Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT63 Brahmin Today - June 2009 பிராமின் டுடே - ஜூன் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




Sparks

ஆச்சாரங்களைக் கடுமையாகப் பின்பற்றும் ஆதிகால நடைமுறைகளிலிருந்து அடியோடு மாறிவிட்ட சமூகமாக நம்மை நாம் பல விஷயங்களில் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறோம். உண்ணும் உணவிலும் உடுக்கும் உடையிலும் நாம் கொண்டிருந்த எந்த அடையாளமும் இப்போது முழுமையாக இல்லை. உச்சிக் குடுமியும் சட்டை இல்லாத உடம்பும் கச்சம் வைத்த வேஷ்டியும் நம்மிடமிருந்து விடைபெற்றுப் பல காலம் ஆயின. ஒன்பது முழம் மடிசார் புடவையை வருடத்தில் ஒன்பது தடவைகூடக் கட்டாத நம் உடன் பிறப்புகள் நம் கலாச்சார எதிர்மறைகளில் மட்டும் காட்டும் பிடிப்பும் வேகமும் பிரமிக்கத்தக்கன. சுமாரான நடுத்தரப் பிராமணக் குடும்பங்களில்கூடக் குமரிகள் அணிவது ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என்ற நிலை மூலம் நம் கலாச்சார மாறுதல்களின் ஆழத்தைக் கணக்கெடுக்கலாம்.

அனாச்சாரங்கள் என்று கருதப்பட்ட அத்தனை விஷயங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவற்றைப் பின்பற்றி வரும் காரணங்களை நாம் ஆராய்வது பயன் தராத வீண் முயற்சி ஆகும். காலத்திற்கேற்ற தவிர்க்க முடியாத மாற்றங்கள் என்று கருதிக்கொண்டு இவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்போருடன் நாம் எதிர்வாதம் செய்ய விரும்பவில்லை. கால தேச மற்றும் தேவைகளுக்கேற்ப அனாச்சாரமாகக் கருதப்பட்ட சில நடைமுறைகள் ஆச்சாரப் பட்டியலில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாக போகலாம்.

ஆனால் எந்தக் காலத்திலும் இயலாத இடைச்செருகல்களாக நம் இடையில் வந்து புகுந்துவிட்ட சில பிராமண நாகரிகங்களைப் பற்றிய நம் சில சிந்தனைகளை வெளிப்படுத்துவது இக்கட்டுரையின் மூலம் நாம் செய்யும் முயற்சியாகும். பிராமணர்கள் செல்லப் பிராணிகளை வளர்த்ததாக எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. விளக்க நூல்களில்கூட பசுமாட்டைத் தவிர எந்தப் பிராணிகளின் தொடர்பும் பிராமணர்களுக்கு இருந்ததில்லை. ஆடு, கோழி, நாய் போன்ற பிராணிகளை வளர்ப்பது பிராமணர்களின் ஆச்சார நடைமுறை அனுமதிக்காத விஷயமாகவே ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது.

செல்லப் பிராணிகள், வளர்ப்பது பற்றிய நடைமுறையின் காரணங்கள் ஓரளவுக்கு தற்போது மாறிவிட்டன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஓலைச்சுவடியும், ஓட்டைப் பாத்திரமும் மாலைகட்ட புஷ்பங்களும் மனை முழுவதும் பழ வகைகளும் மட்டுமே இருந்த அந்தப் பழைய கால பிராமணன் வீட்டிலிருந்து திருடிக்கொண்டு போவதற்கு ஒன்றும் இருந்திருக்காது. வேதம் ஓதி வீட்டிற்குக் கொடுத்து அனுப்பும் அரசு மானியங்களில் பாதி வயிறு நிரப்பி, பசி ஆறிய ஆதி நாட்கள் கழிந்த பின்பு சில அவசியங்கள் பிராமணனுக்கு வந்து சேர்ந்தன. ஆங்கிலக் கல்வி கற்க அடியெடுத்துவைத்த ஆரம்ப நாள் முதல் அடியோடு மாறிவிட்ட வாழ்க்கைமுறையில் சில பிராமணர்களுக்குத் தங்கள் வீட்டு உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தோட்டாவுடன் வாசலில் காவல்காரனும் அத்துமீறி வருபவர்கள் ஓட்டம் பிடிக்கும்படி ஓயாமல் குரைக்கும் நாய்களும் தேவைப்பட்டன.

