பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       BT56 Brahmin Today - October 2008   பிராமின் டுடே - அக்டோபர் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites





பிரிய பிராமணச் சொந்தங்களே!

பலனை நோக்காது செய்யும் கடமை வகை சார்ந்த சென்ற மாத நம் பதிவுகள் தொடர்ந்து செல்ல வேண்டிய தூரங்களின் ஒரு பகுதியே ஆகும். எத்தனை முறை கலைத்தாலும் மீண்டும் மீண்டும் கூடு கட்டும் எட்டுக்கால் பூச்சியாகவே நாம் இவ்விஷயத்தில் இருக்க விரும்புகிறோம்.

இம்மாதத் தலைப்பாக நாம் எடுத்திருக்கும் விஷயம் எப்போதும் நம் சிந்தையில் இருந்து ஒளி வீச வேண்டிய ஒரு உன்னதத் தலைப்பு. எங்கு சென்று குடியேறி எவ்விதம் வாழ்ந்தாலும் தங்கள் குலப் பழக்க வழக்கங்களைத் தவறவிடாமல் அங்கங்கு உள்ள அனைவருக்கும் அவற்றை அறிமுகம் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் நம் அந்தணப் பெருமக்கள். பிறந்த ஊரின் பெருமையையும் பிறந்தது முதல் பின்பற்றி வந்த ஆச்சார அனுஷ்டானங்களையும் துறந்துவிடாமல் அவற்றின் துணைகொண்டு இறுதிவரை வாழ்ந்த மலேசிய பிராமணர்களின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு சிறிய முயற்சியாகவே இம்மாத முகப்புத் தலைப்பு எழுதப்பட்டுள்ளது. அன்புடன் நமக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு ஆங்கில நூலின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரை எல்லா வாசகர்களின் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம்.

இன்னல் நிறைந்த அந்த நாட்களில் இடைவிடாத முயற்சியையும் இறை நம்பிக்கையையும் கடைபிடித்து வாழ்ந்த மலேசிய பிராமணர்கள் அந்நாட்டின் அடித் தளங்களை உருவாக்கிய ஒரு முக்கியப் பிரிவினர் என்பது ஆதாரபூர்வமான வரலாறு ஆகும். எண்ணற்ற பிராமணர்கள் மிகப் பெரும் சாதனையாளர்களாக எடுத்துக்காட்டப்பட்டுள்ள அந்த ஆங்கில நூலின் ஆசிரியர் திரு. மோகன்கோபால அய்யர் அவர்களுக்கு ‘பிராமின் டுடே’ நன்றியையும் வாழ்த்தினையும் இக்கட்டுரையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறது.

மலேசியாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளின் குடியேற்ற பிராமண வரலாற்றையும் நாம் அவ்வப்போது எழுத எண்ணியுள்ளோம். இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகவல்கள் உள்ள வாசகர்கள் நம்மோடு தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் பத்தினி என்ற நிலையையும் தாண்டி ஒரு சிறந்த தவயோகினியாக விளங்கிய ஸ்ரீ சாரதா தேவி அம்மையார் ஆன்மிகச் சரித்திரத்தில் அழியா இடம்பெற்ற ஓர் உயரிய அந்தண மாது ஆவார். பரமஹம்சரின் பக்தி பயணத்தின் இறுதிப் படிக்கட்டுவரை அவருடன் பயணித்துப் பின்பு அவர் விட்டுச் சென்ற பணியினைத் தன் இறுதி நாள்வரை இன்முகத்தோடு செய்துவந்த ஸ்ரீ சாரதா தேவியைப் பற்றி நம் வாசகர் திருமதி ருக்மணி நாராயண மூர்த்தி அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையும் பிராமணர்கள் எளிமையாக வாழ வேண்டிய அவசியத்தை அனைவரும் உணரும் வண்ணம் திருமதி பாகீரதி ராமனாதன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் இம்மாதச் சிறப்பு அம்சங்களாக வெளியிடப்பட்டுள்ளது. சத்சங்க மகிமையை இம்மாதமும் தொடரும் திருமதி ஹேமாவதி அம்மாள் மற்றும் உபாகர்மாவைப் பற்றித் தொடர்ந்து எழுதி வரும் மேஜர் பி. சுப்பரமணியம் ஆகியோர் அடுத்த இதழிலும் தொடருவார்கள்.

சமீபத்தில் மறைந்த திரு. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களைப் பற்றிய ஒரு அஞ்சலி சிந்தனையைத் தூண்டும் சில கருத்துகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. வழக்கமான நம் பகுதிகளான பாரதி பக்கம், பாகவதம், அப்பய்ய தீட்ஷிதர், கைத்தலம் பற்ற, எந்தையும் தாயும் போன்ற பகுதிகளுடன் கவிஞர் க்ஷி. துரைசாமி எழுதியுள்ள ‘கலைவாணி துணை’ என்ற ஒரு கடவுள் வாழ்த்துப் பகுதியும் நம் வாசகர்களின் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம்.

மலேசியாவின் தென்னிந்திய பிராமணர்கள்






 
    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by AKR Consultants