- The Magazine for Brahmins
Reflections
இதோ இங்கே பிராமணன்!
ஸ்ரீ சோவின் 'எங்கே பிராமணன்' டி.வி. சீரியலைப் பார்த்தும், ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளின் 'இதோ இங்கே பிராமணன்' கட்டுரையைப் படித்தபின் எழுந்த என்னுடைய கருத்தையும் பிரசுரிக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இருவரும் இருதுருவங்களில் பிராமணர்களைப் பற்றி வருணித்திருக்கிறார்கள். சோ அவர்கள் பல நல்ல கருத்துகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும் வேதம், சாஸ்திரம் இவற்றை மேற்கோள் காட்டி பிராமணர்களையும் பிராமணீயத்தைப் பற்றியும் கூறும் எல்லாக் கருத்துகளையும் வேதம், சாஸ்திரம் நன்கறிந்த மகான்கள் ஆமோதித்து ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் இதுமாதிரி விஷயங்களுக்கு வேதம், சாஸ்திரம் இவற்றை நன்கு கற்றறிந்து நுணுக்கங்களைப் பற்றி வேதசாஸ்திர விற்பன்னர்களிடம் விவாதம், தர்க்கம் செய்து தெளிவுபடுத்திக்கொண்டு சூக்க்ஷம புத்தியுடன் (Total surrender to the supreme) அணுகினால்தான் நன்றாகப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் சொல்லிப் புரியவைக்க முடியும். எவராலும் அவித்யா படிப்பறிவிலாலும் புத்தி கூர்மை, சாதுர்யம், சாமர்த்தியம் இவை துணைகொண்டும் பரம ரஹஸ்யங்கள் மறைந்திருக்கக்கூடிய வேத, தர்ம, சாஸ்திரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள இயலாது. மேலும் பிறப்பினாலா, கர்மானுஷ்டாணங்களினாலா பிராமணன் ஆகிறான் என்பதை வேத-தர்ம ஸாஸ்திர நிபுணத்துவம் பெற்ற நம் சங்கராசார்ய ஸ்வாமிகள் போன்ற மகான்களிடம் கேட்டறிய வேண்டிய விஷயம். இது போன்ற விஷயங்களைப் பற்றி ஸ்ரீ சோ அவர்கள் சிலரிடம் கேட்டறிந்தும், சில நூல்களைப் படித்தறிந்தும் Authoratative ஆகக் கருத்து தெரிவிப்பது சரியல்ல. சுருக்கமாகச் சொன்னால் 'சோ' அவர்கள் கூறும் கருத்துகளை அப்படியே எடுத்துக் கொண்டால் அர்த்தம் அனர்த்தத்தில்தான் முடியும். ஆவணியாவட்டத்தின்போது சொல்லப்படுகின்ற ஒரு மந்திரத்தின் பொருள் என்னவென்றால் 'எத்தனையோ ஜென்மங்களில் செய்த புண்ய கர்ம விசேஷத்தால் இந்த பிராமண ஜன்மா கிடைக்கப்பெற்றேன்'. மஹாபெரியவர்கள் ஸ்வதர்மத்தையும், சாதாரண தர்மத்தையும் எல்லோருக்கும் புரியும்படி நன்றாக விளக்கிச் சொல்லி ஒவ்வொருவரும் உடும்புப்பிடியாக அவரவர்கள் ஸ்வதர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.
பிராணன் அடுத்த வேளைக்கு எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது என்று சோ அவர்கள் கூறிய கருத்து மிகவும் சரியே. வேதம், தர்மம், சாஸ்திரம் இவை யாவும் மிகவும் சிதிலம் அடைந்திருக்கும் இந்தத் தருணத்தில் பிராமண தர்மத்தை மட்டுமே சோ அவர்கள் சுட்டிக்காட்டுவது சரியன்று என்று சாஸ்திரிகள் பதில் கூறுவதுதான் சரியே தவிர சோ அவர்கள் கூறியிருப்பது 'அபத்தம்' என்று கூறுவது தவறு.