பாதுகாப்பிற்காகவும் பகட்டிற்காகவும் மற்ற சமூக பணக்காரர்கள் போல் நாய் வளர்க்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட பிராமணர்கள் தள்ளிவைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. ஊருக்கு ஒதுக்கு புறம் உயர்ந்த கட்டிடமாகக் கட்டிய வீட்டுக்குப் பாதுகாப்பு அவசியம் என்பது உண்மையே. வாசலில் கட்டி அதன் வயிற்றுக்கு வேண்டிய சோற்றையும் போட்டு, பாசமுடன் அந்த வாயில்லாப் பிராணியை வளர்ப்பதை நாம் குற்றம் சொல்லவில்லை. திருட்டுப் பயங்கள் உள்ள இடங்களிலும் இருட்டு நிறைந்த இரண்டுங்கெட்டான் வேளைகளிலும் எஜமான் விசுவாசத்துடன் தன் கடமையைச் செய்யும் அந்தப் பிராணியின் மேல் நமக்கு எந்தவிதக் கோபமும் இல்லை.

இந்த விஷயத்தில் நாம் விரும்பாத நடுநாயகக் கருத்து ஒன்று உள்ளது. அடுக்கு மாடிக் கட்டிடங்கள் நிறைந்த நகர்ப் பகுதிகளிலும் அடுக்கடுக்காக வீடுகள் நிறைந்த அழகான தெருக்களிலும் ஆடம்பரமாக வசிக்கும் நம் உடன்பிறப்புகள் பின்பற்றும் ஒரு நாகரிகத்தையே நாம் கண்டிக்க எண்ணுகிறோம். பொமேரியன் நாய், ஜெர்மன் ஷெபர்ட், ராஜபாளையத்து ராஜா என்றெல்லாம் பாராட்டி, சீராட்டிப் பல பெயரிட்டு வளர்த்தாலும் அடிப்படையில் இவையெல்லாம் நாய் இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவு மட்டுமே என்பதை நம்ப மறுக்கும் நம்மவர்கள் நடத்தும் சில நாடகக் காட்சிகளை எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

‘நம்புங்கள் நாராயணனை’ என்ற விதத்தில் நாம் சொல்லும் காட்சிகளை வாசகர்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று பாடிவைத்த பாரதி பாட்டிற்கேற்பத் தன் செல்லக்குட்டி, ஜிம்மி, ரிம்மி, லக்கி, டம்மி என்று ஓயாமல் அதன் பின்னால் ஓடி, நடக்கும் நம் தாத்தா பாட்டிகளை நாம் கண்டுள்ளோம். நவராத்திரி கொலுவுக்கு அழைத்துச் சுண்டல் கொடுத்துச் சுற்றி அமர்ந்து பாடும் சுந்தரிகளின் மடியில் வந்து மங்களம் பாடும் செல்ல நாய்க்குட்டிகள் உள்ள வீடுகளுக்கு நாம் சென்று வந்துள்ளோம். “ஜிம்மிக்குப் போவதற்கென்று எங்கள் வீட்டில் தனி பாத்ரூம் இருக்கிறது. அதில்தான் போகுமே தவிர அங்கங்கே காலை தூக்காது” என்று ஆர்ப்பாட்டம் செய்யும் அணங்குகளை நாம் அறிவோம். “பால் கொஞ்சம் தண்ணியாக இருந்தால் என் பையன் (நான்கு கால் பையன்) தொடமாட்டான்”. மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு ஒரு முலையில் (உண்மையில் எப்போதும் இருக்க வேண்டிய இடம்) உட்கார்ந்து விடுவான் என்பதெல்லாம் நாம் கேட்ட நாய் வளர்ப்போரின் வாசகங்கள்தாம்.

இவை எல்லாவற்றையும்விட நம் இதயத்தைப் பிளந்த சில செல்லப் பிராணிகளின் லீலைகளை நம் வாசகர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். போக வேண்டிய வயதில்தான் இறந்துபோனவரின் பிணம் இருக்கும் அறை. அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஆறாம் மாடியில் உள்ள அந்த வீட்டின் முகப்பில் 50, 60 செருப்பு ஜோடிகள் சிதறிக் கிடக்கின்றன. பண வசதிக்குப் பாதகம் இல்லாத இறந்துபோன அந்தப் பெரியவரின் பையன், வீட்டின் உள்ளே பஞ்சகச்ச வேஷ்டி சகிதம் சப்பனமிட்டுத் தரையில் வீற்றிருக்கார். பணம் சரியாகக் கொடுத்தால் பழி எதுவும் சொல்லமாட்டேன் என்ற குணமுடைய ஒரு சிரேஷ்ட வாத்தியார் அவர் எதிரில் அமர்ந்துகொண்டு அபர காரிய மந்திரங்களை அபாரமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். துக்கம் கேட்க வந்த ஒருவராக அமர்ந்திருக்கும் நம் காதுகளில் அவர் சொன்ன மந்திரங்கள் கேட்கவில்லை. திறந்துவைக்கப்பட்டிருந்த கதவின் அருகில் கட்டிவைக்கப்பட்டிருந்த அந்த வீட்டின் சுட்டிக் குழந்தை, பட்டுச்செல்லம், தொட்டுத் தொட்டு எல்லோரும் கொஞ்சும் வெள்ளை பொமேரியன் நாய்க்குட்டி இடைவிடாது குரைக்கும் சத்தம் மட்டுமே எல்லோர் செவிகளிலும் நிரம்பி வழிந்துக்கொண்டிருக்கிறது.

