Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT68 Brahmin Today - October 2009 பிராமின் டுடே - அக்டோபர் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




பாபங்களைப் போக்கும் மார்க்கம்

- பலராமர் வழிகாட்டி

வாழ்க்கையில் நாம் தெரிந்தோ தெரியாமலோ பலவித பாபங்களைச் செய்திருக்கலாம். செய்த பாபங்களுக்கேற்ப நமக்குத் தண்டனை உண்டு என்பது நிச்சயம். யாராயிருந்தாலும் அவரவர் கர்ம பலனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பாபம் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பமுடியாது. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது ஆன்றோர் வாக்கு.

சரி, பாபங்களைப் போக்க என்ன வழி? செய்துவிட்ட பாபங்களால் பெறப்போகும் தண்டனைகளைத் தவிர்க்கவோ, அவற்றிலிருந்து தப்பிக்கவோ, அல்லது தண்டனைகளை வெகுவாகக் குறைக்கவோ, என்ன வழி? இதற்கு விமோசனம் உண்டா?

“இருக்கிறது” என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏன்! இதிஹாஸ புராணங்களும் தெரிவிக்கின்றன.

பாரிகாரங்கள் செய்வது, க்ஷேத்திராடனம் மற்றும் தீர்த்த யாத்திரை மேற்கொள்வது, பிராயச்சித்தம் செய்வது, தான தர்மங்கள் செய்வது, தெய்வங்களைப் பூஜித்துப் பிரார்த்திருப்பது, பித்ரு கார்யங்களைச் சிரத்தையாகச் செய்து அவர்களின் சாபத்தைப் போக்கி, ப்ரீதி செய்வது, ஸத்ஸங்கத்திலேயே இருப்பது, நாம ஸங்கீர்த்தனம் செய்வது, ஸந்தியாவந்தனம் மற்றும் ஜப, தப, த்யானம் செய்வது, ஆத்ம ஞானத்தைப் பெறுவது என அநேக வழிகள் இருக்கின்றன.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதார புருஷரான ஸ்ரீ பலராமரே தனது தோஷங்களையும் பாபங்களையும் போக்கிக்கொள்ள தான தர்மங்களும், க்ஷேத்திராடனமும், தீர்த்த யாத்திரையும், ஆங்காங்கேயுள்ள பற்பல தெய்வங்களின் தரிசனமும், செய்யவேண்டிய ஸ்தலங்களில் பித்ரு கர்மாக்களும் செய்தாரென்றும், விரதங்களை அனுஷ்டித்தாரென்றும் “ஸ்ரீமத் பாகவதம்” தசமஸ்கந்தம், 78-79ஆம் அத்யாயங்களில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதைப் பார்ப்போம்.

ஒரு சமயம் ‘நைமிஷம்’ என்ற க்ஷேத்திரத்தில், தவச்ரேஷ்டர்கள் ‘ஸத்ரயாகம்’ செய்து கொண்டிருந்தபொழுது, ஸ்ரீ பலராமர் அங்கு விஜயம் செய்தார். அவர் யாக சாலைக்குள் நுழைந்ததும் அனைத்து முனிவர்களும் எழுந்து நின்று ஸ்ரீ பலராமரைக் கைகூப்பி வரவேற்று வணங்கி மரியாதை செய்தனர். ஆனால் வியாசரின் சிஷ்யரான ‘ரோமஹர்ஷணர்’ மட்டும் தனது இருப்பிடத்தைவிட்டு எழுந்திருக்காமல் வாளாவிருந்தார். அவர், தன்னைச் சிறிதும் மதிக்காமல் அமர்ந்திருந்ததைக் கண்டு கோபமுற்ற பலராமர் சற்றும் சிந்திக்காமல் அந்த ரிஷியைக் கொன்றுவிட்டார்.

