Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT63 Brahmin Today - June 2009 பிராமின் டுடே - ஜூன் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்

வழக்கம்போல, எல்லோரும் போன பின்பு வாசலையே பார்த்துக்கொண்டிருந்த சட்டநாத அய்யர் அலுவலகத்தை மூடிவிட்டு ஆர அமர வீட்டுக்குப் போய்ப் படுக்கலாம் என்று கண்ணாடிக் கதவை மூடி, கை வைத்தார் ஷட்டரில். இழுத்த பின்பும் இறங்காத ஷட்டர் ‘ஓய் அய்யரே! “தம்பி, தம்பி என்று தட்டாமாலை சுற்றி வந்துவிட்டுத் தடாலடியாக ஒரு நாள் காதல் அம்பு பாய்ந்துவிட்டது. இவர்தான் காலத்திற் கும் என் ஆத்துக்காரர் என்று கதைபடிக்கும் அம்மணிகளின் கதை”யில் ஏற்படும் சில சந்தேகங்களுக்குப் பதில் சொல்லிவிட்டு என்னை இழுத்துப் பூட்டும்’ என்று சிரித்தது ஷட்டர் கதவு

-000-

“நேரம் கொஞ்சம் அதிகமானாலும் ஒன்றும் பாதகமில்லை. ஹரிஷ்தான் என்கூட வருகிறானே அப்புறமென்ன இந்த அக்காவிற்குப் பயம்” என்று அமைதியாகச் சொன்ன மாலினி கைப்பையைத் தூக்கிக்கொண்டு அவள் “தம்பி” யுடன் பைக்கில் ஏறிப் பறந்து சென்று ஒரு மணிநேரம் ஆகியும் ஒன்றும் புரியவில்லை கமலத்திற்கு. “இப்படி தம்பி தம்பி என்று அந்தப் பிள்ளையாண்டானுடன் ஊர் சுற்றுவதைப் பற்றி ஊர்க்காவலர்கள் என்ன சொல்வார்களோ? என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே வீட்டிற்குள் போய்ப் பாக்கி வைத்த வேலையைச் செய்யத் தொடங்கினாள்.

ஏதாவது சொல்வதற்கு ஊர்க்காரர்கள் என்று தனியாக ஒன்றும் வர வேண்டாம். கமலாவின் கூடப்பிறந்த அக்காவும் தங்கையும் அண்ணாவும் தம்பியும் பெற்றெடுத்த செல்லக் குழந்தைகளே போதும். படிப்பு, வேலை என்று பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் வம்பு, தும்பு விஷயங்களில் எல்லோரும் Ph.Dதான். கமலாவின் அக்கா பையன் ரமேஷ் பத்தாவதில்தான் படித்துக்கொண்டிருந்தாலும் படுசுட்டி எல்லா விஷயங்களிலும், படிப்பைத் தவிர. துப்பறியும் ஏஜென்சியில் வேலைக்குச் சேர்த்துவிட்டால் ஒரே வருஷத்தில் தலைமைப் பதவிக்கு வந்துவிடுவான். ஸ்கூல் போய்வந்த நேரம் போக மற்ற எல்லா நேரமும் அடுத்தவர்கள் வேலையை அக்கக்காக அலசி ஆராய்வதுதான் அவனது முக்கிய வேலை.

கமலாவின் அண்ணா பெண் அகிலாவிற்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. தன்னைத் தவிர மற்ற எல்லாப் பெண்களும் மோசம். தான் மட்டுமே, மெரீனாவில் லாரி இடித்துத் தள்ளிய கண்ணகி சிலைக்கு அடுத்த வாரிசு என்ற அந்த நம்பிக்கையை அவ்வப்போது சொல்லிக் கொள்வதோடு அடுத்தவர்களைப் பற்றி மட்டம்தட்டி மகிழ்ச்சியையும் உயரிய குணம் உடைய உத்தமி.

இவர்கள் மட்டுமின்றி எதிர்வீட்டு சாமா தாத்தா, (வயது 80 மட்டுமே) அடுத்த வீட்டு ஆனந்தவல்லி பாட்டி, (வாய்ச்சண்டையில் black belt) பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி, (பாலையும் விஷத்தையும் ஒரே அளவில் கலந்து பருகக் கொடுக்கும் பதிவிரதை) என்று நாலா பக்கமும் தேளும் பாம்புமாகச் சூழ்ந்திருக்கும் இந்த வீட்டில் இருந்துகொண்டு இவள் இப்படிச் செய்கிறாளே. கூடப் பிறந்த தம்பியுடன் அன்பாகப் பேசினாலே ஏடாகூடமாகப் பேசும் இவர்களுக்கு அவல் சுரங்கம் அல்லவா இந்தப் பெண் அமைத்து தருகிறாள் என்று மனதுக்குள் அங்கலாய்த்துக்கொண்டே பொங்கி வைத்த சோற்றை தட்டில் போட்டுக்கொண்ட அதே வேளையில் வாசக்கதவு மணி அடித்தது.

