Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT68 Brahmin Today - October 2009 பிராமின் டுடே - அக்டோபர் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




மத்தியப் பிரதேச மாநில மஹா(அ)நுபவங்கள்

பகுதி 1


வாழ்க்கையின் சில பாடங்களைக் கண்டும் கேட்டும் மட்டும் பெற இயலாது என்பதை, ரயில் விஜயவாடா நிலயத்தை எட்டும் முன்பே நமக்கு எடுத்துக்காட்டிய நமது இந்தூர் சுற்றுப் பயணம் பல சுவையான தகவல்களை வாசகர்களுக்கு வழங்கும்படி அமைந்திருந்தது.

சுகமான இரண்டாம் ஏ.சி. வகுப்பில் தொடங்கிய நமது பயணத்தின் முதல் நாள் இரவு, சகதர்மினியின் கைப்பை (Mobile phone, ATM Card, Credit card, ஐந்து இலக்கத்தில் ஏதோ ஒரு சுமாரான ரொக்கம் ஆகியவை இருந்த) காணாமல் போனது எங்களின் கவனக்குறைவினாலா, பதிவு செய்யப்பட்ட A.C. வகுப்பில்கூட அளிக்கப்படாத ரயில்வே நிர்வாகத்தின் பாதுகாப்பு நடைமுறைகளாலா அல்லது இம்மாதிரி சந்தர்ப்பங்களிலெல்லாம் மற்றவர்களால் ஆறுதலாக சொல்லப்படும் திருஷ்டி, கெட்ட நேரம், சனி திசை, etc etc வகையறாக்களினாலா, என்ற பட்டிமன்றம் இதுவரை நம் மனதில் நடைபெறும் அதே சமயம், ஒரு எளிய உண்மையையும் உணர முடிந்தது.

‘இழப்பு’ என்பதை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்திலும் அது நம் இயல்பு நிலையைப் பாதிக்கும் வேகத்தையும் ஒட்டியே நமது பிற எதிர்காலச் செயல்கள் அமைகின்றன. இம்மாதிரி சமயங்களில் நடந்ததைப் புறம் தள்ளிவிட்டு இயல்பாக இருக்கும் மன நிலையை கைக்கொள்ளுவது மிக அவசியம் என்ற உண்மைதான் அது.

‘இந்தூர்’ நகரம், நடுத்தர நிலப் பரப்புள்ள, மேல்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் நகரம் என எண்ணும்படி, ஆங்காங்கு "மால்களும்" கடைவீதிகளும் நிறைந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாய்க் காட்சி அளிக்கின்றது. நகரத்தின் மத்திய பகுதியில் நாம் தங்கிய Hotel 3 Star தரமான ஒன்று என்பது அதன் அறை பராமரிப்பிலும் பிற வசதிகளிலும் வெளிப்பட்டது.

இந்தூர் நகரத்தின் காரணப்பெயர் கவித்துவம் நிறைந்த ஒன்று.

இந்த நகரத்தின் அழகிலும் வளத்திலும் தன் மனதைப் பறிகொடுத்த ஒரு அரசவை உருதுக் கவிஞன் "இந் தௌர்" - இந்த அழகு, ஒளி, வளம் என்ற பொருளில் இந்த ராஜாங்க தலைநகரை அழைத்ததின் அடிப்படையில் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

நம் நாட்டின் நடுப் பகுதியாக விளங்கும் மத்தியப்பிரதேத்தின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தூர் நகரம், வட இந்தியாவின் பல்வேறு சமஸ்தானத்தைப் போல ஆங்கிலேயேர்களுக்கு உட்பட்டு இயங்கிய மன்னராட்சி இருந்த இடமானாலும் சில தனிச்சிறப்புகளைப் பெற்றிருக்கிறது. இதை சுதந்திரத்திற்கு முன்பு ஆட்சிசெய்த அரசி ராணி அகல்யாபாய் மக்கள் மனம் கவர்ந்த பெண்ணரசி ஆவார்.

நகர மக்கள் இன்றும் போற்றும் வண்ணம் நல்ல சாலைகளும் கல்விக்கூடங்களும் மருத்துவமனைகளும் இவர் செய்த பணிகளாக நிற்கின்றன. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இவரது அரண்மனை மிகவும் வித்தியாசமான, மேற்கத்திய கட்டடக் கலை அம்சங்களுடன் ஒரு ஐரோப்பிய நாட்டு அரண்மனையைப் போன்று விளங்குகிறது.