சோ அவர்கள் கூறியிருக்கும் எல்லாக் கருத்துகளையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதேபோல் நிறைய பிராமணர்கள் சந்தியா வந்தனம், அக்னி காரியங்கள், ஸ்ரார்த்தம் முதலான பித்ரு கர்மாக்களை மிகவும் சிரத்தையுடன் செய்துவருகிறார்கள் என்று ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள் எழுதியிருப்பதையும் ஏற்க முடியாது. இந்தக் கோர கலியில் ஸ்வதர்மத்தை சிரத்தையுடன் சிலர் (A very small percentage of Brahmins) மட்டுமே அனுஷ்டித்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. ஸ்வதர்மத்தில் பிராமணர்களிடையே சிரத்தை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பூஜை, கர்மானுஷ்டானங்கள் இவற்றை யார் ஒருவர் நிஷ்காம்யமாக விடாமல் செய்துவருகிறார்களோ அவர்களே மனிதர்களில் சிரேஷ்டர்கள் என்றும், பாவபுண்ய பயத்தாலும் காம்ய அர்த்த காரணங் களுக்காகவும் தேவ ஆராதனை கர்மானுஷ்டானங்களைச் செய்துவரும் மனிதர்கள் சிரேஷ்டர்களைக் காட்டிலும் மிகவும் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் என்றும் உணர்த்துகிறார். இதற்கு மேலும் ஸ்ரீஹரி For Action, Inacation for anything and everything சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று திட்டவட்டமாக மனிதர்களுக்கு மேலும்மேலும் மேன்மையடைய அறிவுரை வழங்குகிறார்.
K. Venkatramani,
Chembur, Mumbai
-000-
நமது பிராமண சமூகத்தின் இன்றைய இரண்டு முக்கியமான பிரச்சினைகள் கலாச்சாரச் சீரழிவும் ஆன்மீக பல குன்றுதலும்தான்.
பிராமண இளைஞர்களை நெறிப்படுத்தி ஆன்மிக பலத்தைக் கூட்டி, சமூகச் சீரழிவைத் தடுத்து சமூக மேம்பாட்டை ஏற்படுத்தும் நன்னோக்கத்துடனேயே “பிராமின் டுடே” பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டு காலமாக, ஆன்மிக மேம்பாட்டை வலியுறுத்தும் பல கட்டுரைகள், பாராட்டத்தக்க வகையில் வந்துகொண்டிருக்கின்றன. வேத உபநிடதக் கருத்துகள், மற்றும் புராணத் தொடர்கள், வேதிக் C.D வெளியீடு போன்றவை உதாரணமாகும். இந்தப் பத்திரிகை மூலம் ஜாதகப் பரிவர்த்தனை ஒரு உபயோகமான நல்ல முயற்சி. சமூக மேம்பாட்டிற்காக இப்பத்திரிகைமூலம் நம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மையங்கள், வேத ஸம்ரக்ஷ்ண நிதி ஏற்படக்கூடுமானால் சாலச் சிறந்தது. ஒவ்வொரு பிராமணனையும் அணுகி நாடார், முஸ்லிம் சமுகத்தினர் போல தனது வருவாயில் 1% தருமாறு இப்பத்திரிகை மூலம் ஏற்பாடுசெய்ய முடியுமானால் அதைவிடச் சிறந்த சமூக சேவை வேறொன்றும் இருக்காது. இந்நிதி ஏழை பிராமணர்களைக் கைதூக்கிவிடும். வாத, பிரதிவாத, பலத்த கருத்துவேறுபாடுகள் கொண்ட கட்டுரைகள் இப்பத்திரிகையில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது இந்தப் பத்திரிகை ஆரம்பித்ததின் நோக்கங்களுக்குப் பங்கம் வராமல் தடுக்கும் என்பதை ஆசிரியரின் கவனத்திற்குக் கொண்டு வரக் கடமைப்பட்டுள்ளேன்.
