பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       BT56 Brahmin Today - October 2008   பிராமின் டுடே - அக்டோபர் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites





நடைமுறை துறக்காத கடல் கடந்த பிராமணர்கள் - 1

மலேசியாவின் தென்னிந்திய பிராமணர்கள்

ிராமணர்களின் நற்பண்புகளும் சமூக தொண்டுகளும் மற்ற சமூகத்தினருக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன என்று மனம் வெதும்பும் நம் உடன்பிறப்புகள் மறந்த விஷயம் ஒன்று உண்டு. பொருள் தேடி புதிய இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றாலும் சென்ற இடங்களின் சூழல், சுற்றுப்புறம், இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு எதிர்மாறாக இருந்தாலும், பிராமண ஆச்சாரத்தையும் பிறந்தது முதல் பின்பற்றிவரும் வழிபாட்டு நடைமுறைகளையும் சிறிதும் விட்டுக்கொடுக்காத சாதனையாளர்களின் சரித்திரத்தை நாமே கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாமல் இருப்பதை, எவரேனும் எண்ணிப்பார்த்தது உண்டா? கடல் கடந்து சென்றாலும் காத்து நின்ற நடைமுறை நியமங்களும் புரிந்த அறச்செயல்களும் அடைந்த அறிமுகம் எதுவும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

சென்ற நூற்றாண்டுகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து வேலை நிமித்தம் தெற்காசிய நாடுகளுக்குச் சென்று குடியேறிய பிராமணர்கள், அங்கு நிலவிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தங்களைச் சரிசெய்துகொண்ட அதே வேளையில் தாங்களும் தங்கள் சந்ததியினரும் பயன் பெற்று நலமாய் வாழ்வதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், அந்த நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார முன்னேற்றங்களின் ஆணிவேராகத் திகழ்ந்தது நாம் அடியோடு மறந்த அடிச்சுவடு அல்லவா. நம்மைச் சுற்றி நடக்கும் நன்மை தீமைகளை மட்டுமே எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கும் நாம், இது போன்ற வரலாற்றுப் பக்கங்களைச் சற்றுத் திருப்பிப் பார்ப்பது பெருமையும் உவகையும் மட்டுமின்றிப் பெரும் உற்சாக உணர்வையும் ஏற்படுத்தும் என்பது உறுதி.

‘பிராமின் டுடே’ என்ற இதழ் வெளிவரும் விவரம் அறிந்து நமக்குப் பிரத்யேகமாக அனுப்பிவைக்கப்பட்ட “History and contributions of south Indian Brahmin in Malaysia” என்ற ஒரு சிறந்த ஆங்கில ஆவண நூலின் அடிப்படையிலேதான் அமைந்துள்ளது நமது இந்தக் கட்டுரை.

இந்நூலின் ஆசிரியர் திரு. மோகன் கோபால அய்யர் என்ற மலேசிய பிராமணர் நமக்கு இந்தப் புத்தகத்தை அனுப்பிவைத்து ஒரு சில வரிகள் நூல் மதிப்புரையாக ‘பிராமின் டுடே’யில் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புத்தகத்தைப் படித்து நமக்குக் கிட்டிய புத்துணர்ச்சியே இம்மாத முகப்புத் தலைப்பாக வாசகர் முன் நிற்கின்றது.

எண்ணிப்பார்க்க முடியாத, இன்றைய வேற்று சூழ்நிலையில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் சென்று நம் சமூக மதிப்பை உயர்த்திய சில மகத்தான பிராமணர்களைப் பற்றியும் அவர்கள் செய்த சில சாதனைகளையும் நம் வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதுதான் இம்மாத முகப்புத் தலைப்பின் முக்கிய நோக்கமாகும். புதிய ஒரு விஷயமாக நம் வாசகர்களின் உள்ளத்தில் புகுந்து ஓர் உத்வேகத்தை இத்தலைப்பு உருவாக்கும் என்று உளமார நம்புகிறோம்.

-ooo-

"சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காத" பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் நேரடி ஆட்சி நிலைப்பெற்றிருந்த காலம் அது. 'தற்செயலாகக் கிடைத்த பொற்காசு போல', தரணி எங்கும் வெற்றிக்கொடி நாட்டி, பல ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய ஆங்கில அரசின் ஆள் தேவை அளவற்று இருந்தது. தங்களது ஆதிக்க நாடுகளில் தாராளமாகக் கிடைத்த கனிமங்களையும் இயற்கைச் செல்வங்களையும் இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்வதற்கு, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் அதன் சார்ந்த அனேகத் துறைகளை நிறுவவும் நிர்வகிக்கவும் ஏராளமான வல்லுநர்கள் தேவைப்பட்டனர். ‘கண்ணியம், கடமை, கட்டுப்பாடு’ என்பதைக் காகிதத்தில் மட்டும் எழுதிப் பார்க்கும் கழக கண்மணிகள்போல் இல்லாது, எண்ணுவதிலும் எடுத்து முடிக்கும் எல்லாச் செயல்களிலும் உண்மை, உழைப்பு ஆகியவை மட்டுமே உறுதுணையாகக்கொண்டு உயிருள்ளவரை கடமையாற்றும் பிராமணர்களை அதிகம் விரும்பியது ஆங்கிலேயர்களின் தவறு அல்ல. தமிழ்நாட்டிலிருந்து வெகு காலத்திற்கு முன்பு இருந்தே வியாபார நிமித்தம் மலேசியா, இந்தோனேஷியா, பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்று வந்துகொண்டிருந்த வாணிபச் சமூகத்தினர் தமிழக பிராமணர்களின் குடியேற்றத்திற்கு முன்னோடியாக விளங்கினார்.

இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியா முழுவதும் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த ஆங்கில அரசு பொதுத் துறை நிறுவனங்களில் கிடைத்த வேலையின் பொருட்டு, மலேசியா வந்து சேர்ந்த தென்னிந்திய பிராமணர்கள் சில தனிச்சிறப்புகளை உடைய ஒரு விசேஷப் பிரிவாக விளங்கினார்கள். வரலாற்றின் காலச்சுவடுகளாக வரையப்பட்டுள்ள அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் குடிபெயர்ந்த நாட்டிற்குச் செய்த தொண்டு மற்ற எல்லாக் குடியேற்ற பிரிவினர்களையும்விட ஓர் உயர்ந்த இடத்தில் மலேசிய தென்னிந்திய பிராமணர்களை வைத்துள்ளது என்பது நாம் எப்போதும் மறக்கக்கூடாத பதிவு ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் சென்று குடியேறிய, தமிழ் மற்றும் தெலுங்கு மக்களும், மொரிசியஸ், பிஜி நாடுகளில் சென்று குடியேறிய பீகார், உ.பி.யை சேர்ந்த தாகூர் இனத்தவர்களும் தங்கள் மொழி, உடை பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி எல்லாக் கலாச்சார அடையாளங்களையும் இழந்து பெயரளவில் மட்டும் இந்து வம்சா வழியினராய் வாழ்ந்துவருவது கண்கூடு.

நடுத்தர வாழ்க்கை மட்டத்திலிருந்து நாடுவிட்டு வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறும் எவரும் தங்கள் தாய்நாட்டுக் கலாச் சாரத்தைப் போற்றிப் பாதுகாப்பதும் தூக்கிப்பிடித்து நடைமுறைப்படுத்துவதும் எளிதில் செய்ய முடியாத இன்னல் மிகு பெரும் செயலாகும். வேலை தரும் நிறுவனத்தினர் வெள்ளைக்காரர்களாகவும் சாலைச் சந்திப்பில் உடன் இருப்போர் மலாய் இனத்தவராகவும் விளங்கும் சூழ்நிலையில், சந்தியாவந்தனம் செய்து ஜப, தபங்களில் ஈடுபட்டுச் சிந்தையில் எப்போதும் பிராமண உணர்வைக்கொண்டிருப்பது அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு கடினமான செயல் என்பதை நாம் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

கப்பலில் வந்து இறங்கிய காலம் முதல் எப்போதாவது இந்தியா சென்று திரும்பும் ஒரு சமயம்வரை, எல்லாப் பிராமண ஆச்சாரங்களையும் தப்பாமல் மேற்கொள்வதற்குத் தடையாக இருந்த பல இடர்ப்பாடுகளைத் தகர்த்தெறிந்து மீண்டும், மீண்டும் தாய்நாட்டுப் பிராமணப் உணர்வைத் தக்க வைத்துக்கொண்ட தொடக்ககால மலேசிய பிராமணர்கள் சிலரின் வாழ்க்கை குறிப்பு நாம் என்றென்றும் ஊன்றிப் படிக்கும் வழக்குக் குறிப்பாக (case study) விளங்க வேண்டும். இந்த நோக்கத்தின் தொடர்ச்சியாக நாம் சில மலேசிய பிராமணர்களின் மகோன்னத பணிகளைக் குறிப்பிடுவதை நம் கடமையாக எண்ணுகிறோம்.

-ooo-

1954ல் தொடங்கப்பட்ட மலேசிய பிராமணச் சங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்த நூலாசிரியரின் தந்தை திரு. K.S. கோபாலஅய்யர் மற்றும் தாய் திருமதி K.S. அம்மிணி ஆகியோரது சமூக நற்பணிகளும் மலேசிய பிராமணர்களின் ஒரு மகத்தான சக்தியாக விளங்கிய A.V. சங்கர அய்யர், R. சுப்ரமணிய அய்யர், S. வரதாச்சாரி, V. நடேச அய்யர், P.K. கிருஷ்ணன், K.S. நாராயண அய்யர், V. கிருஷ்ணன், V. நாகராஜ அய்யர், S. ராமனாத அய்யர், K.K. ரங்கன், K.N.S. ஹரிஹர அய்யர் மற்றும் V.V.S. மணியன் ஆகிய அமரர்கள் அனைவரும் இந்நூலில் நினைவுக்கூரப்பட்டு அவர்களின் சாதனைகள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

குடிக்கும் நீரே ஆடம்பரப் பொருளாகக் கருதப்பட்ட அந்தக் கொடுமையான நாட்களில் அங்கு சென்று குடியேறிய இந்தப் பிராமணர்கள் சுற்றியுள்ள அனைவருக்கும் எந்தவித இன, மத, மொழி வேறுபாடின்றித் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் இன்முகத்தோடு செய்து வந்தார்கள். திருமணம் ஆகாத பிராமண இளைஞர்களுக்கு வார இறுதி நாட்களில் விருந்து வைத்து மகிழ்ந்ததோடு அல்லாமல் அங்கு நடந்த ஒவ்வொரு சமூக நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு சிறப்பித்தார்கள். Catering Service என்ற தனிப்பட்ட துறை இல்லாத அந் நாட்களில் காய்கறி அரிந்து பாத்திரம் தேய்த்து, சமையல் செய்வது உட்பட எல்லாச் செயல்களையும் சந்தோஷத்துடன் செய்துவந்த அந்நாட்களின் மலேசிய பிராமணர்கள் நம் மனதில் எப்போதும் நிற்க வேண்டிய மந்திரச் சொற்கள் ஆவார்கள்.