அப்பாவிற்காக மந்திரம் சொல்லி அவரை அடுத்த உலகத்திற்கு அனுப்பும் அந்த சமயத்தின் போதுகூட தப்பாமல் அவ்வப்போது தன் செல்லக்குட்டி ஜிம்மியின் மீது ஒரு கண் வைத்துக்கொண்டு காரியங்கள் செய்கின்ற அந்தக் காட்சி எப்போதும் நம் மனதை விட்டு அகலாது நாம் சொல்ல வந்த கருத்தின் சாட்சியாக விளங்குகிறது. மடி, தீட்டு, எச்சில், பத்து என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் மடி மீது இருத்திக்கொண்டு நாய்களைக் கொஞ்சிக் குலாவும் அவசியமும் அடிப்படையும் என்ன என்பதே நாம் எழுப்பும் கேள்வியாகும்.

பிராமண நம்பிக்கைகள் மட்டுமின்றி ஜைன மத ஆச்சார அடிப்படையிலும் செல்லப் பிராணிகளை வளர்ப்பதும் அவற்றின் ஸ்பரிசம் கொள்வதும் சாஸ்திர விரோதமாகவே கொள்ளப்படுகிறது. தங்கள் ஆடம்பரத்திற்காகவும் அந்தஸ்து மதிப்பிற்காகவும் எந்தவித அவசியமும் இல்லாமல் நாய்களையும் பூனைகளையும் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நடைமுறைகளை விமர்சிக்கும் விதமாகவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

வாயில்லா ஜீவன்களுக்கு வயிறு நிரம்ப உணவு இட்டு சேவை செய்யும் நல்ல மனதை நாம் குறை சொல்லவில்லை. திருட்டுப் பயத்திற்கும் இருட்டு நேரத்தில் எவரும் அனுமதியின்றி உள்ளே நுழைவதைத் தடுப்பதற்கும் விசுவாசமிக்க ஊழியனாக வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுவதை விமர்சனம் செய்யவில்லை. இந்த இரண்டு வித நோக்கமும் இல்லாமல் வீட்டின், இன்னும் ஓர் அங்கத்தினர் போல, எல்லாப் பகுதிகளிலும் சுற்றித் திரியும் உறவினர்போலத் தோளிலும் மடியிலும் தூக்கிக்கொண்டு உலவும் குழந்தைபோல வளர்க்கப்படும் நாய்க்குட்டிகள் நம் பழக்க வழக்கங்களுக்கு எதிரானவை. அந்த நாகரிக நடைமுறை ஏற்றுக்கொள்ளத் தகாதவை. ஆதியில் இல்லாமல் பாதியில் வந்து நம்மிடையே புகுந்துவிட்ட ஆடம்பர அனாச்சார அவசியமற்றத் தன்மை உடையவை. செல்லப் பிராணிகள் வளர்க்கும் நம் சமூக மக்கள் தம் சிந்தையில் இக் கருத்தைக் கொண்டு செயல்பட வேண்டும்.

-000-

A Brief in English

Pet Animals.

This month Sparks also deals with a sensitive subject. Pet animals are the new status symbols, apart from the other needy reasons. The writer though accepting the genuine compelling reasons to have the Dog at certain houses, see no worthwhile excuses to allow that pet animal to roam around the house, in and out as a member of the family. The shocking episode, he has witnessed in a funeral event where the pet Dog was allowed to be present and bark all the time during the chanting of Mantras is the central point of the essay. The author points out that both Brahmanism and Jainism do not approve rearing any animal except Cow. This article is written in his (editor) usual satirical punch.

பிராமணர்களும் ஆச்சாரச் சிதைவுகளும் WHY VEGETARIANISM?



Designed and maintained by AKR Consultants