- The Magazine for Brahmins
Sparks
“எங்கே பிராமணன்” என்ற தொலைக் காட்சி தொடரின் தொடர்பாக நம் இதழில் வந்த விமர்சனங்கள்ப் பற்றி சென்ற இதழ் Spark பகுதியில் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம். ஏன் நம் சமூகம் மட்டும் பிற எல்லா சமூகம் போல் அல்லாது, பெரும்பாலும் சுயவிமர்சனத்தையும் உண்மையான மற்றும் முழுமையான பிராமண இலக்கணப்படி இல்லாத தற்கால சூழ்நிலையையும் மட்டுமே எப்போதும் எண்ணியும் எழுதியும் வருகிறது.
இதன் அடிப்படை என்ன? இதன் மூலம் நாம் அடையும் நன்மை ஏதாவது உண்டா? முரன்பாடுகள் நிறைந்த முட்டாள் சமுதாயம் எனச் சிலர் முணுமுணுக்கும் இவ்வியல்பின் மூலம் யாது?
எவர் மனதும் நோகாமல், அவர் தவறு, இவர் சரி, என சுவர் எழுப்பாமல் நடு நிலை நின்று நம் எண்ணங்களை இதழ் தோறும் வெளிப்படுத்தும் நாம், இவ்விஷயத்தின் சார்பாக முதற்கண் ஒன்றைத் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.
திரு சோ தன் ஒளித்தொடரின் மூலம் கூறிய "இப்போது எங்கேயும் உண்மையான பிராமணன் இல்லை" என்ற முடிவை எதிர்க்கும் மற்றும் ஆதரிக்கும் அனைவருமே, உண்மையான பிராமணப் பற்று உடைய அதன் மேம்பாட்டில் அக்கரையும் நம்பிக்கையும் உள்ள நம் உடன் பிறப்புகள்தான் என்பதில் எமக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. சொந்த லாபத்திற்கும் சுந்தரமான முகப்பொலிவிற்கும் மயங்கி, இந்த நாட்டில் இயங்கும் எத்தனையோ இயக்க தொண்டர்கள் போல, பிறர் நொந்து நூலாகும்படி வாயில் வந்தபடி பேசி, தன் கொள்கையைச் சொல்லும் பகுத்தறிவு பட்டாக்கத்தி, தன்மான தம்பிகள் அல்ல இவர்கள். தங்கள் சமூகத்தையே கடிந்து கொண்டாலும், அவ்வாறு கடிந்து கொள்பவர்களை கடிந்து கொண்டாலும், மங்காத ஒளிவிளக்காய், எங்கும் தங்காத தாமிரபரனி ஆற்று நீராய், பிராமண நலம் அவர்கள் அத்தனை பேர்கள் உள்ளங் களிலும் ஒடுகிறது என்பதை நாம் அறிவோம்.
அந்த காலம் போல், "நுனிமுதல் அடிவரை அந்தண லட்சனம் இல்லையே" என அங்கலாய்ப்பவர்கள், தாங்கள் வெளிப் படுத்தும் இவ்வித தவிப்பின் மூலம் தற்போது குறைந்து வரும் பிராமண நல் வழி சம்பிரதாயங்களும் உண்மையான பிராமண சிந்தனைகளும் அதிக அளவில் பெருகும் என்றுதான் எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை பிரதிப்பலிக்கும் அனேகர் இம்மாதிரி சுயவிமர்சனத்தை ஆதரிப்பதின் வழியாக அதை உறுதிப்படுத்துகிறார்கள். இதுவேதான் "சோ"வை ஆதரித்து திரு சர்மா சாஸ்திரியின் கட்டுரையை கண்டனம் செய்து எழுதியவர்களின் நோக்கமாக இருக்கக்கூடும் அல்லது இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் அம்மாதிரி விமர்சனங்களில் "எண்ணெயில் போட்ட அப்பம் போல குதிக்கிறார்" போன்ற நம் இதழ் தரத்திற்கு அப்பாற்ப்பட்ட வாசகங்கள் சில இடம் பெற்றிருந்தது, இம்மாதிரி நல்ல நோக்கத்தை முழுமையாக வெளிப்படுத்த இயலாமல் செய்துவிட்டது. எங்கோ, யார் மூலமாகவோ ஆவணப்படுத்தபடும் நம் இதழ்ப் பக்கங்கள், வருங்கால நம் சமூக வரலாற்றுப் பக்கங்கள் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எத்தருணத்திலும் இத்தகு பிரயோகங்கள் தவிர்க்கப்படவேண்டும்.