மலேசிய நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தங்கள் உழைப்பினாலும் நேர்மையினாலும் தனி முத்திரைப் பதித்த மலேசிய பிராமணர்கள் அந்நாட்டின் அனைத்துப் பிரதம மந்திரிகளுக்கும் உதவியாளர்களாகவும் செயலாளர்களாகவும் பணியாற்றியிருப்பது நாம் பரவசம்கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும். இந்தச் சிறப்புத் தகவலைத் தகுந்த புகைப்படங்களுடன் தொகுத்து வெளியிட்டுள்ள நூலாசிரியர் நம் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பாராட்டுதல்களுக்கு உரியவர் ஆவார்.

சில சாதனையாளர்கள்: R. சுப்பிரமணிய அய்யர் மலேசியாவின் முதல் பிரதம மந்திரி மற்றும் மலேசியாவின் தேசப்பிதா என்றழைக்கப்படும். Y.T.M. துங்கு அப்துல் ரகுமான் அவர்களின் தனி அந்தரங்கச் செயலாளராக விளங்கியவர். மலேசியாவின் முதல் ஐக்கிய நாட்டு நிரந்தர தூதர் R. ரமணி என்ற பிராமணர் ஆவார். இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உரிமை கொண்டாடி வந்த சபா என்ற தீவு மலேசியாவிற்கே சொந்தம் என்று வெற்றிகரமாக ஐ.நா சபையில் வாதாடி வென்றவர் என்ற பெருமையையும் பெற்றவர் இவர். திரு. G.K. ராமய்யர் என்ற பிராமணர்தான் மலேசிய திட்டக் கமிஷன் தலைவராக திகழ்ந்து தொடர்ந்து வெற்றிகரமான 5 ஆண்டுத் திட்டங்களை அளித்தவர்.

M.A.S. என்று அறியப்படும் மலேசியன் ஏர்வேஸ் நிறுவப்பட்டதும் M.I.S.C. என்ற கப்பல் துறை நிறுவப்பட்டதும் ராமய்யரின் முயற்சியினால்தான் என்பது குறிப்பிடத் தகுந்தது. பிரதம மந்திரி Dr. மகாதிர் முகம்மது அவர்களின் வகுப்புத் தோழனாகத் திகழ்ந்த சேஷாத்திரி மற்றும் V.S. கிருஷ்ணன். பிரதம மந்திரியுடன் சேர்ந்து பணியாற்றிய V.S. மணியம் ஆகியவர்களும் குறிப்பிடத் தகுந்த பிராமண அமரர்கள் ஆவார். இது மட்டுமின்றி மலேசிய நீதிபதிகளாகத் திகழ்ந்த Justice டத்தோ ஷங்கர் மகாதேவ், Justiceடத்தோ கோபால் ஸ்ரீராம், மாலி நாட்டின் முதல் மலேசியத் தூதர் R. வெங்கடேஷ் ஆகிய பிராமண அமரர்களும் நினைக்க வேண்டிய சில நெஞ்சங்கள் ஆவார்கள்.

மலேசிய பிராமணச் சங்கத்தின் சில அடிப்படை அங்கத்தினர்கள்:

 

திரு A.V சங்கர அய்யர் மற்றும் திருமதி சங்கர அய்யர்
மலேசிய பிராமணச் சங்கத்தை தோற்றுவித்தவர்கள்

கோட்டையம் நகருக்கு அருகில் உள்ள விளியூர் என்ற கிராமத்திலிருந்த நண்பர்களிடமிருந்து கடனாகப் பெற்ற 100 ரூபாயுடன் 1925ல் கப்பல் மூலமாக மலேசியா வந்து சேர்ந்த திரு. சங்கர அய்யர் மலேசிய பிராமணச் சங்கத்தின் மூல கர்த்தாவாகத் திகழ்கிறார். வந்து இறங்கிய சில வருடங்களிலேயே தன் முதல் மனைவியை இழந்த சங்கர அய்யர் மீண்டும் இந்தியாவிற்கு சென்று இரண்டாம் தாரமாக வாழ்நாள் முழுவதும் அவருக்குத் துணைநின்ற திருமதி தங்கம் அம்மையாரை மணந்துகொண்டு மலேசியா திரும்பினார்.

1942ல் நிகழ்ந்த ஜப்பானிய ஆக்கிரமிப்பு மற்றும் குண்டுவீச்சு சமயத்தில் A.R.P. என்ற தன்னார்வு இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய அய்யரின் வீட்டில் அனேக பிராமணர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவது வழக்கம். அவ்வாறு அங்கு வந்து சங்கர அய்யர் வீட்டில் பஜனை செய்துவந்த உச்சிக் குடுமி சுப்ரமணிய அய்யர், P.R. ராமசாமி அய்யர் போன்றவர்களுடன் அங்கு வந்துகொண்டிருந்த ராமய்யர் என்ற பிரம்மச்சாரி தெய்வ புகைப்படங்களை வைத்து பஜனை செய்து வயலின் வாசிப்பது வழக்கம். நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்து 1945ல் மரணம் அடைந்தார். அவர் விட்டுச் சென்ற தெய்வ புகைப்படங்களை வைத்துக்கொண்டு 46 முதல் 56 வரை சங்கர அய்யர் தலைமையில் ஆங்காங்கு பஜனைகள் நடந்துகொண்டிருந்தன.

