Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT64 Brahmin Today - June 2009 பிராமின் டுடே - ஜூன் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




பிராமணர்களும் ஆச்சாரச் சிதைவுகளும்

திருமதி. சி. பாகீரதி

ஸாஸ்திர அர்த்தங்களை எடுத்துச் சொல்லி பிறரை ஆச்சாரத்தில் நிலைநிறுத்துவதோடு எவன் ஒருவன் தானே அந்த ஆச்சாரங்களை அனுஷ்டித்துக் காட்டுகிறாரோ அவரே ஆச்சார்யாள். வைதீக தர்மத்துக்குப் பல விதங்களில் உறுதி தந்து ஆதார ஸ்தம்பம் போல நிற்கிற வேத வியாச மஹரிஷி ஒருத்தர் இல்லாவிட்டால் நம் மதமே இல்லை. வேதத்தை நூலாக பகுத்தவர் வேத வ்யாசர். இவர் மஹாவிஷ்ணுவின் அம்சாவதாரம். முனிவர்களில் நான் வ்யாசர் என்று கிருஷ்ணரே கீதையில் சொல்லியிருக்கிறார். “வ்யாசாய விஷ்ணு ரூபாய வ்யாச ரூபாய விஷ்ணுவே” என்று ஸ்லோகம் கூறுகிறது. வேதத்தின் தாத்பரியமான அஹிம்சை, சத்யம், தர்மம் முதலியவை சகல ஜனங்களுக்கும் தெரிந்து கடைபிடிக்க வேண்டும் என்று மிகுந்த கருணையுடன் பதினெட்டு புராணங்களையும் ஐந்தாவது வேதம் எனப்படும் மஹாபாரதத்தையும் அனுக்கிரஹித்திருக்கிறார்.

சமீப காலம் வரையில் நம் தேசத்தில் எழுதப் படிக்கத் தெரியாத கிராம ஜனங்கள் கூடப் பொய், புனை சுருட்டு, திருட்டு, லஞ்சம், நாஸ்திகம் இவற்றுக்கு பயந்து கூடியவரையில் ஒழுக்கத்தோடு தெய்வ பக்தியோடு திருப்தியோடு வாழ்ந்ததற்குக் காரணமே வியாசர் அருளிய பகவான் ப்ரசாதமான பாரதமும் புராணங்களும்தான் என்றால் மிகையாகாது.

அநாதியான அந்த வேத தத்துவத்தை அந்த ஜோதியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இருக்கிற சேவகனாக ப்ராமணன் இருக்க வேண்டும் என்பது நமது மஹா பெரியவாளின் உள்ளக்கிடக்கை. மற்றவர்களை அதட்டிக்கொண்டு தன்னை உயர்த்திக் கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல ப்ராமண்யம். சமூகத்தின் சேவகனாகவும் வழிகாட்டியாகவும் வேத விளக்கைப் பிடித்துச் செல்லத்தான் இருக்கிறது. விளக்கை அணைத்து உலகை இருளில் மூழ்க செய்யாமலிருப்பதுதான் ப்ராமண்யம். மிகவும் ‘பழசு’ என்பதால் உயர்த்தியும் இல்லை மிகவும் ‘பழசு’ என்பதால் உதவாததும் இல்லை.

ஆச்சார தர்ம ஸாஸ்திரம் ரிஷிகளின் சொந்த அபிப்ராயங்கள் அல்ல. ஈஸ்வரனின் ஆக்ஞையால் ஏற்பட்டது வேதமும் அதன் ஆச்சாரங்களும் ‘சமயவாதிகள்’ லௌகீகத்தில் (social life) அசௌகரியங்கள் என்பதால் ஸாஸ்திரங்களைத் துறப்பது அஞ்ஞானம்.

social life என்பது ஆத்மார்த்தம் அல்ல. விஞ்ஞானம் Technology, வியாபார மாறுதல்கள், பொருளாதார யுக்திகள், புதுமை அரசியல், fashion இவையே சமூக வாழ்வு. இவை அனைத்தும் மாறுதல்களுக்கு உட்பட்டவை. லௌகீகமே சமூக வாழ்வு குறிக்கோளாக இருப்பின் சமூக வாழ்வு விதிகள் மாறலாம். ஆனால் ஸாஸ்திரங்கள் லௌகீகக் குறிக்கோள் உடையது அல்ல. மனிதன் சம்சாரத்திலிருந்து விடுபடுவதே ஸாஸ்திரங்களின் லக்ஷியம். அதற்கு அனுகூலமாக இருப்பவையே ஆச்சாரங்கள். ஆத்மார்த்த சத்தியங்கள் என்றும் மாறுவதில்லை. மாறுகின்ற சமூகத்தை அந்த மாறாத சத்தியத்தில் நிலைபடுத்துவதற்காக சாஸ்திரங்கள் விதித்த நியதிகளும் மாறாதவையே.

