- The Magazine for Brahmins
ஸ்ரீமத் பாகவதம்
அத்தியாயம் - 24ஜானகிராமன்
ரந்தித்தேவனின் உடல் பசியாலும், தாகத்தாலும் நடுங்கியது. அப்பொழுது அவனுடைய குடும்பத்தார் தங்கள் பங்கில் ஒரு பகுதியை அவனுக்கு அளித்தனர். அதைக் கண்ட அவன் சாப்பிட முற்பட்ட பொழுது பட்டினியால் வாடும் ஒரு விவசாயி வந்தான். ரந்திதேவன் மகிழ்சியுடன் தனது பங்கை அவனுக்கு அளித்தான். அந்த நேரம், நான்கு நாய்களுடன் ஒரு வேடன் வந்தான். “ஐயா! இந்த வாயில்லா ஜீவன்களும், நானும் கடும் பசியால் துன்பப்படுகிறோம். தயவுசெய்து எங்களுக்குக் கொஞ்சம் உணவளியுங்கள்” என்று வேண்டினான். ரந்திதேவனின் குடும்பத்தார் தங்கள் பங்காக வைத்திருந்த அத்தனை உணவையும், வேடனுக்கும் நாய்களுக்கும் அன்புடன் அளித்தனர். ரந்தி தேவனும் அவன் குடும்பத்தாரும் அந்த வேடனையும் நாய்களையும் அந்தப் பரமனாகவே கருதி, வணங்கி வழி அனுப்பி வைத்தனர்.
இந்த மூன்று பேரும் சென்ற பிறகு ஒரே ஒருவர் பருகுவதற்குப் போதுமான நீர் மட்டும் இருந்தது. அதை ரந்திதேவன் பருக முற்பட்டான். அப்பொழுது ஓர் புலையன் வந்து, “ஐயா! தாகத்தால் சாகும் தருவாயில் இருக்கும் எனக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுங்கள்” என்று இறைஞ்சினான். கருணையையே தன் இயல்பாகக் கொண்ட ரந்தித்தேவன் தன்னிடம் இருந்த தண்ணீரை உடனே அவனிடம் மிக்க மகிழ்ச்சியுடன் கொடுத்தான். “நான் கடவுளிடம் பொன் வேண்டேன். பொருள் வேண்டேன். பதினாறு பெரும் பேரும் வேண்டேன். ஏன் மோக்ஷத்தைக் கூட வேண்டேன். ஆனால் உடல் படைத்த ஜீவராசிகளுக்குப் பெரும் துன்பத்தைத் தருவது பசிப் பிணி. பசிப் பிணி நீங்கி உயிர்வாழ விழையும் ஒரு எளிய ஜீவனுக்கு ஜீவாதாரமான நீரையளிப்பதால் என்னுடைய பசி, தாகம், களைப்பு, தள்ளாமை, சோகம், இவை யாவும் நீங்கும் என உளமாற நம்புகிறேன்” எனவே பசியாலும், தாகத்தாலும் வாடும் ஒரு ஜீவராசிக்கு உணவும், நீரும் அளிக்கும் பாக்கியம் எனக்கு எப்பொழுதும் இருக்க வரமருள வேண்டுமென்பதே எனது பிரார்த்தனை என்றார்.
அக்கணத்தில் மும்மூர்த்திகளும் ரந்தி தேவன் முன்பு தோன்றி, “மன்னா! நாங்கள் மூவர்தான் உன்னிடம் நால்வராக வந்தோம்” என்றனர். பற்றற்றான் பற்றினைப் பற்றி வாழ்ந்து வந்த ரந்திதேவனுக்குக் கடுமையான மாயை கணப்பொழுதில் மறைந்து போயிற்று.
-000- “மன்னா! ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்கள் சில பற்றியும், உன்னுடைய முன்னோர்களின் சிலரின் சரித்திரங்களைப் பற்றியும் கூறினேன். ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் ஒன்று உயர்ந்தது. மற்றது தாழ்ந்தது என்று கிடையாது. கங்கையில் எந்தப் பகுதியும் புனித கங்கைதான். கங்கோத்ரியில் அகலம் குறைவாகவும், காசி மாநகரில் கடல் போன்று ஒரு கரையிலிருந்து மறுகரை தெரியாதபடி அகன்ற கங்கையாகவும் விளங்குகிறது. அதனால் கங்கோத்ரியில் நீராடினால் புண்ணியம் குறைவு. காசியில் நீராடினால் புண்ணியம் அதிகம் என்று கிடையாது அல்லவா? அதேபோன்றுதான் அவதாரங்களின் பெருமையும்.
மீனாக, ஆமையாக, ஏனமாக, நரசிம்மமாக, ஸ்ரீமன் நாராயணன் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக, குறுகிய காலமே எடுத்த அவதாரங்களாக இருந்தாலும், நீண்டகாலம் இருந்த ராம, கிருஷ்ணா அவதாரங்களாக இருந்தாலும் எல்லாம் ஸ்ரீமன் நாராயணனின் திருவிளையாடலே! மனித குலத்திற்கு ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மிக்க பயனுள்ளவைகளாகத் திகழ்கின்றன.