சங்கர அய்யரின் கனவாக 1954இல் மலேசிய பிராமணச் சங்கம், சங்கர அய்யர் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு திறந்த வெளியில் தொடங்கப்பட்டது. பின்பு பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பல மலேசிய பிராமணர்களின் ஒத்துழைப்புடன் சங்கத்தின் தற்போதைய முகவரியான “67 இன்பிரோடு கோலாலம்பூர், மலேசியா”வில் தன் சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது. அங்கு நடந்த முதல் நிகழ்ச்சியாகத் திரு. சங்கர அய்யரின் இரண்டாவது புதல்வன் திரு. சுப்ரமணியத்தின் உபநயனம் நடந்தது.

K.S. நாராயண அய்யர்: ‘பாம்பே மாமா’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் கேரளாவில் இருந்து மலேசியா வந்து பாம்பே Life Assurance கம்பெனியில் பணியாற்றினார். திரு. A.V. சங்கர அய்யரின் வலதுகரமாகத் திகழ்ந்து பிராமணச் சங்கத்தை நிறுவியதுடன் சங்கர அய்யரின் மறைவுக்குப் பிறகு (1971) இறுதி நாள்வரை சங்கத்தின் பொறுப்புகளை ஏற்று நடத்தியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வலதுகரமாகத் திகழ்ந்து I.N.A. தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்து சுபாஷ் சந்திர போஸுடன் எப்போதும் உடன் இருந்து அவருடனே உயிர் நீத்த திரு K.A. நீலகண்ட அய்யர் என்ற தியாகச் செம்மல் இவரின் சொந்த மாமா என்பது நாம் சிந்தையில் எப்போதும் கொள்ள வேண்டிய சிறப்புச் செய்தியாகும்.

S. ராமசாமி அய்யர்: பர்மா பெட்ரோலியம் கம்பெனியின் பம்பாய் கிளையிலிருந்து கோலாம்பூர் மாற்றம் செய்யப்பட்டு அக் கம்பெனியின் உரிமை நிறுவனமான புத்ரிஸ் என்ற கம்பெனியில் தொடர்ந்து 50 ஆண்டு காலம் பணியாற்றி, தங்கப் பதக்கம் பெற்ற இவர் பிராமணச் சங்கத்துக்குப் பெரிதும் உதவிய ஒரு I.N.A. தீவரவாதி ஆவார்.

K.S. கோபால அய்யர்: நம் கட்டுரையின் மூல ஊற்றாகத் திகழும் நாம் மேலே குறிப்பிட்ட நூலின் ஆசிரியர் திரு. மோகன் கோபால அய்யர் அவர்களின் தந்தையாக விளங்கிய கோபால அய்யர் பாலக்காடு கல்பாத்தி அக்ரஹாரத்திலிருந்து வெகு காலத்திற்கு முன்பே மலேசியா வந்து அங்கிருந்த முருகன் கோவில்களில் பூஜை செய்துவந்த சகஸ்ரநாம அய்யரின் புதல்வன் ஆவார். நாட்டுக்கோட்டை செட்டியர்களால் 1893இல் நிறுவப்பட்ட அந்த கோவில்களைப் பராமரித்துவந்த திரு. கோபால அய்யரின் இளமைக் காலம் இன்னல் நிறைந்ததாகவே இருந்தது. சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த அவரின் வீட்டில் இரண்டு பசுக்கள் இருந்தன. அவற்றின் மூலம் கிடைத்த பாலுக்குப் பண்டமாற்றாக பெற்ற அரிசியும், ரேஷன் பொருட்களும்தான் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கும் அவரை நம்பி வாழ்ந்த அவரின் சகோதரியின் ஏழு குழந்தைகளுக்கும் உணவாக இருந்தது. பால்காரர்கள் அந்நாளில்பட்ட கஷ்டங்களை அனுபவபூர்வமாக உணர்ந்த கோபால அய்யர், ‘பிணாங்கு பால்காரர்கள் சங்க’த்தை அந்நாளிலேயே ஏற்படுத்திப் படிப்பறிவற்ற பல பால்காரர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார். படிப்படியாக முன்னேறி ஓரளவுக்கு வசதியாக வாழ்ந்து 1980இல் மரணம் அடையும் தருவாய் வரை சக பிராமணர்களுக்குச் சகல உதவியையும் செய்து மலேசிய பிராமணச் சங்கத்தின் ஒரு மாபெரும் சக்தியாக கோபால அய்யர் விளங்கினார்.

A. வரதாச்சாரி: இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பிறகு மலேசியா வந்து சேர்ந்த திரு. வரதாச்சாரி மட்டுமே அந்நாளைய ஒரே மலேசிய பிராமண Charted Accountant (C.A) ஆக திகழ்ந்தவர். சாரி & கம்பெனி என்ற கிபீவீt கம்பெனியைத் தொடங்கிய இவரது அலுவலகத்தில் தான் ஆரம்பகால பிராமணச் சங்க அனைத்துக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஏராளமான பிராமண இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உதவி செய்த பெருமையையும் பெற்றவர்.

