We say what we believe |
|
Contents Brahmin Today - June 2008 பிராமின் டுடே - ஜூன் 2008 அட்டவணை |
||
|
Editor: Vasan
Web Master: Favorites
Achalam.com |
பிராமணர்களும் இட ஒதுக்கீடும்மூன்று வருடங்களாகத் தொடர்ந்து நம் இதழ் முகப்புத் தலைப்பாக நாம் எடுத்துக்கொண்டு விவாதிக்கும் இட ஒதுக்கீடு பிரச்சினை தமிழக பிராமணர்களின் வாழ்வில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. சென்ற ஆண்டு 2006 June இதழில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால இட ஒதுக்கீட்டுத் தடையின் சில காரணங்களையும், விளைவுகளையும் ஆராய்ந்திருந்தோம். இட ஒதுக்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பு வந்துவிட்ட இச்சமயத்தில் அப்பிரச்சினைப் பற்றி நமது விரிவான நிலையை எடுத்துக் காட்டுவதே இம்மாத முகப்புத் தலைப்பின் நோக்கமாகும்.இட ஒதுக்கீடு கூடாது என்பவரும் அது அப்படியே நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்பாரும் மிகச் சிறந்த முறையில் எடுத்துக் காட்டிய வாதங்களுக்கு இணையாக அல்லது அவற்றின் முத்தாய்ப்பாக ஒரு மிகச் சிறந்த இறுதித் தீர்ப்பை இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது என்றே நாம் கருதுகிறோம். இட ஒதுக்கீடு கூடாது என்ற தரப்பின் வாதங்கள் மறுக்கமுடியாத புள்ளி விவரங்களின் மீது சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டிருந்தாலும் இந்திய நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அதே சமயத்தில் ஒரு தலைபட்சமற்ற ஒரு நடுநிலை தீர்ப்பாக வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு இரு தரப்பிற்கும் மன நிறைவை அளிக்கவில்லை என்பதே யதார்த்தம். பிராமணர்களைப் பொறுத்தவரை கிரிமிலேயர் சார்பற்ற O.B.C. இட ஒதுக்கீடு ஒரு மிகப்பெரிய அநீதியாகக் கொள்ளப்படும். O.B.C. என்ற ஒற்றை அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு செல்வந்தர்களும் கல்வி முன்னேற்றத்தில் எவருக்கும் குறைவில்லாத கணக்கற்ற பல குடும்பங்கள் தொடர்ந்து கல்வி சுரண்டலை நடத்தி கொண்டு இருந்திருக்கும். எந்தவித அடிப்படை நியாயமும் இன்றி வெறும் அரசியல் காரணங்களுக்காக அமல்படுத்துப்பட்டு வந்திருந்த இந்த அநியாயம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது ஒட்டு மொத்த பிராமண சமூகத்திற்கும் கிடைத்த ஒரு பெரிய மனஆறுதல் என்பதில் சந்தேகம் இல்லை. பரம தரித்திர பார்ப்பனக் குழந்தைகள் இரவு பகல் பாடுபட்டுப் படித்துப் பெற்ற பட்டங்களினால் அந்தத் தலைமுறையே கல்வி முன்னேற்றம் அடைந்துவிட்டது என்று உரத்த குரலில் ஊர் முழுவதும் பேசியவர்களின் குடும்பங்கள் டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும் இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். பரிசாரகன், பாத்திரம் கழுவுபவள், ஒரு வேளை சோற்றுக்கே ஓயாது உழைப்பவர் என்றிருந்தாலும் பிராமணராய் அவர் இருந்தால் அவர்கள் பிள்ளைகளுக்குக் கல்லூரிகளில் இடம் இல்லை. ஆனால் மூன்றடுக்கு மாளிகை, 300 ஏக்கர் நிலங்கள், வேண்டிய மட்டும் பணம் கிட்டும் வியாபாரம் என்றாலும் O.B.C.யாய் இருந்தால் உடனே அவர் பிள்ளைகளுக்கு கல்விசாலைகளில் கணக்கற்ற இட ஒதுக்கீடு. எப்போதோ எடுத்த மக்கள் கணக்கெடுப்பின் அடிப்படையில் இப்போதும் 27 சதவீத ஒதுக்கீட்டை எங்களுக்குத் தொடர்ந்து தர வேண்டும் என்ற தப்பான வாதத்தின் கீழ் O.B.C. சமூகம் நின்றாலும் அரசியல் ஒருங்கிணைப்பும் ஓட்டு வங்கியின் பெரிய வலிமையும் அவர்கள் பக்கம் தற்போது இருப்பதால் தட்டிக்கேட்டுத் தலையில் குட்டி, வெட்டு ஒன்று துண்டு இரண்டாக யாராலும் இவ்விஷயத்தை அணுக இயலவில்லை. சமூக நீதி, சமமான கல்வி வாய்ப்பு, ஏற்றத் தாழ்வற்ற பொருளாதார