- The Magazine for Brahmins
பிரிய பிராமணச் சொந்தங்களே!
"எங்கே பிராமணன்" என்ற தொடரின் தொடர்பாக எழுந்த விமர்சன விளக்கங்களை தங்கு தடையின்றி நாம் வெளியிடுவதன் நோக்கம், இவ்விஷயத்தில் நம் பங்காக இவை இருந்து எல்லோருக்கும் இசைவான ஒரு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்ற விருப்பதினால்தான் என்பது உறுதி. நம் இதழ் தரம் குன்றாமல் இத்தலைப்பில் எழுதப்படும் அனைத்து கருத்துகளையும் தொடந்து வெளியிட சித்தமாய் இருக்கிறோம்.
ஆச்சாரம் என்ற கொடியில் பூத்த பிராமண வாழ்க்கை முறை, வாடா மலராக வாசம் வீசிய அந்த நாள் அகன்று கேலிக்கும் நக்கலுக்கும் உரியதாக மாறிவிட்ட ஆச்சார அனுஷ்ட்டானங்க்களைப் பற்றி இம்மாத முகப்பு தலைப்பு அமைந்திருக்கிறது. போலிகளே வேலிகளாக விளங்கும் இன்றைய இளைஞர் சமூகத்திற்கு இதுப் பற்றி சிறிது எடுத்து சொல்வது மிகவும் அவசியம். வேஷ்ட்டி அணிந்து வெளியே வருவதற்கு வெட்கப்படும் அந்த கூட்டதிற்கு அதன் அடிப்படை காரண காரியத்தை விளக்குவதன் மூலமே விளக்கம் கிடைக்கும். ஒழுக்கம் என்ற நற்பண்பு அனுஷ்ட்டான நடைமுறைகளால் பழுத்து பலன் தருவதை அவர்கள் உணர்ந்துகொள்வது மிக முக்கியம். இத்தலைப்பின் முதல் பகுதியாக விளங்கும் இதன் அடுத்த பகுதிகள் பின்னர் வெளிவர இருக்கிறது.
பரிகாரச் செயல்களைப் பட்டியலிட்டிருக்கும் திரு கிருஷ்ணசுவாமியின் கட்டுரையின் சாராம்சம் ஓர் உயர் நோக்கம் சார்ந்ததாகும். செய்த பாபத்தின் விளைவை அனுபவித்தே தீரவேண்டும் என்றாலும் சுட்டெரிக்கும் வெய்யிலில் உடன் இருக்கும் குடையாக இப்பரிகாரங்கள் துணைபுரியும்.
வைஷ்ணவ ஆச்சாரியர்கள் பற்றிய கட்டுரைகள் நம் இதழில் அதிகம் வெளியிடப்படுவதில்லை என்ற குறையைத் தீர்க்கும் விதமாக திருமதி ஹேமாவதி அவர்களின் கட்டுரைத்தொடர் விளங்கும்.
வெகு சீக்கிரமே மிகுதியான வாசகர்களை பெற்றுள்ள ஹைதராபாத் பிராமணர்களின் சமாஜம் பற்றியக் கட்டுரை பிராமிண் டுடே ஹைதராபாத் பிரிவின் சார்பாக வெளியிடப் படுவது மிகவும் பொருத்தமே.
க்ருஷ்ண க்ருபயாம் குரு பிராப்தம் என்ற தலைப்பில் கும்பகோணம் ப்ரஹ்ம ஸ்ரீ வெங்கடராம கனபாடிகள் நமக்குக் குறிப்பிட்டுக் காட்டிய கருத்துகள் நாம் என்றென்றும் சிந்தையில்கொள்ளத்தக்க வாழ்வியல் முத்துகள். குருவின் பெருமை எப்பொழுது யார்யார்வாய் கேட்பினும் அப்பொழுதும் சிறிது அறிந்துகொள்ள எஞ்சியிருக்கும் விஷயமாகும்.
மத்திய பிரதேச மஹா அனுபவங்களாக நாம் தொடங்கியிருக்கும் தொடரின் அடுத்த பகுதியில் உஜ்ஜையின் மற்றும் ஓம்காரேஷ்வர் புனிதத் தலங்களுக்கு நாம் சென்றுவந்ததின் அடிப்படையில் எழுந்த சில சிந்தனைகளையும் மத்திய பிரதேச மாநிலத்தில் பிராமணர்கள் பெற்றிருக்கும் சமூக வாழ்க்கை நிலைப் பற்றியும் குறிப்பிடப்படவுள்ளது. மேலும் ALMA பெருவிழாவில் மணிசங்கர அய்யர் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் கருத்து சாராம்சங்களும் இப்பகுதியில் இடம் பெறவுள்ளது.
வழக்கமான நம் பகுதிகளான பாரதி பக்கம், பாகவதம், எந்தையும் தாயும், Sparks, சாம வேத ஆங்கிலத்தொடர் ஆகியவற்றுடன் திரு சுவாமிநாதன் சென்ற இதழ் முகப்பு தலைப்பின் முத்தாய்ப்பாக எழுதியிருக்கும் ஆங்கில எதிர்வினை எல்லோரது பாரட்டையும் பெறும் என்று நம்புகிறோம்.