R. சுப்ரமணிய அய்யர்: நெல்லை மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த இந்தக் குள்ளமான மனிதர் மலேசிய பிராமணர்களின் வரலாற்றில் உயரமான இடத்தில் இருப்பவர். மலேசியாவில் முதல் பிரதம மந்திரி துங்கு அப்துல் ரகுமானின் தனிப்பெரும் செயலராக விளங்கிய இவர் பல மலேசிய அரசுப் பதவிகளை வகித்த பிராமணர் ஆவார்.

K.K. ரங்கன்: சிறந்த கர்நாடக வித்வானாகத் திகழ்ந்த இவர் சுகுண விலாஸ் சபா என்ற நாடக அமைப்பைத் தொடங்கி அந்நாளைய வழக்கப்படி நாடகங்களில் பெண்வேடமிட்டு நடித்தவர்.


நூலின் ஆசிரியர் திரு. மோகன் கோபால அய்யர் விருது பெறுகிறார்.

1990 நடந்த ராமநவமி உற்சவம்

பிராமண சங்கம் புதிய கட்டடம்

கட்டடத்தின் உட்புறம்

K.N.S. அய்யர்: ஆந்திர பிராமணரான இவர் L.I.C. மலேசிய கிளையில் பணியாற்ற வந்து விரைவில் அதன் தலைவராக (C.E.O) உயர்ந்தவர். சமஸ்கிருத மொழியில் புலமை பெற்ற இவரும் இவரது மனைவியும் பிராமணச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவியவர்கள்.

K.N.S. ஹரிஹர அய்யர்: ஹரிஹர மாமா என்று அழைக்கப்பட்ட இவர் நீதித் துறையில் பணியாற்றிய பிராமண சபா வளர்ச்சியாளர்.

P. நாகராஜ அய்யர்: (மில் நாகராஜ அய்யர்) இந்தியன் மாவு மில்லின் உரிமையாளரான இந்த தெலுங்கு பிராமணர். அந்நாளைய பிராமணர்களின் பிரத்யேக மாவு தேவைகளை மனமுவந்து நிறைவேற்றியதோடு சங்க வளர்ச்சிக்கும் பாடுப்பட்டவர்.

A.T.K. கிருஷ்ணன்: கல்யாண கிருஷ்ணன் என்று அழைக்கப்பட்ட இவர் தியாகி நீலகண்ட அய்யரின் மகள் கமலாவைத் திருமணம் செய்துகொண்டவர். ஓய்வு காலத்தில் கோவை சென்று வசித்த இவர், ஒரு சிறந்த புத்தகப் பிரியர் Readers Digest ஆங்கில இதழின் முதல் பிரதி முதல் அனைத்து இதழ்களையும் பாதுகாத்து வைத்தவர் என்ற பெருமை பெற்றவர்.

V.V.S. மணியம்: சங்கரன் கோவிலிலிருந்து மலேசியா வந்த இந்தச் சாதனையாளர் மலேசிய பிராமணச் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய மாமனிதர். இறப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புகூட சங்க வேலையில் ஈடுபட்டிருந்த இவர் சிறியவர், பெரியவர் வேறுபாடின்றி எல்லோரையும் அணுகி எப்போதும் சங்க வளர்ச்சிக்குப் பொருள் உதவி சேர்த்தவர்.

P. கிருஷ்ணன்: பிராமணச் சங்கத்தின் பொருளாளராகத் திகழ்ந்த இவரும் இவரது மனைவி கமலாவும் அந்நாளைய பிராமணத் திருமணங்களுக்கு தங்கள் வாகனங்களைக் கொடுத்து உதவியோடு தாங்களே சென்று வீடு வீடாக அழைப்பிதழ் கொடுத்து உதவியவர்கள்.

பிற சில மலேசிய புகழ்பெற்ற மலேசிய பிராமணர்கள்

மலேசிய பிராமணச் சங்க நிறுவனங்களைத் தாண்டி மலேசியாவின் பல்வேறு துறைகளில் தங்கள் சேவைகளின் மூலம் தடம் பதித்த சில பிராமணர்களைப் பற்றியும் குறிப்பிடுவது மிகவும் அவசியம்.

மருத்துவத் துறை: டாக்டர் பரதன் ராமசாமி, ஸ்ரீனிவாசன (V.R.), டாக்டர் K. சுந்தரம், டாக்டர் K. நடராஜன், டாக்டர் G. வெங்கடேசன், டாக்டர் E.S. சிவராம கிருஷ்ணன், டத்தோ. டாக்டர் G. ஸ்ரீனிவாசன் (மலேசியாவின் தேசிய சிறுநீரக அமைப்பின் முதல் தலைவர்) டாக்டர் S. சுப்பிரமணியம், டாக்டர் ரத்தினசாமி, டாக்டர் K.R. ராமசாமி, டாக்டர் V. குமார், டாக்டர் S. திருவப்பாடு, டாக்டர் சுப்ரமணிய மஹாதேவ் (1987 வரை மலேசியாவில் ஒரே கேன்சர் டாக்டர்), டாக்டர் S. ராமன், டாக்டர் R. கிருஷ்ணன் (மலேசியாவில் முதல் pathologist) டாக்டர் S. நாராயணன், டாக்டர் H. மேனகா, புரபஸர் R. கிருஷ்ணன், டாக்டர் V. சரஸ்வதி (மலேசியாவில் முதல் பிராமண பெண் டாக்டர்) மற்றும் எண்ணற்ற பலர்.

