பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       Brahmin Today - June 2008   பிராமின் டுடே - ஜூன் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites



கலைவாணி துணை

திருவேங்கடவன் சரணப் பத்து

வித்வான் வி. துரைசாமி. எம்.ஏ.

மூன்றொடு நான்காய் முகிழ்த்தமா மலைமேல் மூவுல குந்தொழு தேத்தக்
கான்றெழு கருணை மாமுகி லென்னக் காட்சிதந் திடுதனி முதலே!
ஆன்றவர் ஆழ்வா ராதியர் சொரிந்த அருந்தமிழ்க் காவினில் மலரும்
ஏன்றகற் பகமே! பதுமமா மலராட் கினியவேங் கடவனே சரணம்

வேதவே தாந்த வித்தகத் துள்ளே விளைந்திடும் ஒண்பரஞ் சுடரே!
போதில்நான் முகனும் புராரியும் மற்றும் பொன்னுல கத்தவர் முனிவர்
காதலால் உள்ளங் கசியுமன் பினரும் கண்டடி யேத்திட வளரும்
ஆதியே! திருமா மகள்உவந் தொளிரும் அண்ணலே நின்னடி சரணம்

ஆடவர் பெண்மை அவாவுநின் றோளை அணைந்திட இராவணன் றங்கை
ஏடவிழ் மலராள் மந்திர முரைக்க எழிலுரு மேவினன் என்பர்
நீடிய தீமை நிதம்புரி அரக்கி நின்னருட் குரியளென் றால்இவ்
வாடிடும் அடியேன் செய்பிழை யாதோ வரதவேங் கடவனே சரணம்

வல்வினை தீர்க்கும் வள்ளலே நின்றன் வாயிலில் படியெனக் கிடக்க,
அல்லிமா மலர்சேர் திருக்குள மதனில் அருஞ்சிறைக் குருகென மிளிர
நல்லதோர் தவத்தைப் பெற்றிட அன்று நவில்குல சேகரற் கருளும்
செல்வனே! திருவேங் கடத்துநின் றருளும் செங்கண்மால் நின்னடி சரணம்

அன்பருள் ளத்தை ஆலயங் கொள்ளும் அமரர்கட் கதிபனே சரணம்
துன்பினைத் துடைத்துத் தொல்கதி யருளும் தூயனே நின்னடி சரணம்
வன்புல மென்னும் என்னுளந் தனிலும் வந்தருள் புரிகுவோய் சரணம்
நின்பத மன்றி நீணில மதனில் பற்றிலேன் நெடியனே சரணம்.

முதலைவாய்ப் பட்ட மதகரி ஆதி மூலமே சரணமென் றழைக்க
விதலைநோய் தீர்க்கக் கருடன்மே லிவர்ந்து விரைந்துவந் தருளும்வேங் கடவா!
சிதலைபோற் கிடந்து சிறுமையுற் றுழலும் சிறியனேன் பத்திமை யில்லாக்
குதலைவாய்க் கவியால் குழறுகின் றேன்நின் குரைகழல் சரணமென் கோவே.

பெற்றதாய் வரத்தைப் பேணிடக் கானில் பேசிடு மறைக்கப் படாத,
நற்றவ முனிவோர் தேவர்கந் திருவர் நான்முகன் முதலினோர்க் கெட்டாச்
சொற்றுணைப் பதங்கள் படியமே வியநாள் சுகமுறத் தடந்தொறும் புல்லாய்
முற்றிய முள்ளாய்க் கிடந்திலே னந்தோ முகுந்தனே நின்னடி சரணம்

நந்தகோ பன்றன் மாளிகை யதனில் நளிர்மணித் தொட்டிலில் துயிலும்
அந்தவே ளையினில் ஆருயிர் கவர அணைந்திடு சகடனை யுதைத்துப்
பந்தம தகற்றி முத்தியை யளித்தாய்! பாவியேன் சகடம்ஆ மாறும்,
சுந்தரக் கழற்கால் தீண்டுமா மாறும் சொற்றவம் செய்திலேன் சரணம்.

கம்பநாட் டாழ்வார் கவிச்சக்ர வர்த்தி காகுத்தன் நின்பெருங் கதையை
இம்பரிற் பாடிக் கவியரங் கேறும் எல்வையில் "எஞ்சட கோபன்
நம்பனைப் பாடா தென்கதை கேளேன்" எனநவில் நம்பெரு மானே!
அம்புவி யதனில் என்றன்புன் கவியும் அடியினைக் காக்கினேன் சரணம்.

பாயினைச் சுருட்டிக் கொள்ளெனப் பகர்ந்த பாவலன் மழிசையர் கோனின்
ஏயுமன் பிணைந்த ஏவலுக் காக இட்டடி பெயர்த்தெழுந் தருளும்
மாயனே! அருவி மழைபொழி சிகர மலையினின் றருள்புரி மாலே
சேயனேன் றனக்குன் சேவடிப் போதைச் சென்னிசேர்த் தருளுவாய் சரணம்.

நெடும்பெருஞ் சிமைய வேங்கடத் துச்சி நின்றருள் நீலக்கற் கண்டே!
இடும்பைகள் அகன்றுன் அடியினை பரவ எண்ணிலார் எறும்பென மொய்ப்பர்
உடும்பெனப் பற்றும் உறுதியில் லாத உன்மத்தற் கிரங்கிவந் தருள்வாய்
கொடும்பகை யழிக்கும் நேமியாய் சரணம் கோதண்ட பாணியே சரணம்.

திரு. வாஸன் அவர்களுக்கு, சுந்தரம் எழுதிக்கொண்டது. இத்துடன் திருவேங்கடவன் சரணப் பத்து என்ற கவிதையை அனுப்பி உள்ளேன். வித்வான் V. துரைசாமி M.A., (Retd Medura College Professor), சாகித்ய அகாடமி விருதினை சருகு எனும் கவிதைக்காகப் பெற்றவர்; காஞ்சி சுவாமிகள்மீது "உலா" எழுதிப் பரிசு பெற்றவர்; பொற்கிழி கவிதை எழுதிப் பரிசு பெற்றவர் "வைகைறை கனவு" என்னும் காவியத்தை மதுரை யுனிவர்ஸிடியார் B.A., B.Sc.க்கு பாடநூலாகப் பெற்றுள்ளனர்; கோனார் பப்ளிகேஷன்ஸ் இவரது பல நூல்களைப் பதிப்பித்துள்ளது. "அங்கயற்கண்ணி அனுபூதி" என்ற நூலை அருணகிரிநாதருக்குபின் அருளிச் செய்தவர்; பல கவியரங்கங்களிலும் பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டவர்; இவரது புகழை அறியாத தமிழ் நூல் ஆசிரியர் இருக்க முடியாது. ஹிந்தியிலுள்ள துளசி ராமாயணத்தைத் தமிழாக்கம் செய்தவர். மதுவுர "சுக்ரிணி" சீத்தாராமன் ரூ. 25,000/- கொடுத்து இவரைக் கௌரவித்தார். இன்னும் எழுத்திலடங்காத பெருமை பெற்றவர்.

இவருக்கு வயது 85. மதுரையில் எல்லிஸ் நகரில் மகன் வீட்டில் இருக்கிறார். முகவரி M. 277, Elliys Nagar, Madurai 625 010. Phone No. 2601811,

என். சுந்தரம்

நாராணசாமி கல்லூரி Sparks



    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by AKR Consultants