- The Magazine for Brahmins
பிரிய பிராமணச் சொந்தங்களே!
கல்விச் சிறப்பிதழாகக் கனிந்த நம் சென்ற இதழ் சிந்தனைகள் வாசகர்களால் நன்கு வரவேற்கப்பட்டாலும் அதன் தொடர்புடையச் செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் தற்போதைக்கு ஏற்படப்போவதில்லை என்பது உறுதி. வழி தெரிந்தும் வெளியே செல்ல முடியாமல் விழி பிதுங்கும் மனிதர்களாக நம் சமூகம் இவ்விஷயத்தில் இருக்கின்றது. விடவும் முடியாமல் முழுவதுமாகப் பிடிக்கவும் இயலாமல் நடுவில் மாட்டிக்கொண்டு இந்தக் கல்வி முறையால் அல்லல்படும் நமக்கு விடிவு காலம் எப்போது வரும் என்று தெரியவில்லை.
சாஸ்திரத்தை நம்புவதும் சாஸ்திரம் என்ற பெயரில் சகலத்தையும் நம்புவதும் வெவ்வேறான விஷயங்கள், வேறுபடுத்த வேண்டியவை என்பதை வலியுறுத்தும் விதமாகவே இம்மாத முகப்புத் தலைப்பு எழுதப்பட்டுள்ளது. பிராமணர்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் ஒழுக்கமான அர்த்தப்பூர்வ வாழ்க்கை வாழ்ந்து தானும் மற்றவர்களும் பயனடையும் விதமாகச் சில வழிமுறைகளும் நடைமுறைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தால் அழியாத அந்தச் சமூகக் கட்டளைகளே சாஸ்திரங்கள் ஆகும். பிறந்தது முதல் இறப்பதுவரை நாம் பின்பற்றப்பட வேண்டிய 40 சமஸ்கார தொடர்புடைய நம்பிக்கைகளைப் பற்றி நம் முகப்புத் தலைப்பு கட்டுரை எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. இடைச்செருகல்களாக நடுவில் வந்து புகுந்துவிட்ட, தற்காலத்திற்கு ஒவ்வாத ஒருதலை பட்சமான எந்த விளக்கத்திற்கும் உட்படாத சில பழக்கவழக்கங்களை மட்டுமே நாம் விட்டுவிடக் கோரி தகுந்த வாதங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இம்மாத முகப்புத் தலைப்பு.
இம்மாத spark பகுதியில் சிலர் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மூலம் ஏற்படும் தொல்லைகளை, அதன் தொடர்பாக நாம் இழக்கும் ஆச்சார நடைமுறைகளைப் பற்றியும் ஏற்பட்ட சில சிந்தனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எவர் மனதும் புண்படும்படியான ஏளனங்கள் இதன் நோக்கம் அல்ல என்பதைச் செல்லப் பிராணிகள் வளர்க்கும் நம் உடன்பிறப்புகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சாஸ்திர நம்பிக்கைகள் பற்றிய இவ்விதழில் ஆச்சாரச் சிதைவு என்னும் தலைப்பில் அருமையான ஒரு கட்டுரை எழுதியிருக்கும் திருமதி பாக்யரதி பாரம்பரிய பிடிப்புள்ள முற்போக்குச் சிந்தனையாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நம் சமூக திருமணங்களில் நாம் காணும் தற்காலத் திருப்பங்களில் ஒன்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள சட்டநாத அய்யர் கதை எங்கும் நடக்காத ஏதோ ஒரு கற்பனை அல்ல. கலப்புத் திருமணம் போன்று இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே இது எழுதப்பட்டுள்ளது.
‘பிராமின் டுடே’ ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட வடஇந்தியப் பயணக் கட்டுரைத் தொகுப்பு இம்மாதம் நிறைவு பெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் பிதாசர் என்ற ஊரில் நடைபெற்ற ஜைன மத விழாவில் கலந்துகொண்டு அங்குச் சந்தித்த பெண் துறவி ப்ரபா பிரக்யா-வைப் பற்றிய அறிமுகமும் மற்ற அரிய தகவல்களும் அடங்கிய இப்பகுதி நம் வாசகர்கள் அனைவராலும் வரவேற்கப்படும் என்று நம்புகிறோம்.
வழக்கமான நம் பகுதிகளான ஸ்ரீமத் பாகவதம், பூமாதா, பாரதி பக்கம், கைத்தலம் பற்ற, எந்தையும் தாயும் ஆகியவற்றுடன் ஒரு சிறந்த புத்தகத்தின் நூல் மதிப்புரையும் வெளியிடப்பட்டுள்ளது.
பிராமணர்களும் சாஸ்திர நம்பிக்கைகளும்