ஹரிஷின் அப்பா அம்மாவிற்கு பூர்வீகம் ஆந்திரா என்றாலும் 50 வருடங்களாக சென்னையில்தான் அவர்கள் இருக்கிறார்கள். ஒரே பையன் என்ற செல்லமும் சொந்தக்காரர்கள் என்று அதிகம் பக்கத்தில் இல்லாததினாலும் யாருடனும் அதிகம் அவன் பழகமாட்டான். B.Com படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கும் அவனது ஒரே பொழுதுபோக்கு கேரம் விளையாடுவது மட்டும்தான்.

வயது 22 ஆனாலும் பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக இருக்கும் ஹரிஷ் மாலினியின் ‘தம்பி’யாக மாறியது ஒரு சுவையான கதை. தாம்பரத்திற்கு ஏழு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் அந்தப் புறநகர்க் குடியிருப்பில் புதிதாக வந்து குடியேறிய சமயத்தில் மாலினிக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. ஒண்டிக் குடித்தனமாக மாம்பலத்தில் இருந்தாலும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அனைத்துப் பேரும் எல்லாத் தற்கால விஷயங்களிலும் தேர்ச்சி பெற்ற எமகாதகர்களாக இருந்தார்கள். General Knowledge, cricket, carem, chess என்று எல்லா விளையாட்டுகளும் விளையாடுவதற்கு ஏற்ற ஏராளமான friendsகள் இருந்த அந்த இடத்தை விட்டு ஏகாந்தமான இந்த இடத்திற்கு ஏண்டா வந்தோம் என்று இருந்தது மாலினிக்கு.

ஒன்றும் புரியாமல் அடுத்த தெரு வழியாக ஒருநாள் போய்க்கொண்டிருக்கும் பொழுது ஒரு வீட்டிலிருந்து வந்த டக், டக் என்ற கேரம் போர்டு சத்தம் “இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்று சொன்ன பாரதியின் வரிகளாக மாலினிக்கு இருந்தது. Exuse-me என்று கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே சென்ற மாலினியை பார்த்த அக்கணமே அம்பி ஹரிஷ் அவளின் செல்லத் தம்பியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டான். கேரம் விளையாடக் கிடைத்த தம்பி ஹரி தனக்கு பிடித்த எல்லா விஷயங்களிலும் ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருந்தது மாலினியின் அதிர்ஷ்டமே. ஓய்ந்த நேரங்களில் கேரம் விளையாடி ஓய்ந்த பிறகு சாயந்திர வேளைகளில் காலாற நடந்துபோவதும் Shopping, கோவில் என்று எல்லாப் பொது இடங்களிலும் அக்கா தம்பியாகப் பவனி வந்து அனைவரின் கவனத்தையும் ஆட்படத் தொடங்கினார்கள்.

சித்தி, சத்யம் தியேட்டரில் மாலினி அக்காவையும் ஹரிஷ் அண்ணாவையும் இன்டர்வெலலில் பார்த்தேன். ஒரே ஐஸ்கிரீமை இரண்டு பேரும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் சித்தி. நான் பேசுவதற்குள் அவர்கள் வேகமாக என்னை கடந்துபோய்விட்டார்கள் என்று சொன்ன ரமேஷ், இதே விஷயத்தைத் தன்னிடம் சொன்ன மூன்றாவது ஆள் என்பதை கமலம் யாரிடமும் சொல்லவில்லை. cake shop, ஜூஸ் கடை, மெரீனா பீச் என்று அக்காவும் தம்பியும் அடித்த லூட்டி அளவுக்கு மீறிப் போனதாகத் தோன்றியவுடன் கமலம் ஒரு முடிவுக்கு வந்தாள்.