நம் அனைவரது பிராமண ஆச்சாரப் பின்பற்றுதலும் வெகுவாக தற்போது குறைந்துவிட்டது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையே எனினும் "எங்கே பிராமணன்" என்று தேடிப் பார்த்ததில், இப்போது ஒருவன்கூட எங்கும் இல்லை என்று சொல்வது, ஒப்பக்கொள்ள முடியாத தப்பான கருத்தாகும் என்று கருதுபவர்கள் கூறுவது சிந்திக்கதக்க ஒரு பக்கமாகவே விளங்குகிறது.
திரேத யுகத்தில் வாழ்ந்த பிராமணர்களது வாழ்க்கை நடைமுறைகள் எல்லாமே மாறிவிட்ட இந்த கலியுகத்தில், அவற்றை முழுமையாக கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லை. மன்னர்களும் மக்களும் போற்றி ஆதரவளித்து வண்ணமுற வாழ்ந்த அந்த நாள் அஸ்தமித்து, ஆண்டுகள் பல சென்ற பின்பும் எண்ணத்திலும் இயன்ற வரை ஆச்சார செயல்களிலும் பிராமண முத்திரையை திண்ணமுற பதித்து தினமும் பிராமணனாய் வாழ்ந்து வரும் எண்ணற்ற வைதீக மற்றும் ஏராள லௌகீக பெரியவர்களை இத்தொடர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு இன்றும் வாழ்பவர்களை போற்றுவதற்கு பதிலாக தூற்றுவது தவறு.
அழுத்தமாகவும் ஆழமாகவும் நம்மிடையே இருந்த பல அனுஷ்டான ஆச்ச்சாரங்களை ஒழித்துக் கட்டி உரலில் போட்டு அழிக்கும் விதமாக தினமும் தோன்றும் பொருளாதார மற்றும் கலாச்சார குறிக்கீட்டுகளின் மத்தியில் நாம் இத்தனையாவது பிராமணத் தனித் தன்மையை பின்பற்றுவது பெருமைப்பட வேண்டிய பேருண்மை அல்லவா?
இதுபோன்ற சிந்தனைகள உடையவர்கள் கருதுவது உண்மையே எனினும் இப் போக்கின் வழியே நெடுந்தூரம் போய் பிராமண ஆச்சாரத்தவறுகள் மிகுதியாகி அதை எவரும் சுட்டிக்காட்ட இயலாத சூழ்நிலை உருவாக்கக் கூடாது.
மற்ற எந்த சமூக உட்பிரிவினர் கூட ஒரு போதும் நினைத்து பார்க்கவே அஞ்சும் நீண்ட பாரம்பரிய உரிமை ஒன்று நம் அனைவருக்கும் இயல்பாகவே அளிக்கப்பட்டு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. "பகுத்தறிவு" என்றால் கற்பதை நடைமுறை கேற்ப பகுத்து அறிவது என அறியாமல் பகவானையும் பார்ப்பானையும் படு கேவலமாகத் திட்டி, அதன் மூலம் சுக வாழ்க்கை வாழும் தன்மான இனக் குஞ்சுகள் சொல்வது போல் அல்லாமல் “தவறு” என்று தனக்குத் தோண்றியதை தக்க வேத புராண ஆதாரங்களுடன் தர்க்கம் செய்யும் உரிமைதான் அது. பெரும்பான்மையினருக்கு எதிரானது என்பதினாலோ நம் சமூகம் விரும்பும் வண்ணம் இல்லை என்பதினாலோ மறுக்கப்படாத மாபெரும் சலுகை அது. “நெற்றி கண்ணை காட்டி நெறி தவறியது நித்தம் வணங்கும் சிவனே” எனினும் கற்ற கல்வியே பெரிது எனப் பற்றி வந்த பரம்பரை பாழ்படாமல் இவ்வித சுயவிமர்சன ஆய்வுகள் தொடரப்பட வேண்டும். புடம்போட்டு தொடர்ந்து உரசிக்கொண்டிருப்பதின் மூலம்தான் எல்லா இடம் தோறும் போற்றும் உலோகமாகத் தங்கம் இருக்க முடியும்.
மத்தியப் பிரதேச மாநில மஹா(அ)நுபவங்கள்
ஸ்ரீமத் பாகவதம்
