரர்கள் துன்பப்படுவதைக் கண்டு தேவர்களின் தாயார் அதிதி மிக்க வருத்தம் அடைந்தாள்.

தன்னுடைய கணவர் காசியப முனிவரிடம், 'நம்முடைய குமாரர்கள் படும் கஷ்டங்களுக்கு எல்லாம் விமோசனம் கிடையதா? என்று கூறி மிகவும் வருத்தப்பட்டாள்.

அதற்குக் காசியப முனிவர், 'அதிதி! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், நாராயணனை பயோவிரதம் இருந்து ஆராதனை செய். அவர் உனது மனக்கறையை நீக்கி, அருள்புரிவார்' என்றார்.

உடனே அதிதி 'முனிபுங்கவரே! பயோவிரதம் எப்படி அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதை விவரமாகச் சொல்ல வேண்டும் என்று காசியபரிடம் வேண்டினாள்.

அதற்குக் காச்யபர், 'பங்குனி மாதம் சுக்ல பக்ஷத்தில் பிரதமை அன்று ஆரம்பித்து திரயோதசியன்று நிறைவு செய்ய வேண்டும்.' ஸ்ரீமன் நாராயணனை சிலையில் ஆவாஹனம் செய்து பால் அபிஷேகம் செய்ய வேண்டும். பஜனை, ஹோமம் முதலிய இறை பணிகளைச் செய்ய வேண்டும். வேதவித்துக்களுக்கும் குருவிற்கும் தகுந்த மரியாதை செய்ய வேண்டும். விரதத்திற்கு வந்துள்ள அனைவருக்கும் இழிகுலத்தோர், உயர் குலத்தோர் என்ற ஜாதி வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆண்டவனின் அம்சமாகக் கருதி விருந்து அளிக்க வேண்டும்.

மேலும் ஏழை, பார்வையற்றோர், எளியோர் ஆகிய அனைவரும் உண்டு மகிழ்ந்தபின் விரதத்தைக் கடைபிடிக்கும் நீ, பாலை மட்டும் பன்னிரண்டு நாட்களும் அருந்தி எப்போதும் சிந்தனையை இறைவன்பால் செலுத்தி அருந்தவம் இயற்ற வேண்டும். இந்தச் சிறப்பு வழிபாட்டை பிரம்ம தேவர் எனக்கு உபதேசம் செய்தார். தூய்மையான சிந்தனையுடனும் ஆர்வத்துடனும் இந்த விரதத்தைக் கடைபிடித்து உன் மக்கள் நன்மை பெற வழி செய்ய எனது ஆசிகள் என்றார்.

அதிதி தேவி இந்த விரதத்தைத் தீவிரமாகக் கடைப்பிடித்து, விரதகாலம் முழுவதும், 'பகவானும், பரமபுருஷனும் அனைவரின் இதயத்திலும் வீற்றிருப்பவரும், வாசுதேவனும், ஜகத்குருவும், சிவஸ்வரூபியாகவும், ருத்ர ஸ்வரூபியாகவும், சக்தியை தரித்தவருமான ஜனார்த்தனா உனக்கு நமஸ்காரம் என்று மனமுருகப் பிரார்த்தித்தாள்.

அதிதியின் பிரார்த்தனைக்கு மனமிரங்கிய ஆதிபகவன் அவள் முன், 'சங்கு சக்கரம் கதை ஏந்தி காட்சியளித்து, உன் மக்கள் நலனுக்காக நீ சிறந்த முறையில் பயோ விரதத்தை அனுஷ்டித்ததில் எனக்கு மகிழ்ச்சி. உனது மகனாக நானே அவதரித்து அமரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கிறேன் என்று உறுதி கூறினார்.

வாக்களித்தபடி ஸ்ரீமன் நாராயணன் வாமனனாக சிறிய உருவில் அவதரித்தார்.

வாலறிவனை வாமனப் பிரம்மச்சாரியாகக் கண்ட மகரிஷிகள் மகிழ்ச்சியுடன் அவருக்குப் பெயர்சூட்டி, பூணூல் விழாவையும், விமரிசையாகச் செய்தார்கள். காயத்ரி மந்திரத்தின் கருவாகிய வாமனருக்கு, காயத்ரி மந்திரத்தை உபதேசிக்கும் பெரும்பேறு சூரிய பகவானுக்குக் கிடைத்தது.

(தொடரும்)

அப்பய்ய தீக்ஷிதர் பாரதி பக்கம்



    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by AKR Consultants