We say what we believe |
|
Contents Brahmin Today - June 2008 பிராமின் டுடே - ஜூன் 2008 அட்டவணை |
||
|
Editor: Vasan
Web Master: Favorites
Achalam.com |
ஓர் உரத்த சிந்தனைகடந்த சில ஆண்டுகளாக நம் ப்ராம்மண ஸமூஹத்தில் நடைபெறும் விவாஹங்களில் திருமாங்கல்ய தாரணம் ஆகுமுன், விவாஹம் நடத்திவைக்கும் புரோகிதரால் ஓர் அறிவிப்பு செய்யப்படுகிறது. அதாவது "திருமாங்கல்ய தாரணம் ஆன உடனேயே தம்பதிகளுக்கு யாரும் கைகொடுத்து வாழ்த்துத் தெரிவிக்க வேண்டாம். கைகொடுப்பதை ஸப்தபதி ஆனபிறகே செய்ய வேண்டும். அதுவரை அமைதிகாக்க வேண்டும்" என்று. இதற்கான காரணங்களாக, ஸப்தபதி ஆன பின்புதான் விவாஹமே நிறைவுபெற்றதாகக் கருதப்படும் என்பது போன்று பல செய்திகள் கூறப்படுகின்றன. இவ்வாறு செய்யாவிட்டால் விவாஹத்தின் பலனே கிட்டாது என்றும் ஏதேதோ கூறப்படுகிறது.கர்பாஷ்டமத்தில் இல்லாவிட்டாலும் குறைந்தபஷம் 15வயதிற்குள்ளாவது பையன்களுக்கு உபநயனம் செய்வித்து வைதீக தர்மங்களை ஓரளவாவது அனுசரித்து நடக்கும் குடும்ப விவாஹங்களுக்கு வேண்டுமானால் இந்த அறிவிப்பு ஏற்புடையதாக இருக்கும். இன்றைக்குப் பெரும்பாலான ப்ராம்மண ப்ரம்மச்சாரிகள் (ஏன் க்ருஹஸ்தர்களும்கூட) அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஸந்தியாவந்தனாதி நித்யகர்மாக்களைக்கூட முறையாகச் செய்வதில்லை. ஸந்தியாவந்தனம் செய்யாமல் செய்யப்படும் எந்த வைதீக கர்மாவும் பலன் அளிக்காது என்று சாஸ்த்திரங்கள் சொல்கின்றன. சாஸ்த்திர விருத்தமாகவே வாழ்நாள் முழுவதும் வாழந்து கொண்டு, விவாகத்தையும் ஒரு நிர்ப்பந்திக்கப்பட்ட சடங்காகவே செய்யும் பெரும்பாலான ப்ராம்மண விவாஹங்களில் இந்த அறிவிப்பு சிறிதும் பொருத்தமற்றது என்பதோடுகூட, இது தவிர்க்கத் தக்க சில தர்ம சங்கடங்களையும் உண்டாக்கி விடுகிறது என்பதே உண்மை. நம் விவாஹரத்திற்கு வருபவர்களில் இதர ஜாதியினரும் ஏன் இதா மதத்தினரும்கூட இருக்கலாம்/இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கல்யாணப் பையனுக்கோ பெண்ணுக்கோ (இன்றைக்கு அனேகமாக பையனும் பெண்ணும் உத்யோகத்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள்) மேலதிகாரிகளாகவும் (General Manager, Managing Director) போன்ற உயர் பதவியில் உள்ளவர்களாகவும் இருக்கலாம். மேலும் அவர்கள் இது போன்று அன்றே நடைபெறும் வேறு ஓரிரு விவாகங்களிலும் கலந்துகொண்டு விட்டு (அதாவது தலையைக் காட்டிவிட்டு) அலுவலகம் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளவர்களாகவும் இருக்கலாம். அவர்களது ஆசி (hand shake) பையன்/பெண்ணுக்கு அவர்களது லௌகீக வாழ்க்கையில் அத்யாவசிய தேவையாகவும் இருக்கலாம். மேற்கூறிய அறிவிப்பு அவர்களை இருந்து வாழ்த்திவிட்டுச் செல்வதா? அல்லது மணப்பெண்/பையன் லீவு முடிந்து Duty join பண்ண வரும்போது வாழ்த்திக்கொள்வதா? என்ற தர்மசங்கடத்தில் ஆழ்த்தும்/ஆழ்த்துகிறது. இது தம்பதிகளையும் சங்கடப்படுத்துகிறது. திருமாங்கல்ய தாரணம்தான் விவாஹத்தின் உச்ச/நிறைவுக்கூட்டம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை அந்த சமயத்தில் புஷ்பங்களைத் தம்பதிகளின் மேல் தூதுவதன் மூலமாகவும் கெட்டிமேளம்/ஆனந்தம் வாசிப்பது மூலமாகவும், கல்யாணப் பெண்/பையனின் தாய் தந்தையர்களை உறவினர்கள் அனைவரும் "மாப்பிள்ளை வந்தாரா? மாட்டுப் பெண் வந்தாளா?" என்று கேட்டுக் கைகொடுப்பதின் மூலமாகவும் காலம்காலமாக உண்டாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், தம்பதிகளை வாழ்த்தத் துடிக்கும் வந்த விருந்தினரை மட்டும் கட்டிப்போடுவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. ஒரு நிகழ்வு (சுகமோ/துக்கமோ) நடந்த உடனேயே வாழ்த்தாமல்/அனுதாபம் தெரிவிக்காமல், காலம் தாழ்த்தி அதைச் செய்வது "ஆறின கஞ்சி பழங்கஞ்சி" என்பது போல்தான். இன்னும் கூறப்போனால் திருமாங்கல்ய தாரணத்தின் போது கூறப்படுவது ஒரு சுலோகமே தவிர வேதமந்திரமில்லை. இது (அதாவது திருமாங்கல்யதாணம், ஒரு சம்பிரதாயமே என்ற கருத்தும் பரவலாக உள்ளது. மேலும் பெரும்பாலான விவாகங்களில் விவாஹத்திற்கு முதல் நாளிலேயே (அதாவது சாஸ்திரப்படி பெண்ணும்/பையனும் தம்பதிகள் ஆவதற்குமுன்பே) அவர்களைச் சேர்த்து வைத்து ரிசப்ஷன் நடத்துவது எந்த சாஸ்த்திர ஸம்பிரதாயதில் என்றும் புரியவில்லை. ஆகவே சாஸ்த்திர சம்மதமான ஸப்தபதி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துக்கொண்டு, சம்பிரதாயத்தில் நடந்துவரும் திருமாங்கல்ய தாரணத்தை விவாஹத்தின் கடைசி நிகழ்ச்சியாக வைத்தால் (இதற்கேற்றாப்போல விவாஹ லக்னத்தை அமைத்துக் கொண்டு) மேற்கூறிய தர்மசங்கடத்தைத் (தம்பதிகளுக்கும்/வந்த விருந்தினருக்கும்) தவிர்க்கலாமோ என்பது என் உரத்த சிந்தனை. இக்கருத்தினைத் தங்களின்/தங்கள் வாசகர்களின் மேலான அபிப்ராயங்களுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன். ரா. குப்புசாமி |
|