பாரம்பரியமாக, ஜைன மத கேந்திரமாக விளங்கிய இந்தூர் நகரத்தில், இன்றும் ,அதிக அளவில் மட்டுமின்றி, பல முக்கிய வணிகத் துறையிலும் செல்வாக்குள்ள பிரிவினராக இருக்கும் ஜைனர்கள், பல ஆலயங்களை இங்கு கட்டியிருப்பினும் "காச் மந்திர்" என்று அழைக்கப்படும் கண்ணாடி ஆலயம் காணத் தகுந்தது. சிறு சிறு கண்ணாடிகளாலும் கண்ணாடி போன்று காட்சி அளிக்கும் ஜிப்சம் துண்டுகளாலும் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில் ஜைன மத முதல் தீர்த்தங்கரரான ஆதி நாத் பகவான் முக்கிய தெய்வமாக வழிபடப்படுகிறார்.

ஆடைகளுக்கு, முக்கியமாகச் சிறுவர் சிறுமியர் ஆயத்த ஆடைகளுக்கு புகழ்ப் பெற்ற இந்நகரத்தில் "கப்டா பஜார்" என்ற மார்க்கெட் பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. தமிழகம் உட்பட நாட்டின் அனேக இடங்களிலிருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து கொள்முதல் செய்கிறார்கள். சமீப காலம்வரை நாட்டின் பல பெரிய துணி ஆலைகள் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே அமைந்திருந்தது இதன் பின்னணி ஆகும்.

இந்தூர் நகர இஷ்ட தெய்வமாக விளங்கும் "படா கணபதி" என்னும் வினாயகர் ஆலயம் ஒரு சிறிய கட்டடமே. இதைக் காணச் சென்ற நமக்கு இவ்வாலயத்தின் நிர்வாகி மற்றும் தலைமை பூஜாரி திரு மஹாஜனைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியதன் மூலம், நம் வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல அரிய தகவல்களை பெற முடிந்தது.

நூறு வருடங்களுக்கு மேல் ஒரு குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் இவ்வாலயம், இந்தக் குடும்ப முன்னோர் அமரர் நாராயண ததாட்சி என்பவர் கனவில் வந்து காட்சி கொடுத்து தனக்கு ஒரு ஆலயம் கட்டச் சொன்ன, ‘கணபதியின் ஆனையின்’ பேரில் எழுப்பபட்டது. 60 அடி உயர ஆனைமுகனாகத் திகழும் இத்தெய்வ அருள் பெற்றே இந்தூர் நகர இல்லங்களின் எல்லாச் சுப காரியங்களும் தொடங்கும்.

தன் முதுகெலும்பையே வஜ்ராயுதமாக்கி, அசுரர்களை அழிக்க உதவிய அந்தணத் திலக ரிஷி "ததாட்சி" வழிவந்த இந்த வட இந்திய பிராமணர்களைப் பற்றி விரிவாகக் கூறிய திரு மஹாஜன், தங்கள் பிரிவைச் சார்ந்த 300 குடும்பங்கள் தமிழ்நாட்டில் வசிப்பதாகவும் இது பற்றிய விபரங்கள் தாங்கள் உருவாக்கியுள்ள badaganapathy.com என்ற வலைப் பதிவில் உள்ளதாகவும் கூறினார்.

இதே அளவு புகழ்ப் பெற்ற கஜாரியா கணபதி கோவிலும் இடைவிடாது மக்கள் வரும் இன்னொரு இந்தூர் இறைத்தலமாகும்.

இந்தூர் விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்த ALMA Collage தொடக்க விழா மற்றும் மாண்புமிகு மணிசங்கர ஐயர் கலந்துகொண்டு பிராமின் டுடே ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டிய நிகழ்ச்சியைப் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு, இடைப்பட்ட இரண்டு நாட்களில் நாம் கண்டுவந்த உஜ்ஜையின் மற்றும் ஓம்காரஷ்வர் ஆலயம் பற்றிச் சிறிது குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.

உஜ்ஜயின் நகரத்தை நமது காஞ்சிபுரம் அல்லது கும்பகோணம் நகரத்துடன் ஒப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். திரும்பிய இடமெல்லாம் கோவில்களும் அவை ஒவ்வொன்றும் சரித்திர புராதன நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதும் உஜ்ஜயின் நகரத்தில் நாம் இருந்த சிறிது நேரத்திலேயே உணர முடிந்தது.

(தொடரும்)

வழிகாட்டிய சில வைஷ்ணவ ஆச்சார்யர்கள் Sparks



Designed and maintained by AKR Consultants