- The Magazine for Brahmins
ஸ்ரீமத் பாகவதம்
அத்தியாயம் - 27
ஜானகிராமன்

மனிதர்கள் பொய் சொல்வர் என்பதை நான் அறிவேன். ஆனால் இதுவரை ஆண்டவன்கூடப் பொய்சொல்வார் என்று அறிந்திலேன்.
அசரீரி வாக்கை நம்பி உன் குழந்தைகளைக் கொன்றுவிட்டேன். தேவகி! என்னைத் தயவு செய்து மன்னித்துவிடு. கொல்லப்பட்ட உன் குழந்தைகளுக்காக வருந்தாதே.
நமது உடல் அழியக்கூடிய மண்குடமாக இருக்கிறது. ஆனால் அந்த மண் குடத்துக்குள் இருந்த ஆகாசம் அழியாமல் பரந்த வெளியில் இரண்டறக் கலந்து விடுகிறது.
இதுபோன்று மனிதன் மறித்தவுடன் அவனது தேகம் உருமாறி அழிந்துவிடுகிறது. ஆனால் அதில் வீற்றிருந்த ஆன்மா அழியவில்லை. உறங்குவது போலும் சாக்காடு. உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்பதை அறிந்த ஞான், ‘பிறப்பு - இறப்பு சுழற்சியால் பாதிக்கப்படுவதில்லை. பிரம்மஞானம் பெறாதவன், தான் என்ற அகங்காரத்தால் ஏமாற்றப்படுகிறான்.
அவன் உடலை ஆன்மாவாகக் கருதுகிறான். மணம் முடித்து மக்களைப் பெறுவதே உலக வழ்க்கை என்று நினைக்கும் அறிவிலிகளுக்கு துக்கமும், சந்தோஷமும் மாறி, மாறி வருகின்றன.
சுற்றத்தாரும், அன்பர்களும் சூழ்ந்திருக்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், இறப்பு அல்லது மற்ற காரணங்களால் அவர்களிடமிருந்து பிரியும்பொழுது வருத்தமாகவும் உணர்கிறார்கள்.
மாயையின் வலையில் சிக்கியுள்ளவரை மனிதன் உண்மையை உணராமல் வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பேன்.
ஆனால் நீங்கள் இருவரும் மாறுபட்டவர்கள். உலகில் உள்ள உயிரினங்கள் அத்தனையும் அவை செய்துள்ள முன்ஜன்ம பலனால்தான் பிறந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியும்.
சிலர் கொல்கிறார்கள். சிலர் கொல்லப்படுகிறார்கள் என்று அறிவிலிகள் அறியாமல் பிதற்றுகிறார்கள். ஆனால் இது சரியல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.
உண்மையான ஞானம் படைத்த நீங்கள் இந்தப் பாவி கம்சனை மன்னித்து கருணை காட்ட வேண்டும் என்று கூறிய கம்சன் கண்ணீர் மல்க அவர்கள் காலடியைப் பற்றிக்கொண்டு கதறினான்.
கம்சனைக் தூக்கி நிறுத்திய தேவகியும், வசுதேவரும் ‘நீ செய்த தீமைகளை நாங்கள் எப்பொழுதோ மறந்து விட்டோம்’ என்று கூறி அவனைத் தேற்றினர்.
தேவகி ‘அண்ணா! நீ சொல்வது சரி. ஆன்ம ஞானம் பெறாத அறிவிலிகள்தான் நிலையற்ற விஷயங்களில் சுகத்தையும், பிரிவில் துக்கத்தையும் அனுபவிக்கிறார்கள். மாயைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்களின் மனத்தில் துக்கம், சுகம், மகிழ்ச்சி, வருத்தம், பயம், வெறுப்பு, பேராசை, பற்று, அகங்காரம் முதலியன தோன்றி வளர்கின்றன.
இவை அவனுடைய சிந்தனையை மாசு படுத்தி, அவனைக் குருடனாக மாற்றுகிறது. ஒருவன் மற்றொருவனை வெறுக்கிறான் என்றால், அவன் அவனையே வெறுக்கிறான் என்று பொருள்.
