- The Magazine for Brahmins
பிராமணர்களும் ஆச்சாரங்களும்
சென்ற சில நம் இதழ்கள் வாயிலாக எங்கே பிராமணன் எனச் சிலரும் இதோ இங்கே எனச் சிலரும் விவாதிக்கும் விஷயத்தின் மையப்பொருளாக விளங்குவது பிராமண ஆச்சார அம்சங்களே.
இத்தருணத்தில் இதைப்பற்றிய நம் சிந்தனைகள் சிலவற்றை வெளிப்படுத்த விரும்புகிறோம். முகப்புத் தலைப்பின் மூலம் நாம் கூறும் இக்கருத்துகள் முன்னோர்கள் பலர் முன் மொழிந்த உண்மைகளே என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
ஆச்சாரம் என்ற சொல் தன் அடிப்படைப் பொருளை இழந்து அநாகரிகம் என்ற அர்த்தத்தில் விளங்கும் தற்காலத்தில் இது பற்றி இன்றைய இளைஞர்கள் எண்ணுவது, கட்டுப்பெட்டித்தனம் நிறைந்த பட்டிகாட்டு பழக்கங்கள், காலத்திற்கு ஒவ்வாத கர்னாடக உடை வேஷங்கள், பெட்டிப் பாம்பாய் வீட்டில் அடங்கி கட்டிக்கொள்ளும் மத நடைமுறைகள் ஆகியவை மட்டுமே.
பார்த்த சிலரும் பழகிய சிலரும் சேர்த்த பதிவின் காரணத்தாலும் தூர்த்து தொலைந்து போன நம் தூய அக்ரஹார நடைமுறை நஷ்டங்களினாலும் இம்மாதிரி எதிர்மறை உருவாக்கம் உண்டானது தவிர்க்க இயலாத தவறாக நிலைப்பெற்றுவிட்டது.
ஆச்சாரம் என்பதன் பொருள் ஒழுக்கம். ஒழுகுதல் அல்லது பின்பற்றுதல் என்ற மூலச் சொல்லின் கிளைச் சொல்லான ஆச்சாரம் எனப்படுவது ஒழுக்கமாக இருப்பது அன்றி மற்றில்லை.
நன்னடத்தை, நல்ல வாக்கு, நலம் தரும் எளிய உடை, நல்ல சிந்தனை ஆகிய எல்லா நல்லவற்றின் செயல் வடிவமே ஆச்சார வாழ்க்கை.
ஆச்சாரத்தைப் பின்பற்றி வாழ்பவர்களே ஆச்சாரியர்கள் எனும் குரு அல்லது வழிகாட்டிகள்.
ஆச்சாரம் என்ற நடைமுறை அனுஷ்ட்டானம் மற்றும் ஆக்காரம் ஆகிய இரண்டு பகுதியின் சங்கமமாகும். வெவ்வேறான இவ்விரண்டும் இணைந்து பின்பற்றப்படுவதன் மூலமே ஒரு முழுமையான ஆச்சார நடைமுறை அரங்கேறுகிறது.
அனுஷ்ட்டானம்: தினசரி ஒரு பிராமணன் அனுஷ்ட்டிக்க அல்லது நடந்துகொள்ள வேண்டிய சட்ட திட்ட சம்பிரதாய தொகுப்பே அனுஷ்ட்டானமாகும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கு மட்டுமின்றி தன்னைச் சார்ந்த உலக மக்களின் நல் வாழ்விற்கும் மன அமைதிக்கும் ஏற்ற எல்லாச் செயல்களையும் எப்படிச் செய்ய வேண்டும் என எழுதி வைக்கப்பட்டுள்ள இந்த ஸ்ம்ஸ்கார பட்டியலை முழுமையாகக் கடைப்பிடிப்பதே பிராமண தர்மமாகும். அவனது கடைமையும் ஆகும்
கற்பதும் கற்றதை மற்றவர்க்கு எடுத்துச் சொல்வதும் வேள்விகள் செய்வதும் செய்விப்பதும் தன் சுய நலன் கருதாது தன் சமூக, தேச சேவை செய்வதும் இவ்வித அனுஷ்ட்டான அட்டவணையின் அம்சங்களாகும்
ஆக்காரம்: எடுத்துச் சொல்லும் உயரிய கருத்துகளைப் பிறர் செவி மடுத்துக் கேட்பது நாம் உடுத்தும் உடையால் எளிதாகிறது. படித்த பல வரலாறு நமக்கு இதைத் தெளிவாக்குகிறது. வெண்தாடி வேந்தர்கள் என நாம் போற்றும் பலர் அவர்கள் அணிந்த ஆடையின் மூலமும் புகழ் பெற்றார்கள். காவி உடை அணிந்து காட்டும் அருள் பார்வை வேறு உடை அணிந்தால் தாவி தவறாக மாறிவிடும்.