அணுகுமுறை, வர்க்க வேறுபாடு இல்லாத ஒன்றிணைந்த சமுதாயம் என்றெல்லாம் சத்தம் போட்டு சண்ட மாருதம் செய்யும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் நியாயமற்ற O.B.C. இட ஒதுக்கீடைப் பற்றி மட்டும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசத் திராணியற்றவர்களாகத் திகழ்வது அரசியல் அலங்கோலத்தின் அவலட்சண முகங்களில் ஒன்றாகும். ஏழைகளின் தோழன் என்று பேசும் இக்கட்சியினருக்குப் பிராமண ஏழைகள் மட்டும் கண்ணுக்கு தெரியாத நுண்ணிய பொருளாக விளங்குவது பாழும் அரசியல் தரும் பதவியின் பொருட்டா என்று சிந்திக்க வேண்டும். பிறப்பினால் அடையும் பெருமை எதுவும் இல்லை. கறுப்பும் சிவப்பும் மனிதர்களைப் பிரிக்கும் சுவரும் இல்லை. இருப்பவர், பொருள் இல்லாதவர் என்ற பாகுபாடு மட்டுமே உண்மையானது. திறமை உள்ளவர் அனைவரும் கல்வி வாய்ப்புப் பெறுவது அவர்களின் உரிமை என்ற தளத்தில்தான் கல்வி முறை அமையவேண்டும். வரலாற்று அடிப்படையில் சமூகத்திலிருந்து ஒதுங்கி நின்ற பழங்குடியினரும், தலித் மக்களும் மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கும், சிறப்புச் சலுகைகளுக்கும் தகுதியானவர்கள். மேற்சொன்ன சிந்தனைகளைத் தற்போது கொண்டிருக்கும் பிராமண மற்றும் அனைத்து முற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பினை முழுவதும் புரிந்துகொள்வதும் தயக்கமின்றி ஏற்றுக் கொள்வதும் ஒரு சங்கடமாக இருக்கலாம். 60 வருடங்களாக அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் உண்மை நிலையை உள்ளத்தில் இறுத்திக் கொள்வது உடனடியாக நிறைவேறும் செயல் அல்ல. "உயர்ந்தவர்கள் இல்லை நாங்கள்" என்று ஒப்புக் கொண்டாலும் "இல்லை, இல்லை" என்று எதிர்வாதம் செய்து "உயர்ந்தவர்களாகிய உங்களுக்கு ஒருபோதும் பொருளாதார இட ஒதுக்கீடு உட்பட எந்தச் சலுகையும் எப்போதும் தர முடியாது" என்ற பொருளில் இருப்பதாக இத்தீர்ப்பு எடுத்து கொள்ளப்படலாம். தலைமுறை தலைமுறையாகப் படித்துப் பட்டம் பெற்று அலை அலையாக எல்லா அரசு அலுவலகங்களிலும் நிலை கொண்டி ருப்பதாக பிராமணர்கள் மேல் குற்றம் சாட்டி அவர்களைக் கொலைகாரர்களாகச் சித்தரித்து நெடுங்காலம் போட்ட நாடகத்தின் விலையாக இத்தீர்ப்பு விளங்குகின்றதோ என நினைக்கப்படக் கூடாது என்றே நாம் கருதுகிறோம். எல்லோரும் எளிதில் கல்வி கற்கும் நல்ல சூழ்நிலை உள்ள இந்நாளில் பொல்லாத பழங்கதைகளை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லி இதுவரை இல்லாத புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாக இத்தீர்ப்பு எடுத்துக்கொள்ளப் படக்கூடாது. பிராமணர் அல்லாத, குறிப்பாக O.B.C., MBC சமூக மாணவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டு நமக்கு விடை அளிக்க வேண்டும். கல்லூரி மற்றும் உயர்கல்வி நிலையங்களில் ஒதுக்கீடு பெறும் உடனடி பலன்களைச் சற்று ஒதுக்கிவிட்டு, உள்ளத்திலிருந்து எழும் உண்மைகளின் அடிப்படையில் நாம் பெறும் விடை அமைய வேண்டும். சமூக அந்தஸ்து என்பது தன்னிடம் உள்ள பணம் காசு பகட்டின் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்பது நிச்சயம் ஆன பிறகு முற்பட்டவர்களும் பிற்பட்டவர்களும் இதில் ஜாதியைத் தூக்கிப்பிடிப்பது அர்த்தமற்றது. "செல்வந்தர்கள் எல்லாம் முற்படுத்தப்பட்டவர்கள்", "இல்லாத ஏழை மக்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள்" என்பதே சரியாகும். பொன், பொருள், போகத்திற்கு அப்பால் என்றும் உண்மைப் பொருளாக விளங்கும் வேத கல்வியைத் தன் வசம் கொண்டு தவ நெறியில் நின்ற காலம்வரை எல்லா விதத்திலும் சமூகத்தில் உயர்ந்தவர்கள் பிராமணர்கள் என்று எண்ணியதும் எடுத்துச் சொல்லியதும் ஓரளவுக்குப் பொருத்தமானதாக இருந்திருக்கலாம். தன்னலம் கருதாது