- The Magazine for Brahmins
பாரதி பக்கம்
துரியோதனன் பதில்
தந்தை யிஃது மொழிந்திடல் கேட்டே
தாரி சைந்த நெடுவரைத் தோளான்,
எந்தை, நின்னொடு வாதிடல் வேண்டேன்
என்று பன்முறை கூறியுங் கேளாய்;
வந்த காரியங் கேட்டி; மற் றாங்குன்
வார்த்தை யின்றியப் பாண்டவர் வாரார்;
இந்த வார்த்தை யுரைத்து விடாயேல்,
இங்கு நின்முனென் னாவி யிறுப்பேன்.
‘மதித மக்கென் றிலாதவர் கோடி
வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியுஞ் சாத்திரத் துள்ளுறை காணார்,
பானைத் தேனி லகப்பையைப் போல்வார்;
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்
சுருதி யாமெனக் கொண்டனை நீதான்;
அதிக மோக மவனுளங் கொண்டான்
ஐவர் மீதிலிங் கெம்மை வெறுப்பான்.
‘தலைவ னாங்கு பிறர்கையிற் பொம்மை;
சார்ந்து நிற்பவர்க் குய்ந்நெறி யுண்டோ?
உலைவ லால், திரிதாட்டிர வர்க்கத்
துள்ள வர்க்கு நலமென்ப தில்லை;
நிலையி லாதன செல்வமு மாண்பும்
நித்தந் தேடி வருந்த லிலாமே
“விலையி லாநிதி கொண்டனம்” என்றே
மெய்கு ழைந்து துயில்பவர் மூடர்.
‘பழைய வானிதி போதுமென் றெண்ணிப்
பாங்கு காத்திடு மன்னவர் வாழ்வை
விழைவு மன்னிய ரோர்கணத் துற்றே
வென்ற ழிக்கும் விதியறி யாயோ?
குழைத லென்பது மன்னவக் கில்லை;
கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும்
பிழையொன் றேயர சர்க்குண்டு, கண்டாய்;
பிறரைத் தாழ்த்து வதிற்சலிப் பெய்தல்.