பிராமணத்தோற்றமே ஆக்காரம். அவன் உடுக்கும் உடை, அணியும் திரு நீறு, கடைப்பிடிக்கும் எளிமை, ஆகிய எல்லாமாக இருக்கும் இந்த ஆக்காரம், அனுஷ்ட்டான பின்பற்றுதலின் உந்துதலாக விளங்குகிறது. ‘வெளிவேஷம்’ எனத் தற்போது மற்றவர்களால் களியாக்கப்பட்டாலும் அவை அளித்த பயன்பாட்டின் முக்கியத்துவம் உணரத்தக்கது.
காந்தி மஹான், “அரை நிர்வாணப் பக்கிரி”யான பிறகே சாந்தி வழியில் சுதந்திரம் கண்ட சாதனை படைக்க முடிந்தது. நரந்தேர தத்தா தலையில் ‘தலைப்பாகை’ ஏறிய பிறகே அவர் சுவாமி விவேகானந்தர் ஆக முடிந்தது. எதையும் இழிவாகப் பேசி ஏளனப் படுத்தும் பகுத்தறிவு பட்டாக்கத்திகள் கூட உதையும் அடியும் கொடுத்து ஊரைக் கூட்டும் உத்திகளில் ஒன்றாகக் கருஞ்சட்டை அணிவதையும் அணிவிப்பதையும் ஏற்றுக் கொண்டிருப்பது ஆக்கார அவசியத்தை உறுதிப்படுத்துகிறது.
இதன் பெருமை உணராமலேயே இந்நாள்வரை காத்துவந்த ஆக்கார அம்சங்களை நாம் இனிமேலும் காப்பாற்றி கடைப்பிடிக்க வேண்டும். மாறி வரும் கால கட்டாயங்களால் சில அனுஷ்ட்டான மாறுதல்களுக்கு நாம் உட்பட்டாலும் ஆக்கார பின்பற்றுதலில் முடிந்தவரை அசையாமல் இருக்க வேண்டும்.
இக்கருத்தை வலியுறுத்தும் கன்னடப் பழமொழி ஒன்று உண்டு.
"ஆச்சாரா கேடூரூ, ஆக்காரா கேடூ டே". அனுஷ்டானம் குன்றினாலும் பின்னர் நம் முயற்சியால் மீண்டும் திரும்பப் பெறலாம். ஆனால் ஆக்காரம் எனும் ஆடை வடிவங்கள் அழிந்து போனால் ஒருபோதும் அவை உயிர் பெறுவதில்லை.
பொருளாதாரத்தில் முதன்மை அடைந்து உலகின் முன்மாதிரியாகத் திகழும் ஜப்பான் மற்றும் சீன நாட்டின் உயர் குடி மக்கள், தாங்கள் காத்துவந்த விசேஷ உடை ஆக்காராம் காற்றோடு கலந்து இன்று முகம் தெரியா எத்தனையோ ஆலைத் தொழிலாளிகளின் அரைக்கை சட்டையும் டிரவுசரும் மட்டுமே அணியும் அவல நிலை ஆக்கார அவசியத்தைத் தெளிவுபடுத்துகிறது.
ஆச்சார அம்சங்களான அனுஷ்டானத்தையும் ஆக்காரத்தையும் அனுசரிக்க வேண்டும் என்ற நம் கருத்தின் பொருள் மாற்றங்களுக்கு மதிப்பளிக்கக் கூடாது என்பதல்ல. இன்றைய நவீன உலகின் புதிய உடை, உணவு, பழக்கவழக்கங்களையும் சிந்தனை மாற்றங்களையும் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. வேதங்களுக்கே பாஷ்யம் எழுதிய பிராமண குலம் எல்லா கருத்துகளுக்கும் இடம்தந்து தன்னில் இனைத்துக்கொண்டது நாம் மறக்காத வரலாற்றுப் பதிவே ஆகும்.
எதுவும் எங்கிருந்து வந்தாலும் அது பிராமண அடிப்படைக்கு உகந்ததாய் இருக்கும்வரை வரவேற்கப்பட வேண்டும்.
ஆச்சாரம் என்றால் அலட்சியமாக எண்ணியும் எழுதியும் வரும் சிலரின் சிந்தனைக் கதவுகளை திறந்து, அவற்றின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் விதமாகவே இக்கட்டுரை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
பிராமண உடையின் பெருமையையும் முக்கியத் துவத்தையும் நம் சமூக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் புரிந்துகொள்ளும் நோக்கத்திலேயே இவை உள் வாங்கி கொள்ளப்பட வேண்டுமே அன்றி புதுமைக்கு எதிராக அல்ல.
இதுகாறும் நடந்துவந்த பாதையின் மேல் நாம் பெருமிதம் கொள்வது, இனி நாம் செல்லும் சரியான பாதையைக் காட்ட உதவும்.
பிரிய பிராமணச் சொந்தங்களே!
Brahmins and Aachaarams
