பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       Brahmin Today - June 2008   பிராமின் டுடே - ஜூன் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites



Bharathiyar

பாரதி பக்கம்

பாஞ்சாலி சபதம் என்னும் பைந்தமிழ் காவியத்தின் செயல் களமாகத் திகழும் அஸ்தினாபுரத்தை வர்ணிக்கும் பாரதியின் முதல் பாடலே இக்காவியத்தின் போக்கினை உணர்த்தும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. ஊர், பேர் சூழ்நிலைகளை உரைக்கும் விதமாக வர்ணனை செய்யும் வரகவி பாரதி அதனூடே வெளிப்படுத்தும் பல்வேறு நுண்ணிய உணர்வுகள் பாஞ்சாலி சபதம் முழுவதும் ஆங்காங்கே பரவிக்கிடக்கின்றன.

காவிய இலக்கணப்படி கதைக் களத்தைச் சிறப்பான ஒன்றாகச் சீர்தூக்கிக் காட்டும் விதமாக அஸ்தினாபுரத்திற்கு இணையாக அகிலத்தில் வேறு நகரம் இல்லை. அங்கு முத்தொளிர் மாடங்கள் பல உள்ளன. மலர் நிறைந்த சோலைகளும் வாவிகளும் மிகுந்துள்ள அந்நகரத்தில் வாழும் பெண்கள் ரதி தேவிக்கு ஒப்பானவர்கள். அந்தணர் வீதிகளும் அங்கு எப்போதும் நிகழும் வேள்விகளும் ஒலிக்கும் இடைவிடாத மந்திரங்களும் இடையிடையே நடைபெறும் வாதப் பிரதிவாத விவாதங்களும் அஸ்தினாபுரத்தை ஒரு அழகான நகரமாக நம்முன்னே கொண்டு நிறுத்தும் அமரகவி பாரதியின் அடுத்து வரும் வரிகள் அவன் நமக்கு எடுத்துக்காட்டும் ஒரு அருமையான நுண் கருத்தாக நம்முன் நிற்கின்றது.

உலகத்தில் உண்மைக் கருத்துகளும் உயர்ந்த மனிதர்களும் இருப்பது மட்டுமின்றி, அதனிடையே அவற்றுக்கு நேர் எதிரான கருத்துகளும் அற்ப மனிதர்களும்கூட இருப்பது தவிர்க்க முடியாதது. தீ நடுவில் புகையும் தீஞ்சுவை பழங்களின் உள்ளே கருவண்டும் ரோஜாவின் அடியில் முட்களும் இறையாளர்களின் மத்தியில் இழிசெயல் புரிவோரும் இணைந்து இருப்பதுதான் உலக இயற்கை என்னும் தத்துவத்தை நல்முத்துகளாக மொழியும் இவ்வரிகள் மிக இனிமையானவை.

"மெய்த்தவர் பலர் உண்டாம் - வெரும்
வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம்
உய்த்திடும் சிவ ஞானம் - கணிந்தோர்
இடுமேலவர் பலர் உண்டாம்
பொய்த்த இந்திரசாலம் - நிகர்
பூசையும் திரியையும் புலை நடையும்
கைத்திடு பொய் மொழியும் - கொண்டு
கண் மயக்காற் பிழைப்போர் பலராம்"

என்ற இந்த வரிகள் எக்காலத்திற்கும் எப்போதும் பொருந்தும் எழில் வரிகளாக நம்முன் நிற்கின்றன. காவியம் முழுவதும் கதாபாத்திரங்களின் வாயிலாக இது போன்ற காலக் கடிகாரத்திற்கு அப்பாற்பட்ட கணக்கற்ற கருத்து நேரங்களைக் கண்டு வியக்கும் நாம் இப்போது இப்பாடலைப் பார்ப்போம்.

முதலாவது - அழைப்புச் சருக்கம்
ஹஸ்தினாபுரம்

அத்தின புரமுண் டாம்; - இவ்
வவனியி லேயதற் கிணையிலை யாம்;
பத்தியில் வீதிக ளாம்; - வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்;
முத்தொளிர் மாடங்க ளாம்; - எங்கு
மொய்த்தளி சூழ் மலர்ச் சோலைகளாம்;
நத்தியல் வாவிக ளாம்; - அங்கு
நாடு பிரதிநகர் தேவிக ளாம்;

அந்தணர் வீதிக ளாம்; - மறை
யாதிக ளாம் கலைச் சோதிக ளாம்;
செந்தழல் வேள்விக ளாம்; - மிகச்
சீர்பெறுஞ் சாத்திரக் கேள்விக ளாம்;
மந்திர கீதங்க ளாம்; - தர்க்க
வாதங்க ளாம்; தவ நீதங்க ளாம்;
சிந்தையி லறமுண் டாம்; - எனித
சேர்ந்திடுங் கலிசெயு மறமுமுண் டாம்

மெய்த்தவர் பலருண் டாம்; - வெறும்
வேடங்கள் பூண்டவர் பல ருமுண் டாம்;
உய்த்திடு சிவஞா னங் - கனிந்
தோர்ந்திடு மேலவர் பலருண் டாம் ;
பொய்த்தவிந் திரசா லம் - நிகர்
பூசையுங் கிரியையும் புலைநடை யும்
கைத்திடு பொய்ம் மொழியும் - கொண்டு
கண்மயக் காற்பிழைப் போர்பல ராம்.

மாலைகள் புரண்டசை யும் - பெரு
வரையெனத் திரண்டவன் றோளுடை யார்,
வேலையும் வாளினை யும் - நெடு
வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார்,
காலையு மாலையி லும் - பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர்
நூலையுந் தேர்ச்சிகொள் வோர், - கரி
நூறினைத் தனிநின்று நொறுக்கவல் லார்

ஆரிய வேன்மற வர், - புவி
யாளுமொர் கடுந்தொழி லினிதுணர்ந்தோர்,
சீரியல் மதிமுகத் தார் - மணித்
தேனித ழழுதென நுகர்ந்திடு வார்
வேரியங் கள்ளளுந் தி - எங்கும்
வெம்மத யானைக ளெனத்திரி வார்,
பாரினி லிந்திரர் போல் - வளர்
பார்த்திவர் வீதிகள் பாடுவமே,

நல்லிசை முழக்கங்க ளாம்; - பல
நாட்டிய மாதர் தம் பழக்கங்க ளாம்;
தொல்லிசைக் காவியங்கள் - அருந்
தொழிலுணர் சிற்பர்செ யோவியங் கள்
கொல்லிசை வாரணங்கள் - கடுங்
குதிரைக ளோடு பெருந் தேர்களுண் டாம்;
மல்லிசை போர்களுண்டாம்; - திரள்
வாய்ந்தவை பார்த்திடு வோர்களுண் டாம்
(பாடல் முற்றுப் பெறவில்லை)

(தொடரும்)

ஸ்ரீமத் பாகவதம் எந்தையும் தாயும்



    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by mazhalaigal.com