We say what we believe |
|
Contents Brahmin Today - June 2008 பிராமின் டுடே - ஜூன் 2008 அட்டவணை |
||
|
Editor: Vasan
Web Master: Favorites
Achalam.com |
Sparksஉபநயனங்கள் சிலவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு பம்பாய் சென்றதன் மூலம் பிராமின் டுடே வாசகர்கள் பலரைச் சந்திக்கும் நல்வாய்ப்புக் கிட்டியது. மும்பைப் பயணத்திற்குச் சில நாட்கள் முன்பு அலுவலகம் வந்து நம்மோடு எண்ணங்களைக் பகிர்ந்துகொண்ட நம் வாசகர் திரு. வாசுதேவன் சில கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். இவர் டில்லி தீவிர வாசகர் மற்றும் நம் ஆதரவாளரான திரு. சுப்பிரமணியம் அவர்களின் சகோதரர் ஆவார்.பிராமின் டுடே தன் 50 வது இதழைக் கடந்த பின்பும் இதுவரை அடைய முடியாத பொருளாதாரத் தன்னிறைவு பற்றி அவர் வெளிப்படுத்திய சில கருத்துகள் சிந்தித்துச் செயலாற்றத்தக்கவை. ஒவ்வொரு இதழை வெளியிடுவதும் ஓயாத போராட்டத்திற்கும் மன உளைச்சலுக்குப் பிறகே சாத்தியமாகிறது என்ற சத்தியம் நம் வாசகர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டடியது நிச்சயம் என்பதை நன்றாக நமக்கு உணர்த்திய அவருக்கு நம் நன்றி உரித்தாகுக. நம் சமூகத் தொடர்புடைய பல்வேறு முக்கிய விஷயங்களில் தம் முழு நேரத்தையும் மனத்தையும் செலுத்திச் செலவிடப்பட வேண்டிய இதழ் ஆசிரியர் வளர்ந்துவரும் பணப் பிரச்சினையில் அமிழ்ந்து, அழிந்துவிடாமல் காக்கப்படுவது வாசகர் அனைவரின் கடமையாகும். பகிர்ந்துகொள்வதன் மூலம் இன்பம் இரட்டிப்பாவதும் துன்பம் பாதியாவதும் புரிந்துகொண்டு செயல்படுத்தப்பட வேண்டிய இயல்புகளில் ஒன்றாகும். வாசகர்கள் அனைவரும் பிராமின் டுடே பற்றிய மாதாந்திரப் பொருளாதாரப் போராட்டங்களைத் தாமாகவே தெரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது அவர்களின் ஓயாத ஓய்வில்லாத நடைமுறைகள் தெரிந்து கொள்ளப்படவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. வேண்டிய அளவு விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம். வீடுதோறும் வீதிதோறும் சென்று தமக்கு வேண்டியவர்களிடம் பிராமின் டுடே இதழ் பற்றி எடுத்துச் சொல்லி சந்தா சேர்க்கும் தன்னார்வப் பணியாளர்கள் இல்லாதது மறுபுறம். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக பிராமின் டுடே பற்றிய விழிப்புணர்வு சமூக மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டியது முதற்கண் செய்ய வேண்டிய ஒரு உடனடிச் செயலாகும். இக்கட்டில் இருக்கிறோம் என்பதை எடுத்துச் சொன்னால்தான் நம் பக்கம் வந்து உதவி செய்வது சமூக மக்களுக்கு ஏதுவாகும். தொடர்ந்து மாதாமாதம் ஒரு சிறிய தொகையாவது நம் வாசகர்கள் சந்தாவுக்குக் கூடுதலாக பிராமின் டுடே வளர்ச்சிக்கும் அது தொடர்ந்து வருவதற்கும் அளிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு இதழிலும் ஒரு வேண்டுகோளாக நாம் விடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்திய அன்பர் வாசுதேவன் அவர்களின் கருத்தில் உள்ள உண்மையை நாம் உணர்ந்து கொண்டோம். தன்னால் எல்லோருக்கும் தெரியும் என்று இந்நாள்வரை சும்மா இருந்ததுதான் தவறு. சுட்டிக்காட்டிய அவரது கருத்துகளுடன் பம்பாய் சென்று