ரோமஹர்ஷணருக்கு நேர்ந்த கதியைக் கண்டு அதிர்ச்சியுற்ற முனிவர்கள் பெரிதும் வருந்தி, ஸ்ரீ பலராமரைப் பார்த்து “ஹே ப்ரேபோ! எவராலும் ஏவப்படாமல் தாங்களாகவே இந்த அதர்மத்தைச் செய்யலாமா? எங்களால் யாகத்திற்கு நியமிக்கப்பட்ட இந்த ரிஷியைக் கொன்றதால் தங்களுக்கு விளைந்த ப்ரம்மஹத்தி தோஷத்திற்குத் தாங்கள் பிராயச்சித்தம் செய்தே தீரவேண்டும்,” என்று கூறியதும், பலராமரும் தன் தவறை உணர்ந்து “ரிஷிகளே! ஆத்திரத்தில் நிதானமிழந்து இந்த ரிஷியை நான் கொன்றுவிட்ட செயலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். இதனால் ஏற்பட்ட பாபத்தைப் போக்கிக்கொள்ள நான் என்னென்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமோ அவற்றைக் கூறுங்கள். அவற்றையெல்லாம் எனது யோக மாயையால் செய்துவிடுகிறேன். மேலும், இறந்துவிட்ட இந்த ரிஷியின் புத்திரனை தீர்க்க ஆயுள் உள்ளவனாகவும், பலசாலியாகவும் இருக்கும்படி செய்கிறேன்” என்றார்.

முனிவர்கள் “ஹே பலராமா! பல்வலன் என்கிற கொடிய அசுரன் நாங்கள் யாகம் செய்யும் சமயம் யாக குண்டத்தில் மலம், மூத்திரம், மாமிசம் முதலான அசுத்தங்களைப் போட்டு யாகத்தைக் கெடுக்கிறான். நீர் செய்யும் உபகாரமாக, முதலில் அந்தப் பாபியை வதம் செய்யுங்கள். அதன் பின் இந்தப் பாரத தேசத்தைப் பிரதட்சிணமாகச் சென்று, ஆங்காங்கேயுள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, அர்ச்சா மூர்த்திகளைத் தரிசித்து, பன்னிரண்டு மாதங்கள் விரதம் அனுஷ்டித்துப் பாபங்களைப் போக்கித் தங்களைச் சுத்தனாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

பர்வகாலம் வந்தபோது, முனிவர்கள் யாகத்தைச் செய்து கொண்டிருந்தனர். அதைக் கெடுக்க வந்த பல்வலனைப் பலராமர் தன் கலப்பையால் இழுத்து, அவனது நெற்றியில் உலக்கையாலடித்து உயிர் துறக்கச் செய்தார். அதனால் பங்கமின்றி யாகம் செவ்வனே நடந்தது. மனமகிழ்ந்த முனிவர்கள் பலராமரக்கு வைஜயந்திமாலையும் வஸ்திரமும் ஆபரணங்களும் அளித்து ஆசீர்வதித்தனர். மாமுனிவர்களின் உபதேசப்படி ஸ்ரீ பலராமர், தனது பாபங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொள்ள க்ஷேத்திராடனமும், தீர்த்த யாத்திரையையும் மேற்கொண்டார்.

கௌசிகீ, ஸரயு நதிகளில் ஸ்நானம் செய்தார். பிறகு பிரயாகை த்ரிவேணி ஸங்கமத்தில் ஸ்நானாதி தர்ப்பணம் செய்தார். அதன்பின் கோமதி, கண்டகீ, விபாஸா, சோணா நதிகளில் ஸ்நானம் செய்துவிட்டு, கயா க்ஷேத்திரத்தையடைந்து அங்கு பித்ரு கர்மாக்களைச் செய்தார். பிற்பாடு, கங்கை நதி ஸமுத்திரத்தில் சங்கமமாகுமிடத்தில் ஸ்நானம் செய்தார். மஹேந்திர மலையில் ஸ்ரீ பரசுராமரைத் தரிசித்து ஆசிபெற்றார். அதற்கப்புறம் கோதாவரி, வேணா, பம்பாஸரஸ், மற்றும் பீமரதி நதிகளில் ஸ்நானம் செய்தார். பின்பு ஸ்ரீ ஸுப்ரமண்யஸ்வாமியைத் தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீ சைலம் சென்று ஸ்ரீ சைலநாதரைத் தரிசித்தார். அங்கிருந்து திருப்பதி க்ஷேத்திரத்திற்கு வந்து ஸ்ரீ வேங்கடா சலபதியைத் தரிசித்தார். யாத்திரையைத் தொடர்ந்து, காஞ்சீபுரம் அடைந்து ஸ்ரீ காமாக்ஷி, ஸ்ரீ ஏகாம்பரேச்வரரைத் தரிசித்துவிட்டு, காவேரி நதியில் ஸ்நானம் செய்து பின் ஸ்ரீரங்கம் வந்தடைந்து ஸ்ரீ ரங்கநாதரைத் தரிசித்தார். அங்கிருந்து தெற்கே மதுரையிலும், ராமேஸ்வரத்திலும் தெய்வ தரிசனம் செய்து தானங்கள் செய்தார்.