சான்றுக்காக மட்டும் பட்டியலிடப்பட்ட மேற்சொன்ன மருத்துவத் துறை போன்றே, மலேசியா தபால் துறை, தொழிலாளர் வாரியம் P.W.D. விவசாயத் துறை, ரப்பர் ஆராய்ச்சி மையம், தபால் தந்தி துறை, மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை, சட்டத் துறை, வெளியுறவு அமைச்சகம், காவல் துறை, பிரதம மந்திரி செயலகம், கல்வித் துறை, பாதுகாப்புத் துறை, சுரங்கத்துறை, தகவல் தொடர்புத் துறை, மீன் துறை, வனத் துறை, சர்வே இலாக்கா, வருமான வரித் துறை, சிறைத் துறை, சமூக பாதுகாப்புத் துறை, கல்வித் துறை, குடியுரிமைத் துறை போன்ற ஒவ்வொரு துறையிலும் பெரும்பான்மையான சாதனையாளர்களாகத் தென்னிந்திய பிராமணர்கள் திகழ்ந்தனர்.

இவை அனைத்துக்கும் மகுடம் வைத்தாற்போல் நாம் அனைவரும் அறிந்த சிலரும் மலேசியாவைச் சார்ந்த தென்னிந்திய பிராமணர்கள்தான் என்பது குறிப்பிடத் தகுந்தது.

சுவாமி சிவானந்த சரஸ்வதி: எட்டயப் புரத்தில் பிறந்து திருச்சியில் மருத்துவம் படித்த டாக்டர். குப்புசாமி அய்யர்தான் பின்னர் சுவாமி சிவானந்தா சரஸ்வதியாக புகழ்பெற்ற ஆன்மீகர். 1913இல் மலேசியா (அந்நாள் மலேயா) சென்று அங்குள்ள மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்தவர். டாக்டர் குப்புசாமியிடம் ஒருநாள் ஒரு சாமியார் சுவாமி சச்சிதானந்தா எழுதிய ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். ஏற்கனவே ஒரு தீவிர பிராமணராக திகழ்ந்த டாக்டர் அந்நாள் முதல் ஆன்மிகத்தில் மேலும் ஈடுபட்டு 1926இல் ரிஷிகேஷ் சென்று சிவானந்த ஆசிரமத்தைத் தோற்றுவித்தார். இறுதி நாள்வரை ஆன்மீகத்தில் ஈடுபட்டு முக்தி அடைந்த இவர் துவக்கிய ‘இமய ஜோதி’ என்ற இலவச மருத்துவ சேவை அமைப்பு இன்றுவரை மலேசியாவில் செயல்பட்டு வருகிறது. ‘வினையும் வியாதியும்’ என்ற இவர் எழுதியுள்ள புத்தகத்தில் நாம் இப் பிறவியில் செய்யும் கர்மாக்களின் அடிப்படையிலேயே நமது அடுத்த பிறவி அமையும் என்று கூறியுள்ளார். பிராமணர்களுக்குக் குறிப்பாக எழுதியுள்ள ஒரு வாக்கியம் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். "காய்த்ரி ஜபம் செய்யாத, ஆச்சாரம் இல்லாத, நல்லவனைப்போல நடிக்கும் ஒரு பிராமணன் தீய எண்ணங்களை கொள்ளும்போது ஒரு நரியாக அடுத்த பிறவியில் பிறக்கிறான். அதேபோல தன் அறிவையையும் திறமையையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாத பிராமணன் அடுத்த பிறவியில் ஒரு காளையாகப் பிறக்கிறான்".

ரவிச்சந்திரன்: (திரைப்பட நடிகர்) சின்ன எம்.ஜி.ஆர் என்று பாராட்டப்பெற்ற கவர்ச்சி நடிகர் ரவிச்சந்திரன் மலேசிய பிராமணரான ஸ்ரீனிவாச அய்யங்காரின் புத்திரன் B.S. ராமன்தான் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவலாக விளங்குகிறது. P.U.C. வரை மலேசியாவில் படித்த ரவிச்சந்திரன் பிறந்து வளர்ந்த கோலாலம்பூரை விட்டு மருத்துவப் படிப்புக்காகச் சென்னை வந்தவர். ஒரு திருமணத்தில் அறிமுகமான இயக்குனர் ஸ்ரீதர் மூலம் தமிழ்த் திரையுலகின் கதா நாயகனாக விளங்கி 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்த இவரின் மகன் அம்சவர்தனும் ஒரு தற்காலத் தமிழ்த் திரைப்பட நடிகர் என்பது ஒரு கூடுதல் செய்தியாகும்.

சில பிராமண வியாபார நிறுவனங்கள்: (1) மகேஸ்வரி ரெஸ்டாரண்ட் போன்ற சில பிராமண உணவகங்கள் மலேசிய தென்னிந்திய பிராமணர்களால் தொடங்கப்பட்டு இன்று செயலிழந்துவிட்டன.

இசைத் துறை: திருச்செந்தூர் சகோதரிகள், சாமி பாகவதர், விஷ்ணு பாகவதர், வயலின் ராமலிங்க அய்யர், திருமதி பத்மாரங்கன், மிருதங்கம் ஜெகதீஷ் சர்மா போன்றவர்கள். வங்கித் துறை இன்சூரன்ஸ் போன்ற துறைகளிலும் கால்பதித்து புகழ் அடைந்த பிராமணர்கள் ஏராளம்.