அன்பு, அறிவு, ஆற்றல் இவற்றைத் தேடிச்சென்று அடைந்து பிறர் இன்னல் கண்டு பெரும் துயர் கொண்டு அவற்றைத் தீர்க்கும் நடைமுறைகளைக் கொண்டிருந்தவரை பிராமணர்கள் முற்பட்டவர்கள், முக்காலும் பாக்கியம் செய்து பிறந்தவர்கள் என்று பேசியதும் எழுதியதும் புரிந்து கொள்ளப்படலாம். உடுக்கும் உடை, உண்ணும் உணவு, படுத்து உறங்கும் இடம் எல்லாம் பிறர் எடுத்துக்காட்டி "எளிமை" என்று போற்றும் விதமாக பிராமணர்கள் வாழ்ந்தவரை உயர்குலமாக அவர்களைச் சமூகத்தில் தனித்துக் காட்டியது தவறில்லை. மாறிவிட்ட சமூகச் சூழ்நிலைகளில் தன் பண்டைய பெருமைகளை இழந்து பிறர் காரி உமிழ்ந்து நகைக்கும் கடைநிலைக்கு வந்துவிட்ட பலர் பிராமண சமூகத்தின் பெருமைக்கு இழுக்காக விளங்கும் இந்நாளில் ஜாதி அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு சமூகத் தளத்தின் உயர் நிலையில் இருப்பவர்கள் என்று சொல்வது ஒத்துக் கொள்ளக்கூடியதா? "எல்லாமே பணம், எல்லோரும் அதன் பின்னால், சொல்லாதே மற்றவை எதுவும்" என்ற இன்றையச் சூழ்நிலையில் O.B.C. இட ஒதுக்கீடு உண்மை நிலைக்குப் புறம்பானது அல்லவா. ஒவ்வொரு நகரம், கிராமம், சிற்றூர்களிலும் O.B.C. வகுப்பினர்கள் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்தில் மற்ற எவருக்கும் குறைவில்லாத எல்லோருக்கும் நிகரான நிலைகளில் இருப்பது கண்கூடு. என்றோ ஒரு நாள், சில காரணங்களுக்காக, ஒன்றாக எல்லோரும் முன்னேற வேண்டும் என்றான அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட சில சலுகைகளை எப்போதும் நிரந்தரமாகத் தம்மோடு வைத்துக்கொள்ளும் உபரிபொருள் ஒன்றாக நடைமுறைப்படுத்தபடுவது நியாயமாகுமா? பிராமணர்கள் தங்கள் சூழ்நிலை வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால திட்டங்களின் அடிப்படையில் எந்த எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களின் கடைசி புகலிடமாக, நியாயங்களின் கலங்கரை விளக்கமாகத் திகழும் உச்ச நீதிமன்றத்தின் O.B.C. இடஒதுக்கீட்டு தீர்ப்பினை முழு மனத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். கிரிமிலேயர் கூடாது என்பது மட்டுமின்றி O.B.C. இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பரிசீலனை செய்யப்பட்டு தகுந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும் உள்ளடக்கிய இந்தத் தீர்ப்புக்கு அதிகமாக எதையும் பிராமணர்கள் தற்போது எதிர்பார்க்கக் கூடாது. "சமூக நீதி" என்ற பதத்தின் பொருள் நுண்ணிய சல்லடைக்கும் அப்பாற்பட்ட மென்பொருள் ஆகும். காலதேச வர்த்தமானங்களின் தராசில் வைத்து நிறுத்தப்படும் வினோதப் பொருளாகும். அளந்து, அளந்து பார்த்தாலும் அரை குறை அளவையே காட்டும் ஆபூர்வப் பொருளாகும். நியாய தர்மங்களுக்கு மட்டும் கட்டுப்பட்டு அது வியாபித்து இருப்பதில்லை. எல்லோரும் ஓடும் பந்தயத்தில் யார் முதலிடம் வந்தார் என்று சொல்லும் விளையாட்டு வகை சார்ந்து அல்ல சமூகநீதி என்ற விஷயம். 27, 37 என்ற கணக்கு எதுவுமின்றி, இருப்பதில் ஏழை எல்லோருக்கும் சில இடங்களை ஒதுக்குங்கள் என்பதே பிராமண சமுதாயம் தற்போது முன்வைக்கும் கோரிக்கையாகும். எல்லா மேடைகளிலும் சொல்லாடல் செய்து, சுற்றியுள்ளவர்களிடம் பொல்லாத பார்ப்பனர்கள் ஒன்றும் உயர்ந்தவர்கள் இல்லை. நம்மிடம் இல்லாத சிறப்பு ஒன்றும் அவர்களிடம் இல்லை. கல்லாத நம்முடைய பிள்ளைகள் அனைவரும் அவர்களுக்கு நிகரானவர்கள்தான், என்று கதைபேசி கத்தல், இரைச்சல் செய்துவிட்டு கல்விச் சாலையில் நுழையும்போது மட்டும் இல்லை இல்லை நாங்கள் நெடுங்காலம் பின்தங்கியவர்கள், நீங்கள் எல்லாம் முற்பட்ட உயர்ஜாதி முட்டுக்கட்டைகள் என்று பிராமணர்களைச் சொல்வது எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் எமது இறுதிக் கேள்வி. |
|