- The Magazine for Brahmins
மரணம் உன்னைக் கண்டு பயப்படும்...!
தேதியூர் V.J. ராமன்
பிரபல நாளிதழ் ஒன்றில் சமீபத்தில் வெளியான செய்தி, 113 வயது நிரம்பிய ஜப்பானியர் உலகிலேயே அதிக வயதானவர் இறந்தார் என்பதே அந்தச் செய்தி... அதே நாளில் மற்றும் ஒரு சுபமான செய்தி... காரைக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (100 வயது) அவரது மனைவி சுப்பு கண்ணு (90 வயது) கனகாபிஷேகம் செய்து கொண்டனர்... இத்தனை நாட்கள் ஒருவரால் தற்காலச் சூழ்நிலைகளில் உயிர் வாழ இயலுமா என்பது ஆச்சர்யமாகவே இருந்தாலும் கடவுள் மானுடர்களுக்கு வாழும் நாட்களாக 120 வருடங்களைத் தந்துள்ளாரே. உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனது இறுதி நாட்களை நோக்கித்தான் தினமும் பயணம் செய்துகொண்டு இருக்கின்றார்கள் என்றாலும் எத்தனை நாள் இப்பூவுலகில் நாம் வாழப் போகின்றோம் என்பது எவருக்கும் புரியாத ஒன்றுதான்
ஜெர்மெனியில் பிறந்த ஒரு நங்கை... நடுத்தர வயதுக்காரர். ஒருநாள் தன் குடும்பத்துக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு கடையைவிட்டு இறங்கி, தெருவில் நிறுத்தியிருந்த தனது காரை எடுப்பதற்காகச் செல்வதற்குள் அவரை உரசிக்கொண்டு மூன்று பெரிய வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன. சிறிதும் விபத்துக்குள்ளாக விட்டாலும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி தன் காரை ஓட்டிச் செல்லும் வழியில் இரண்டு இடங்களில் எதிரே சென்றுகொண்டிருந்த வாகனங்களில் இடிக்கும்படி நேர்ந்தது. கார் மிகவும் பழுதடைந்த நிலையில் தனது உடலில் சிறிய காயங்களுடன் தப்பிய அவரை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வழியில் அந்த வாகனமும் விபத்துக்குள்ளாகியது என்றாலும் அந்த பெண்மணி உயிர் தப்பினார். ஒரே நாளில் மூன்று முறை எமன் வாயிலிருந்து தப்பிய அந்தப் பெண்மணி கடவுளுக்கு நன்றி செலுத்தினாலும் ஒருவாரம் கழித்து ஒருநாள் தன் வீட்டின் மாடிப் படியிலிருந்து இறங்கி வரும்போது கால் தடுக்கி கீழே விழுந்தவர் திரும்பவும் கண் விழித்துப் பார்க்காமல் மேல் உலகம் சென்றார் என்ற அந்த செய்தியை படிக்கும்போது கொடூரமான மூன்று விபத்துகளிலிருந்து தப்பியவர் ஒரு சிறு சறுக்கலால் தன் உயிர்நீத்த நிலைமைப் பார்க்கும்போது ஒருவரது ஆயுள் காலம் எப்போது முடிவடையும் என்று எதிர்பார்க்க முடியாத பெரும் புதிராகவே இருக்கின்றது.
ஜோதிட சாஸ்திரத்தில் சாஸ்திர, உபய ஸ்தானங்களுக்கான மாரகம் பற்றிக் கூறுகையில் அந்த ஸ்தானங்களுக்கு எந்த வீடுகளின் அதிபதிகள் மாரகத்தை ஏற்படுத்துகின்றார்கள் என்பது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. மாரக தசை நடக்கும் காலத்தில் ஒருவரது உயிர் நிச்சயம் பிரியுமா என்ற கேள்விக்கு பதில் “ஆம்” என்று உறுதியாகக் கூற இயலாமலும் தான் இருக்கின்றது. பொதுவாக ஒருவரது ஆயுள் பலம் குறித்துச் சொல்லும் லக்னம், 8ஆம் இடம் அதன் அதிபதிகள், குருபகவான் ஆயுள்காரகன் சனிச்வரன் நிலை இவை எல்லாம் வலுப்பெற்று இருந்தாலும் ஒருவரது ஆயுள் பலத்தைத் துல்யமாக எத்தனை வருடங்கள் என்று எவராலும் அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலாது. படைத்த பரம்பிரம்மத்துக்கே தெரிந்த இந்தப் பரம ரகசியத்தை எந்த ஜோதிடருக்கும் இறுதியிட்டு சொல்லும் அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓரளவு மாரகம் மற்றும் மாரகத்துக்கு ஒப்பான இழப்புகள் வரும் நேரத்தைக் கூற இயலுமே ஒழிய துல்யமாக நாள் குறித்துச் சொல்ல எவராலும் இயலாது. 7ஆம் இடமான மாரக ஸ்தானத்தில் (சரலக்னகாரர்களுக்கு) ஸ்தானாதிபதி வரப்பெற்று அவர் தசை நடக்கும் காலத்தில் மரணம் நிகழும் என்று சொல்லப்பட்டுள்ளது. எந்த நாள் அந்தத் துக்க நாள் என்று கூற இயலுமா என்றால் எந்த ஜோதிடராலும் ‘முடியாது’ என்றே கூறலாம். 7க்குடைய தசை நடைபெற்று அந்த தசாநாதன் விரபஸ்தானம் மற்றும் மறைவிடங்களில் இருந்தால் மாரகத்துக்கு ஒப்பான இழப்புகளைச் சந்திக்க நேரிடுகின்றது. இழப்பு வரும் நாளைத் துல்யமாக எவராலும் கூற இயலாது.