PLACES IN MALAYSIA WHERE BRAHMINS LIVE/ HAD LIVED IN THE PAST

Perils
Kangar
Arau

Kedah
Kodiang
Jitra
Padang Terap
Alor Merah
Alor Star
Sungei Lallang
Baling
Sungei Petani
Kulim Padang
Serai

Penang
Kepala Batas
Bukit Mertajam
Butterworth

Georgetown
Sungei Bakap
Jawi
Prai
Nibong Tebal
Tanjung Bungah

Selangor
Batau Arang
Sabak Bernam
Batang Berjuntai
Sungei Buloh
Rawang
ShahAlam
Klang
Port Klang(Swettenham)
Banting
Serdang

Sepang
Sungei Pelek
Kajang
Semenyih
Puchong
Ampang
Rawang
Kuala Kubu Bahru
Kapar
Subang Jaya
Petaling Jaya
Seri Kembangan
Batu Caves
Gombak
Bukit Beruntung
Tanjumg Karang
Jenjarom
Carey Island
Batu Caves
Malacca
Jasin
Alor Gajah
Malacca City
Tanjung Keling
Bukit Asahan

Johore
Segamat
Kluang
Muar
Batu Pahat
Pontian
Kota Tinggi
Scudai
Labis
Layang-layang
Simpang Empat
Jementeh
Johore Bahru

முடிவுரை: ஏழாம் நூற்றாண்டு முதலே கடாரம் என்று அழைக்கப்பட்ட பர்மா மற்றும் தெற்காசிய நாடுகளுக்குச் சென்று குடிபெயர்ந்த தென்னிந்திய பிராமணர்கள் தற்போதைய மலேசிய பிராமணர் களில் முன்னோர்களாக கருதப்படுகிறார்கள். மிகத் தொன்மையான இந்தச் சரித்திரத்தின் மணி மகுடங்களாக 1980 அல்லது 90 வரை தங்கள் கலாச்சாரத்தையும் உணவுப் பழக்க வழக்கங்களையும் ஆச்சார அனுஷ்டானங்களையும் தங்களின் உயிரினும் மேலாகப் போற்றிக் காத்துவந்து அந்தப் புண்ணியவான்களின் சந்ததியினர் தற்போது வாழும் வாழ்க்கை முறை வருந்தத்தக்கதாக அமைந்துவிட்டது, நம் வருத்தத்திற்குரிய வரலாற்றுச் செய்தியாகும்.

ஆங்கில நேரடி ஆட்சியிலும் பின்பு இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் ஜப்பானிய ஆக்கிரமிப்பு, அவசர காலத்தின்போதும், தங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றி வந்த மலேசிய தென்னிந்திய பிராமணச் சமூகம் இன்று தம் மதிப்பையும் மகத்துவத்தையும் இழந்து பத்தோடு ஒன்றாகச் சத்தில்லாத வித்தாகப் பவனி வருவது பரிதாபத்திற்குரியது. ஒவ்வொரு செங்கல்லாகப் பார்த்து உணர்வோடு கட்டிய மாளிகை, ஓங்கி அடித்த சூறாவளிக் காற்றில் உரு தெரியாமல் இடிந்து வீழ்ந்ததுபோல, தாழ்வுற்று, கலாச்சாரத் தடையங்களை எல்லாம் இழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள மலேசிய பிராமணர்கள், மீண்டும் ஒருபோதும் மனம் வீச முடியாத உதிர்ந்த பூக்களாக விளங்குகிறார்கள். காசும் பணமும் கணக்கின்றித் தற்போது அவர்கள்பால் கண்டாலும் பேசுகின்ற மொழியும் பேணிக்காத்து வந்த உடை பழக்கவழக்கங்களும் நாசம் அடைந்துவிட்டன. நாதியற்று மூலையில் கிடக்கும் நல் வாத்தியமாக ஆகிவிட்டன. ஏச்சும் எதிர்வினை பேச்சும் எதிர் நின்ற காலத்திலும் முழு வீச்சில் நின்ற பிராமண அடையாளம், முடிந்து போன கதையாக, மூடிவிட்ட நூற்பாலையாக, மூழ்கிவிட்ட கப்பலாக ஆகிவிட்டன.

1953ஆம் வருடம் முதல், அடியோடு நிறுத்தப்பட்டுவிட்ட இந்தியக் குடியேற்றங்கள்தான் இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் என்பது பெருமளவுக்கு ஏற்புடையதே! தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த குடியேற்றங்களின் மூலம் அதிகரித்துக்கொண்டிருந்த பிராமணர்களின் எண்ணிக்கை ஒரு அளவில் நிறுத்தப்பட்டு, அசைவின்றிப் படுத்துவிட்டு நோயாளியைப் போல் நின்றுவிட்டது கண்கூடு. வேலை விசாப் பெற்று மலேசியா வரும் தென்னிந்திய பிராமணர்கள் மிகவும் சொற்பம் என்பது சிக்கலை மேலும் தீவிரப்படுத்துகிறது.

தங்களின் தளராத உழைப்பினாலும் தவறாத நேர்மையினாலும் மலேசிய நாட்டின் பொருளாதார, சமூக, மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்குக் கண் அயராது நின்ற தென்னிந்திய பிராமணர்களை இன்று கண்ணெடுத்துப் பார்க்க மலேசிய அரசுக்கு மனதும் சமயமும் இல்லை. தங்களுக்குள்ளும் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து நிற்கும் மலேசிய தமிழர்கள், இனித் தலையெடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதாகும். பூர்வீகப் பெருமையையும் குடிபெயர்ந்த இடத்தின் உரிமையையும் வலியுறுத்தும் வலிமையும், வாய்ப்பும் இல்லாத மலேசிய பிராமணர்களிடம் இருப்பது வெறும் டாலர் நோட்டுக்கள் மட்டுமே. தமிழ் பேசி, ஆச்சார அனுஷ்டானங்களை முடிந்தவரை அனுஷ்டித்து, உடை மற்றும் உணவுப் பழக்கங்களை இயன்றவரை கைக்கொண்டு, “நான் ஒரு பிராமணன்” என்ற உணர்வை எப்போதும் வெளிப்படுத்தும் சாதனையை அவர்கள் இனி சாதிக்க முடியாது.