வழக்கம்போல ஒருநாள் மோட்டார் வண்டியில் வந்து இறங்கிய பெண்ணிடம் உன் தம்பியைக் கொஞ்சம் அனுப்பிவிட்டு வா ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கோபமாகச் சொன்ன கமலாவின் வார்த்தைகளுக்கு அதிக பலனிருப்பதாக தெரியவில்லை. “என்னம்மா உனக்குத் தலைபோகிற அவசரம்” என்று 20 நிமிடம் தம்பியுடன் பேசி, அனுப்பி வைத்துவிட்டு வந்த மாலினியைப் பார்த்து “என்னடி உன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? தம்பி, தம்பி. நீ அந்த பிள்ளையாண்டானுடன் அடிக்கிற லூட்டி வர, வர எல்லையைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. நீ ஆயிரம்தான் சொன்னாலும் பார்க்கிறவர்கள் என்ன சொல்வார்கள்.” “அப்படியெல்லாம் ஒன்று இல்லை. அவன் என்னைவிட இரண்டு வயது சின்னவன் என்று ஒவ்வொருத்தரிடமும் போய் நீயும் நானும் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா?”, “நம் சொந்தக்காரர்களே போதும் நம்மைப் பற்றிப் பேசுவதற்கு. உன் பெரியம்மா பெண் ஜெயந்தி என்னிடம் மாலினியைப் பற்றி எல்லோரும் தப்பாகப் பேசுகிறார்களே சித்தி, எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே சித்தி என்று நீலி கண்ணீர் வடிக்கிறாள் ராட்சஸி”.

“எனக்கென்னவோ ஒன்றும் பிடிக்கவில்லை. உன் ஜாதகத்தை வேறு எடுத்திருக்கிறோம். பம்பாயில் இருக்கும் என் மாமாவின் பேரன் ஜாதகம் நன்றாகப் பொருந்தி இருக்கிறதாம். MNCயில் நல்ல வேலை. பார்ப்பதற்கும் நன்றாக இருப்பான். என்ன சொல்கிறாய் நீ? இதுவும் உன் தம்பியிடம் கேட்டுத்தான் முடிவு பண்ண வேண்டுமா?” என்று மூச்சுவிடாமல் பேசிவிட்டு பெண் மூஞ்சியைப் பார்க்க நினைத்த கமலத்திற்கு முன் காலியிடம்தான் இருந்தது.

இப்படி ஒவ்வொரு தடவையும் அவள் கல்யாணப் பேச்சை எடுக்கும்பொழுதெல்லாம் அம்பேல் ஆகிக்கொண்டிருந்த மாலினியை ஒருநாள் அவள் அப்பாவும் அம்மாவும் உட்கார வைத்து ஏன் இப்படிச் செய்கிறாய் என்று இரண்டில் ஒன்று எனக்குத் தெரிய வேண்டும் என்று ஏகத்திற்குச் சத்தம் போட்ட சற்று நேரத்திலேயே அவர்களின் சப்தம் நாடியும் ஒடுங்கிவிட்டதுதான் இக்கதையின் திருப்பம் ஆகும்.

“இரண்டில் ஒன்று வேண்டுமா உங்களுக்கு. இருப்பது ஒன்று மட்டும்தானே. ஹரிஷும் நானும் கல்யாணம் பண்ணிக்கொள்வதாகத் தீர்மானித்துவிட்டோம். இனிமேலும் கண்ட கண்ட ஜாதகங்களை வாங்கிக் கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.” என்று அமைதியாக அழகாக சந்தோஷமாககூடச் சொல்லிய சமர்த்துப் பெண்ணின் ஒவ்வொரு வார்த்தையும் தலையில் சம்மட்டியால் அடித்து மூளையைச் சமன் செய்து பாத்தி கட்டி, பரிகாசச் செடியைப் பதியம் வைத்தது கமலத்திற்கும் அவர் ஆத்துக்காரர் கணேசனுக்கும். நாம்தான் சுற்றுகிறோமோ இல்லை நம்மைச் சுற்றியுள்ள உலகம் சுற்றுகிறதா என்று கொஞ்ச நேரம் குழம்பி, பிறகு சுதாரித்துக்கொண்ட அவர்கள் சொன்ன முதல் வார்த்தை “பேஷ், பேஷ் ரொம்ப நன்னா இருக்கு” என்ற நரசுஸ் காப்பி விளம்பர வாசகம்தான்.

அதற்கப்புறம் அவர்கள் பேசிய வாதங்களுக்குப் பொருள் இருந்ததோ இல்லையோ பலன் எதுவும் நிச்சயம் இல்லை. “உன்னைவிட வயதில் சின்னவன், ஊர் முழுவதும் என் தம்பி, தம்பி என்று நீ சொன்னவள், நான் கேட்கும்போதெல்லாம் எங்களுக்கிடையே ஒன்றும் இல்லை, இல்லை என்று சாதித்துவிட்டுக் கடைசியில் இப்படி எங்களை சாக்கடையில் தள்ளிவிட்டாயே” என்று வைத்த ஒப்பாரிக்கும் ஓயாது பின்பு செய்த புலம்பிய புலம்பலுக்கும் பக்குவப்பட்ட அரசியல்வாதி போல நல்ல பதில் கொடுத்தாள் பொன்னரிசி.