ஆச்சார தர்ம ஸாஸ்திர விதிகள் லௌகீக வாழ்க்கையில் அசௌகரியமாக இருக்கிறதென்பது பொருந்தாது. ஏனெனில் இது ‘இக’லோக சௌக்கிய குறைகளை அனுபவித்தாவது ‘பர’லோக சௌக்கியம் பெறுவதற்காக உபாயம் சொல்லிக் கொடுப்பது. இதில் ஆச்சார சிதைவுகளுக்கு இடம் இல்லை.

கலி முற்றிவிட்டதாலோ என்னவோ பிராமணர்களாய்ப் பிறந்த நாம் நமது கடமையை மறந்து ‘ஜீவனம்’ என்று பணத்தின் பின்னால் கண்மூடித்தனமாய்ப் பறக்கிறோம். இந்த லோகத்தில் சர்வ சகஜமாக அடிபட்டுப்போவது நமது ஆச்சாரங்கள். நமது சௌகரியத்துக்கு ஏற்ப வெட்டிக் குறைத்து, சிதைத்து, கேட்டால் என் மனசாட்சிக்குச் சரின்னு பட்டமாதிரி முடிந்ததைச் செய்கிறேன் என்று சரளமாகக் கூறுவர்.

மனசாட்சி என்று ஏன் பெயர் வந்தது?

அது சாட்சி சொல்லத்தான் யோக்யதை உடையது. நியாயாதிபதியாக இருக்க அதுக்கு யோக்யதை கிடையாது. “நெஞ்சை ஒளித்தொடு வஞ்சமில்லை” என்று அவ்வை பாட்டி பாடினாள். ஆகவே அதைச் சாட்சியாக மட்டும் வைக்கலாம். தான் நினைப்பதே சரி என்று எப்படியாவது சமாதானம் சொல்லி நிலைநாட்டிக்கொள்வதே அவரவர் மனசும் சொல்கிற முடிவாய் இருக்கும். இது தர்ம நியாயமாகாது. மனத்திற்கு ஜட்ஜ் பதவி கொடுக்கலாகாது. மனம் ஒரு தனிமனிதனைச் சேர்ந்தது. எனவே அது எவ்வளவு தூரம் அதன் சுயநலத்தை விட்டுப் பேசும் என்று கூறமுடியாது.

தனி மனசு என்கிற நிலைக்கு மேலே போய் முழுக்க லோக க்ஷேமத்தையே சொன்ன ரிஷிகளின் அபிப்ராயம்தான் ஸாஸ்திரம், தர்மம், ஆச்சார விஷயங்களில் ப்ரமாணமாகும்.

“வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என்கிற மாதிரிதான் ஆச்சாரங்களும். முழுதாகக் கடைபிடித்தால்தான் ஆச்சாரமும், பிராமணன் என்கிற பெயரும் நிலைக்கும். அரைகுறை ஆச்சாரங்கள் கடைபிடிப்பதால் அது ஆச்சாரமாகாது. பிராமணனும் ஆகமாட்டான்.

ஒரு தனிமனிதனான பிராமணனின் அபிப்ராயத்துக்கு உட்பட்டதல்ல ஆச்சாரங்கள். சிதைக்கப்பட்ட ஆச்சாரம் சிதைக்கப்படாத ஆச்சாரம் என்று பிரிக்க இயலாதது. பிறப்பினால் மட்டும் ஒருவன் பிராமணனாகமாட்டான். அவனுக்கு என்று விதிக்கப்பட்ட ந¤த்யகர்மாக்களையும் ஆச்சாரங்களையும் தவறாமல் கடைபிடித்தால்தான் பிராமணன் என்கிற யோக்யதை கிடைக்கும்.

தனது சௌகரியத்துக்கு ஏற்பவும் சோம்பேறித் தனத்துக்கு ஏற்பவும் விதிக்கப்பட்ட ஆச்சாரங்களைக் குறைத்து, சிதைத்து, அதை நியாயப்படுத்தி வாழ முற்பட்டதினால்தான் இன்று பிராமணனும் பிராமணீயமும் கேலிக்குரிய விஷயமாகி நகைச்சுவைக்கு ஏற்றப் பாத்திரங்களாகி, கூனிக் குறுகி, வேதனையுடன் வாழ்கிறோம் என்பது சத்தியம்.

-000-

A Brief in English

Smt C. Bahirathy who is well known for her strong attachment with tradition argues in this essay about the evils of discarded practices of Vedic tradition. She pleads for rigidity in keeping status quo.

மரியாதை மஹோத்ஸவம் - தொடர்ச்சி Sparks



Designed and maintained by AKR Consultants