பிறகு கிருதமாலா நதியிலும் தாம்ரபர்ணீ நதியிலும் ஸ்நானம் செய்துவிட்டு, மலயாசல பர்வதத்தில் அகஸ்திய முனிவரை வணங்கி அவரது ஆசி பெற்றார். அங்கிருந்து கன்யாகுமரிக்குச் சென்று தேவியைத் தரிசித்துவிட்டுத் திருவனந்தபுரம் சென்று ஸ்ரீ அனந்தசயன பத்மநாபரைத் தரிசனம் செய்தார். பின்பு ‘பஞ்ச அப்ஸரஸ்’ என்ற தீர்த்தத்தில் ஸ்நானம் முடித்து தானங்கள் செய்தார். அதைத் தொடர்ந்து கேரள தேச க்ஷேத்திராடனம் முடித்து, சிவக்ஷேத்திரமான கோகர்ணத்திற்கு விஜயம்செய்து ஸ்வாகியைத் தரிசித்தார். அதன்பின் தீவுக்கு நடுவில் கோயில் கொண்டுள்ள அம்பிகையையும் தரிசித்து, சூர்ப்பராகத்தையடைந்தார். பிறகு தாபி, பயோஷ்ணி, நிர்விந்தியா, ரேவா நதிகளில் ஸ்நானம் செய்து, பிற்பாடு மனு தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்துவிட்டு, பிரபாஸ க்ஷேத்திரத்திற்கு வந்து அங்கு ஸ்நானம் செய்து பித்ரு தர்ப்பணமும் செய்தார்.

மேற்கூறியவாறு பற்பல தீர்த்த ஸ்நானாதிகளால் சுத்தியடைந்த பலராமர் யாகமொன்றையும் செய்து, தனது பத்னியுடன் “அவப்ருத ஸ்நானம்” செய்து மகரிஷிகள் ஆசிகளைப் பெற்றார். இங்ஙனம் புண்ணிய நதிகளில் நீராடியதாலும், பாரத தேச க்ஷேத்திரங்களில் தெய்வங்களின் தரிசனத்தாலும், மற்றும் பித்ருக்களைத் திருப்தி செய்ததாலும், தானங்கள் செய்ததாலும் பெரியோர்களின் ஆசி பெற்றதாலும் ஸ்ரீ பலராமர் எல்லாப் பாபங்களும் நீங்கிப் பரிசுத்தனாக ஆனார்.

அவதார புருஷரான ஸ்ரீ பலராமரே இத்தனை பிராயச்சித்த கர்மாக்களைச் செய்து பாபங்களைப் போக்கிக்கொண்டாரென்றால், மானிட ஜன்மமெடுத்த நாமெல்லோரும் நம் தோஷங்களையும் பாபங்களையும் போக்கிக் கொள்ள வழி காணவேண்டாமா?

பித்ரு கர்மாக்களை சிரத்தையாகச் செய்தல், க்ஷேத்திராடனமும் தீர்த்த யாத்திரையும் மேற்கொள்ளுதல், தான தர்மங்கள் செய்தல், பிறர்க்கு உதவுதல், ஆலயங்கட்குத் தவறாது சென்று தெய்வங்களைத் தரிசித்தல், பெரியோர்களை நமஸ்கரித்து அவர்களின் ஆசி பெறுதல் ஸத் சங்கத்தில் இருத்தல், உபன்யாசங்களைக் கேட்பது, சதா பகவன் நாம ஸ்மரணம் முதலான நற் காரியங்கள் நம் பாபங்களை அறவே போக்கிவிடுமென்பதில் எள்ளளவும் ஸந்தேஹமில்லை.

சு. கிருஷ்ணஸ்வாமி

HYMNS OF THE SAMAVEDA க்ருஷ்ண க்ருபயாம் குரு பிராப்தம்



Designed and maintained by AKR Consultants