ஏனெனில் மக்கள் அவர்களை உதாரண புருஷர்களாக இனம் கண்டு, அவர்கள் காட்டிய வழியில் நடந்து, தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறார்கள். மேலும் அவர்களுடைய மகத்துவத்தையும், போதனைகளையும் பற்றிய சிந்தனை செய்து அவர் நாமத்தைப் பாடி, பேரானந்தம் பெறுகிறார்கள். இந்த இரண்டு அவதாரங்களும் மக்களின் இதயத்தில் நிலைகொண்டு, அவர்களால் போற்றப்படுகிறார்கள்.
பரீக்ஷித் மகாராஜா! ராம சரித்திரத்தை நீ பலமுறை கேட்டு அனுபவித்திருப்பாய். எனவே ராமாவதாரத்தின்பொழுது நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள் சில பற்றிக் கூறுகிறேன். ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியாக அவதரித்தக் காலத்தில் சாதாரண மனிதன் போலவே ஆசாபாசத்துடன், சுகதுக்கங்களை அனுபவித்து வாழ்ந்து வந்தான்.
ராமாவதாரத்தில் தனது தெய்வீக சக்தியை அடக்கிக்கொண்டு மக்களிடையே தானும் ஒருவனாக வாழ்ந்து மனித குலத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்பதுதான் ஸ்ரீமன் நாராயணனின் திருவுள்ளம். இதுதான் தனது குறிக்கோள் என்பதை ஸ்ரீராமரே ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார். அந்த நிகழ்ச்சியைக் கூறுகிறேன் கேள்.
இராவணனை வென்றபிறகு ஸ்ரீராமர் சீதாதேவியை அக்னிப்பிரவேசம் செய்யக் கட்டளையிட்டார். இதைக்கண்ட தேவர்கள் பதைபதைத்துப் போனார்கள். அவர்கள் ஒரே குரலில் ஸ்ரீராமரிடம் “ராமா! நீயே ஸ்ரீமன் நாராயணன், சீதா தேவியோ ஸாக்ஷாத் மகாலக்ஷ்மி! லோகமாதாவை தீக்குளிக்கப் பணிப்பது சரியா?” என்று வினவினார். அப்பொழுது ஸ்ரீராமர் “தசரதரின் மகன் மானிட ராமனாகவே என்னைக் காட்டிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
“தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்ற கோட்பாட்டிற்கு இசைய வாழ்ந்து காட்டியவர் ராமபிரான். தசரத மன்னனிடம் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்ற கைகேயி, ராமன் தன்னை வந்து பார்க்கக் கட்டளையிட்டாள். அதற்கு உட்பட்டு, தன்முன் கைகூப்பி, வாய் புதைத்து நின்ற ராமனை நோக்கி கைகேயி ‘மைந்த! உனக்கு உந்தை உரைப்பது ஓர் உரை உண்டு. அச்செய்தியை இப்பொழுது உனக்கு நான் சொல்லலாமென்றால் கூறுகிறேன்” என்றாள்.
அதற்கு ராமன் “என் தந்தை கட்டளையிட, அதை நீங்கள் சொல்வது என்றால், அது எனது தவப்பயன். இதைவிட வேறு சிறந்த பேறு உண்டா! எனக்குத் தந்தையும் தாயும் நீரே! பணிபின் அதைத் தலைமேற்கொண்டு நிற்பேன்!” என்றார்.
“ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய் தாழ் இருள் சடைகள் தாங்கி, அருந்தவம் மேற்கொண்டு, பூமி வெங்கானம் போய், புண்ணியத் துறைகள் ஆடி, பதினான்கு ஆண்டின் வா” என்றாள்.
அப்பொழுதுதான் மலர்ந்த செந்தாமரையினைப் போன்ற முகப்பொலிவுடன் விளங்கிய ராமன் “மன்னவன் கட்டளை இல்லாமல், நும் பணியாக இருந்தால்கூட மறுப்பேனா? பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றது அல்லவா? இப்பணி தலைமேல் கொண்டேன் இது உறுதி. விடை கொடுங்கள்!” என்று வணங்கினான். தனது தகப்பனாரின் சொல்லைக் காப்பாற்ற பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய முற்பட்டதினால், தனது வம்சத்திற்கு வரவிருந்த பெரும்பழியும், தசரத மன்னனின் கௌரவத்திற்கு வரவிருந்த பாதிப்பும் தடுக்கப்பட்டது.
ராமபிரான் கைகேயியுடன் வாதாடவோ, பதில் சொல்லவோ முற்படவில்லை. தனது ராஜ்யத்தைத் துறந்து உடனடியாகக் காட்டுக்குப் புறப்பட்டார். சொல்லிற்கேற்ற செயலும், செயலுக்கு இயைந்த சொல்லும் ராமனின் பண்பாக விளங்கியது.
(தொடரும்)
சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்
பூமாதா