நாம் பலரைச் சந்தித்தோம். பம்பாய் பிராமணன் (திரு. விஸ்வநாதன்), கோபால அய்யர் போன்ற பம்பாய் வாசகர்கள் பலரும் மேற்சொன்ன கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி அதை மிக விரைவில் செயல்படுத்தும் முறைகளை ஆராய்ந்து வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள். சந்தா மற்றும் விளம்பரங்கள் தவிர்த்து நீண்டகால அடிப்படையில் ஒரு வைப்புத்தொகை நிறுவப்படுவதும் பெரிய செல்வந்தர்கள் மற்றும் நம் சமூக நிறுவனங்களிடமிருந்து மாதாந்திர அடிப்படையில் அல்லது காலாண்டு அடிப்படையில் நன்கொடைகள் பெறப்படுவது ஒரு முக்கியச் செயல்வடிவமாக முன்நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் நம்முன் வைக்கப்பட்டது. மும்பை வாசகர் திரு. ராமலிங்கம் போன்றோர் ஆயுள் சந்தா மட்டுமின்றி அவ்வப்போது நம் இதழ் வளர்ச்சிக்குத் தொகை அனுப்புவது நாம் மேற்கொள்ளும் நற்செயல்களில் மனமுவந்து கலந்து கொள்வது போன்றவற்றைச் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்கின்றனர். ஊர்கூடித் தேர் இழுக்கும் இந்த உன்னதப் பணியில் மேன்மேலும் இது போன்ற பல சான்றோர்களை இணைக்கும் விதமாக ஒரு செயல்திட்டம் நம் சிந்தையில் புகத் தொடங்கியுள்ளது. "பிராமின் டுடே அறக்கட்டளை" என்ற ஒரு சமூக அமைப்பினைத் தொடங்க எண்ணுகிறோம். Trust actஇன்படி பதிவு செய்யப்பட இருக்கும் இந்த Private Trust சென்னை மற்றும் பம்பாய் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உள்ள நம் சமூக ஆர்வலர்களைக் கொண்டதாக அமையும். பிராமின் டுடே இதழ் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் பக்கம் கூடிய ஒரு சிறந்த இதழாக மாதந்தோறும் வெளியிடப்படுவது இவ்வமைப்பின் முக்கிய மற்றும் அடிப்படை நோக்கமாகக் கொள்ளப்படும். Trust உறுப்பினர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் பிராமின் டுடே இதழை வலுவடையச் செய்வதுடன், விளம்பரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் இதழின் பொருளாதார நிலையை உயர்த்தும் உயரிய பணியில் ஈடுபடுவார்கள். அவ்வப்போது மேற் கொள்ளப்படும் சேவை நற்செயல்களை முன்நின்று நடத்தும் முதன்மைப் பொறுப்பாளர்களாகத் திகழும் இவர்கள் நம் இதழ் என்றென்றும் தொடர்ந்து பயணிக்கும் பயணத்தின் மைல் கற்களாவர். தாங்கள் செய்யும் இந்த சேவைப் பணியைத் தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் மூலம் பரந்து விரிந்து எப்போதும் எழுந்து நிற்கும் எழில் ஊற்றாக நம் இதழை மாற்றும் இனிய கடமையையும் ஆற்றுவார்கள். ஏட்டளவில் எடுத்துக்காட்டிய இந்தப் பாட்டின் பல்லவிக்கு, ராகம், தாளம் போட்டு அந்த இசையை எல்லோரும் கேட்டு இன்புறும் விதமாக நம் வாசகர்கள் நீட்டும் ஆதரவுக் கரங்களைப் பற்றிக்கொண்டு அவர்கள் காட்டும் வழியில் பிராமின் டுடே தம் பயணத்தைத் தொடரத் தயாராக உள்ளது. வரும் இதழ்களில் மேலும் இது பற்றிப் பல விவரங்களை வெளியிட உள்ளோம். இதைப் படித்து உதவிடத் துடித்து நிற்கும் துணிவு உள்ளங்கள் உடனே காகிதம் எடுத்துத் தங்கள் முகவரி மற்றும் அடுத்து தாம் செய்யப்போகும் பணிகள் பற்றிய விவரங்களை உடனே நமக்கு எடுத்துக் காட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். |
|