“இங்கே பாரம்மா எதையாவது போட்டு மனதைக் குழப்பிக்கொள்ளாதே, அப்போது தம்பி என்று சொன்னது நிஜம். இப்போது ஆத்துக்காரர் என்று சொல்வதும் நிஜம். தம்பியாகத் தான் பழகினேன். அப்புறம் மனதிற்குப் பிடித்துவிட்டது. இது ஒரு தப்பா. இரண்டு வயதோ நான்கு வயதோ எங்களுக்குள் அது பிரச்சினையில்லை என்ற பிறகு ஊர்க்காரர்களைப் பற்றி எங்களுக்கு என்னம்மா கவலை” என்று முக்கியமான விஷயத்தைப் பக்குவமாகச் சொன்ன பெண்ணின் கடைசி வரியில் இருந்த அழுத்தத்தை இருவரும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்க முடியவில்லை. ஊர்க்காரர்கள் என்பதில் அவளின் அப்பாவும் அம்மாவும் அடங்குவார்கள் என்பதை அழகாகச் சொன்ன அருமைப் பெண்ணின் அதிரடி முடிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எல்லாம் ஒழுங்காக நடக்கும் கல்யாணத்திலேயே யாருக்கும் பஞ்சமில்லாத ஆவலாதிகளும் ஏளனங்களும் ஏராளமாக இருக்கும் பொழுது இந்தக் கல்யாணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? வாய் வலிக்க, வலிக்க மனது நிறைய, நிறைய வம்படித்து ஓய்ந்தார்கள் சொந்தக்காரர்களும் நண்பர்களும்.

இப்படிப் பண்ணுவாள் இந்தப் பெண் என்று நான் கனவிலும் நினைக்கவில்லையே என்று சொல்லிக்கொண்டு வேறு ஏதாவது கனவில்கூட நினைக்காத ஒன்று நடக்குமா என்ற ஆர்வத்துடன் போட்டி போட்டுக்கொண்டு குடும்ப சகிதம் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள் கல்யாணத்திற்கு. பெண் பார்த்து நிச்சயம் செய்த கல்யாணத்தில்கூடப் பார்க்க முடியாத சம்பிரதாயங்களும், பட்சணங்களும் கச்சேரி அமலி துமலி கலாட்டாக்களும் சிரிப்பும் கும்மாளமுமாக நடந்து முடிந்தது அந்த அபூர்வராகங்கள் கல்யாணம்.

நீட்டி முழக்கிய பாட்டியும் தாத்தாவும் போட்டி போட்டிக்கொண்டு ஆசீர்வாதம் செய்ததும் பின்னால், முன்னால் இடது வலது என்று எல்லாப் பக்கங்களிலும் வம்பு பேசிய பெண்ணின் அம்மாவின் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, சொந்தக்கார மகா ஜனங்களும் கட்டுச்சாதக்கூடை வரை கிட்டே இருந்து வெகு ஜோராக முடித்து வைத்தார்கள் ஹரிஷ், மாலினி திருமணத்தை.

கதையை முடித்த ஷட்டர் “ஓய், சட்டநாத அய்யரே என் மனதில் ஏற்படும் கீழ்க்கண்ட மூன்று சந்தேகங்களைத் தீர்த்துவிட்டு என்னை இழுத்துப் பூட்டும்” என்று சிரித்தது.

சந்தேகம் எண்: 1. கல்யாண விஷயங்களில் வயது வித்தியாசம் பார்ப்பது இனிமேலும் அவசியம்தானா?

சந்தேகம் எண்: 2. பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று ஒரேடியாகப் பிடிவாதம் பிடித்தால் மூன்று கால்தான் இருக்குமோ?

சந்தேகம் எண்: 3. கூட்டிக் கழித்துப் பார்த்தால் பிராமண விவாகங்களில் கடைசி முடிவு எடுப்பவர்கள் இந்தக் காலத்தில் வேலை பார்க்கும் பெண்கள்தானா?

-000-

A Brief in English

Sattanatha Iyer

The monthly, not so fiction serial brings out the various shades of our marriage system in many forms but each different with other. This month a story is told which questions the relevance of age differences in our Brahmin marriages. The Hero who is younger was treated as her younger brother till one day; the Heroine decides and announces to every body’s surprise that he will be her Husband.

WHY VEGETARIANISM? ஸ்ரீமத் பாகவதம்



Designed and maintained by AKR Consultants