மற்ற எந்த நாட்டு பிராமணர்களைவிடவும் மாபெரும் சக்தியாக விளங்கிய மலேசிய பிராமணர்கள், தங்கள் முகமூடிகளை எடுத்தெறிந்துவிட்டு இறந்த காலத்தை எதிர்காலமாக்கும் நிகழ்காலப் பணிகளில் இனிமேலாவது ஈடுபட வேண்டும். அவமதிப்பும் அலட்சியமும் அரசு காட்டினாலும், அதை எதிர்த்துப் போராடும் துணிவும் நெஞ்சுறுதியும் அவர்களின் முன்னோர்களிடம் இருந்ததை மலேசிய பிராமணர்கள் சற்றுத் தங்கள் மனதில் பதியவைக்க வேண்டும். சரித்திர நிகழ்வாக நாம் சந்திக்க நேர்ந்த அந்த உண்மைச் சம்பவத்தை இக்கட்டுரையின் முத்தாய்ப்பாக முன்வைக்க விரும்புகிறோம்.

ஆங்கில அரசு நேரடி ஆட்சி செய்துகொண்டிருந்த அந்தக் கால அலுவலகம் அது. வெள்ளைக்கார வீராப்புக்கொண்டு அந்த துரையின் கீழ் குமாஸ்தாவாக பணியாற்றிய ஸ்ரீமான் சாமி அய்யர் (இயற்பெயர் தெரியவில்லை) ஒரு சாதாரண பிராமணப் பணியாளர்தான். ஒரு கோப்பு (file) எடுத்து வருமாறு பணிக்கப்பட்ட அய்யர்வாள் சரியான கோப்பு எடுத்துவரத் தவறிவிட்டார். சரியான கோப்பு கிடைக்காத வெள்ளைக்கார எஜமானுக்கு அடக்க முடியாத கோபம் ஆர்ப்பரித்தது. “what Bugger, you have brought the wrong file” என்று கடிந்துகொண்டார் வெள்ளைக்கார துரை. Bugger என்பதை Begger என்று புரிந்துக்கொண்ட நம் அய்யர்வாள், நான் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை என்று துரையிடம் சினந்துக்கொண்டார். நான் அப்படிச் சொல்லவில்லை. “Bugger” என்றால் ‘வேலை தெரியாத மூடன்’ அவ்வளவுதான் என்று சொல்லி அமைதியானார் துரை.

வீட்டிற்கு வந்த நம் அய்யர்வாள் விடவில்லை விஷயத்தை அதோடு. டிக்ஷ்னரியை எடுத்து Bugger என்பதின் சரியான அர்த்தம் என்ன என்று பார்க்கத் தொடங்கினார். Bugger என்பதற்கு “மோசமான நடத்தை உள்ளவன். விலங்குகளுடன் சல்லாபம் செய்பவன்” என்று டிக்ஷ்னரியில் பொருள் இருந்தது.

வெகுண்டு எழுந்தார் வீரச்சிங்கம். அடுத்த நாள் அலுவலகம் போய் வெள்ளைக்கார எஜமானிடம் டிக்ஷ்னரியை எடுத்துப் பார் “Bugger என்பதின் அர்த்தத்தை”, “நான் ஒரு பிராமணன்” என்னை எப்படி நீ மோசமான நடத்தை உள்ளவன் என்று சொல்ல முடியும்” எனச் சண்டையிட்டுப் பெரும் குரல் எடுத்துப் பிரளயம் ஏற்படுத்தினார். வாய்சண்டை, கைச்சண்டையாக மாறி, வாசற்படியில் மோதிக்கொண்ட வெள்ளைக்கார துரை, வழுக்கி விழுந்து அலுவலகத்திலேயே வாயைப் பிளந்தார்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட திரு சாமி அய்யர் வக்கீல் ரமணி அய்யரின் வாதத் திறமையால் ஆயுள் தண்டனைக் கைதியாக அறிவிக்கப்பட்டார். சிறையில் அளிக்கப்பட்ட ஆச்சாரமற்ற உணவை சாப்பிட மறுத்து சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். மீண்டும் ரமணி அய்யரின் முயற்சியால் ஒரு பிராமணர் வீட்டிலிருந்து உணவு வரவழைக்கப்பட்டு சிறைத் தண்டனைத் தொடர்ந்தது. பின்னர் நிகழ்ந்த “ஜப்பானிய ஆக்கிரமிப்பின்” மூலம் விடுதலை செய்யப்பட்டு அய்யர் சுகமாக வீடு திரும்பியது இறைவன் அருளாகும்.

“தன் குலப்பெருமைக்காகக் கொலைக் குற்றமும் ஏற்ற அந்நாளைய மலேசிய பிராமணர்களை” போற்றுவது ஒட்டுமொத்த பிராமணத் தர்மத்தைப் போற்றுவதற்கு ஒப்பானது என்பதை நாம் புரிந்துக் கொள்வோமாக.

பிரிய பிராமணச் சொந்தங்களே! BRAHMINS AND UPAKARMA






 
    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by AKR Consultants