யூதர்களை சிம்ம சொப்பனத்துக்கு உள்ளாக்கிய ஹிட்லருக்கும் இந்த மரண பயம் வந்தது. ஜோதிடத்தில் நம்பிக்கை வாய்ந்தவர் ஹிட்லர் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா. ஜோதிடத்தில் மிக வல்லுனரான ஒருவரை அழைத்த ஹிட்லர் ‘என் ஆயுள்காலம் எப்போது முடிவடைகின்றது என்று பார்த்துச்சொல்லுங்கள்’ என்றர். ஹிட்லரின் சாதகத்தைத் தீவிரமாக ஆராய்ந்த அந்த ஜோதிடர் ‘யூதர்களின் பண்டிகை நாள் ஒன்றில் நீங்கள் இறப்பீர்கள்...’ என்றார்.
ஜெர்மனியில் பஞ்சம் பட்டினி தலை விரித்தாட யூதர்கள்தான் காரணம் என்று எண்ணம் கொண்டிருந்த ஹிட்லர் பல்லாயிரக் கணக்கான யூதர்களைக் கொன்றுகுவித்தவர்.
சற்று நிலை தடுமாறிய ஹிட்லர் ‘எந்த யூதர் பண்டிகை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா’ என்று கேட்டார்.
‘நீங்கள் என்று இறக்கின்றீர்களோ அன்று யூதர்களுக்குப் பண்டிகை தானே...’ என்றார் ஜோதிடர்.
இந்தப் பதில் குறித்து ஹிட்லர் கோபமோ வருத்தமோ படவில்லை. ஜோதிடரை கௌரவித்தே அனுப்பிவைத்தார்.
இதன் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் பிரபலமான அந்த ஜோதிடரும் ஆயுள் பாவம் குறித்துக் கருத்துக்கூற விரும்பவில்லை என்பதே.
ஜோதிடர்களால் உங்களது மாரக காலத்தைப் பற்றியும் ஓரளவு எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கூற இயலுமே ஒழிய துல்யமாக மாரக தினத்தைக் கணித்துக் கூறும் திறன் எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்துகொள்ள வேன்டிய அவசியமும் இல்லை என்றுதான் தோன்றுகின்றது... அந்த பரம்பிரம்மத்துக்கே தெரிந்த இந்த ரகசியம் பரம ரகசியமாகவே இருப்பது எல்லோருக்கும் நன்மையே... ஒருவரது ஆயுள் பலம் அதிகரிக்க மூன்று வழிகள் உள்ளன.
1. தினமும் காலை மாலை குறைந்தது அரைமணி நேரம் ப்ராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), இருபது நிமிடங்கள் தன்னை மறைந்த தியான நிலை, ஒருமணி நேரம் நீண்ட நடை பயிற்சி மேற்கொள்ளுதல்.
2. கீழ்கண்ட மந்திரத்தைத் தினம் காலை மாலை குறைந்தது 32 தடை சொல்லுதல்.
த்ரியம் பகம் ய ஜாமஹே
ஸூகந்திம் புஷ்டி வர்தனம்
உர் வாருகமிவ பந்தனான் ம் ரத்யோர்
மூக்ஷிக மாம்ருதாத்
3. பல ஜோதிடர்களிடம் உங்கள் சாதகத்தைக் காண்பிக்காமல் இருத்தல்.
நேற்றைய தினம் முடிந்துவிட்டது. நாளைய தினம் நாம் உயிருடன் இருப்போமா மாட்டோமா என்ற கவலை எதற்கு. வாழும் இன்றைய நாளை ஆனந்தமாக வாழக் கற்றுக்கொள்பவனிடம் மரணம் நிச்சயம் பயப்படவே செய்யும்...
வாழ்க வளமுடன்