ஏனெனில் ‘வெறுப்பவன் உள்ளும், வெறுக்கப்படுபவன் உள்ளும் ஒரே ஆன்மாதான் இருக்கிறது.
இந்த உண்மையை அறிந்தவனுக்கு துன்பமும், துயரமும் இல்லை என்றான்.
‘பரீக்ஷீத் மன்னா! மிகப்பெரிய ஒளிப் பிழம்பாகிய சூரியனை காற்றில் மிதக்கும் லேசான கருமேகம் மறைக்கும்பொழுது இருள் சூழ்கிறது. சிறிது மேகம் விலகும்போது ஒளிக்கீற்று ஒன்று தெரிகிறது. மீண்டும் மேகம் அதை மறைத்து விடுகிறது. ஒளிமயமான அந்த ஒளிக்கீற்று, ஒரு நொடிப்பொழுது மட்டும் நம் நினைவில் இருந்துவிட்டு, மறைந்து போகிறது.
இதேபோன்றுதான் மனிதனுடைய இயல்பும், நல்லவர்களுடன் இணங்கி இருக்கும்பொழுது நற்பண்புகளும், நல்ல எண்ணங்களும் மேலோங்கி இருக்கும். அதே மனிதன் தீயவர்களிடம், இணங்கி இருக்கும்பொழுது மேகத்தால் மறைக்கப்பட்ட இடத்தில் இருள் சூழ்ந்திருப்பது போன்று அவனுடைய இதயத்தில் அறியாமை என்ற இருள் பரவி அவனுடைய சிந்தனைகளும், செயல்களும் தீயவை ஆகின்றன.
இதுவே கம்சன் விஷயத்திலும் நடை பெற்றது. தனது இருப்பிடம் திரும்பிய கம்சன், மறுநாள் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, முதல்நாள் நடந்த அதிசயங்களையும், விஷ்ணுமாயை கூறினதையும் விளக்கமாக எடுத்துரைத்தான்.
கம்சனின் அமைச்சர்கள் அஞ்ஞானமே உருவெடுத்து வந்தவர்கள், அவர்கள் ஒரே குரலில் ‘மன்னா, நாம் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது. உங்களைக் கொல்லப்போகும் குழந்தை எங்கோ பிறந்துவிட்டது என்பது உறுதி. விரோதியை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எனவே மதுராவில் மட்டுமல்லாமல், நம் நாடு முழுவதும் இந்தக் காலக்கட்டத்தில் பிறந்த அத்தனை குழந்தைகளையும் அழிக்க வேண்டும்.
மேலும் பிரம்மா, சிவன், இந்திரன், தேவர்கள் இவர்களால் உங்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால் உங்கள் முன் வராமல் ஒளிந்து கொண்டு செயல்படும் நாராயணன் மட்டுமே உங்கள் எதிரி. அவனுக்கு நீங்கள் தீங்கு செய்ய வேண்டுமென்றால், அறவோர், முனிவர்கள், தபஸ்விகள், பசுக்கள் இவர்களை நிந்திக்க வேண்டும். இதுவே நாராயணனை அழிப்பதற்குச் சிறந்தவழி என்றனர்.
கம்சன் தனது மந்திரிகளை, தனது நலம் விரும்புவோராகவும், நண்பர்களாகவும், தனக்கு எப்பொழுதுமே நல்லது செய்பவர்களாகவும் கருதுவான். எனவே, அவர்களுடைய தீய அறிவுரை அவனுக்கு மிகவும் உகந்ததாகத் தோன்றியது. அவர்களுடைய உபதேசம் தனது கழுத்தில் சுற்றப்பட்ட சுருக்குக் கயிறு என்பதை அறியாமல், அதை மலர்மாலையாகக் கருதி, தன்னுடைய குலச்சிறப்புகள் அத்தனையும் மறந்து அவர்களுடைய செயல் திட்டத்திற்கு உடன்பட்டான்.
(தொடரும்)