13.08.09 அன்று மணிவிழா கண்ட சர்மா சாஸ்திரிகள் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். “மணிவிழா” கண்ட ஆகஸ்டு மாதத்திலேயே அவர் எழுதிய கட்டுரை வராமல் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.
சர்மா அவர்கள் ‘சோ’வை இவ்வளவு சாடியிருக்க வேண்டாம். வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தில் புகுந்து, குடும்ப விஷயங்களில் தலையிடுவதைக் குறைத்து, ஸத்வ குணம் மேலோங்கி குடும்பத்தில் இருந்துகொண்டே ஸந்நியாசியாக வாழ்வது எப்படி என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டமாகவே “ஷஷ்டியப்த பூர்த்தி” அமைகிறது. ‘சோ’ எழுதிய மற்ற கட்டுரைகளையும் அவரது ஆற்றல்மிக்க மேடைப் பேச்சுகளையும் சர்மா சாஸ்திரிகள் அவர்கள் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
பிராமண, ஸத்திரிய, வைச்ய, சூத்ர என்ற நான்கு வர்ணங்கள் என்னால் தோற்றுவிக்கப்பட்டன. (சாதுர்வர்ணியம் மயா ஸ்ருஷ்டம்) என்று பகவான் கீதையில் கூறுகிறார். வேதத்தின் உயிர்நாடியாகிய ஸநாதன தர்மத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட நான்கில் ஒன்றான பிராமணனைப் பற்றித்தான் ‘சோ’ அவர்கள் தனது T.V. தொடரில் பேசுகிறார். நடமாடும் தெய்வமான பூஜ்ய ஸ்ரீ “காஞ்சி மாமுனிவர்” மிகுந்த வேதனையுடன் தெரிவித்திருப்பது போல யானை தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதைப் போல, தனது செய்கையாலேயே தன் இழிவுக்குத் தானே காரணமாகி முன்பு அரசனாலும் மற்றோராலும் மதிக்கப்பட்டு வந்த பிராமணன் தற்காலத்தில் எல்லோராலும் மிதிக்கப்படுகிறான், புறக்கணிக்கப்படுகிறான். இதே கருத்தைத்தான் சோ அவர்களும் வலியுறுத்துகின்றார்.
அந்தணர் என்றோர் அறவோர், கற்றல், கற்பித்தல், வேதல், வேட்டல், ஈதல், ஈட்டல் என்று “அறுதொழிலோர்” என்ற இலக்கணம் மாறி “அந்தணர்” என்பவரில் எண்ணற்ற பலர் ஏனைய வர்ணத்தவரின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் தங்களது போற்றத்தக்க வழிமுறைகளை மறந்தும் பண்பாடுகளைத் துறந்தும் இன்று ஒரு இழிவான நிலைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இதைத்தான் படம்பிடித்துக் காட்ட ‘சோ’ அவர்கள் திறம்பட முயன்றிருக்கிறார். T.V. முதலிய மீடியா பிராமணர்களால் மட்டுமின்றி ஏனைய அனைத்துத் தரப்பினராலும் உபயோகிக்கப் பட்டு வருகின்றன.
“எங்கே பிராமணன்” என்ற தலைப்பில் T.V. மூலம் அனைத்துத் தரப்பினரும் ஸநாதன தர்மம் என்றால் என்ன, இதிகாச புராணங்கள் என்ன கூறுகின்றன. மனித வாழ்க்கையில் சாஸ்திரங்கள் முக்கியத்துவம் என்ன, வேத உபநிடதங்கள் என்ன கூறுகின்றன என்பவை போன்ற கருத்துகளை அறிய முற்படுவது திண்ணம்.
Prof. T. Sankaranarayanan
Bangalore - 560 102
-000-
பிராமின் டுடே ஆசிரியர் அவர்களுக்கு நமஸ்காரங்கள். செப்டம்பர் இதழ் படித்தேன். (reflections)எங்கே பிராமணன் திரு “சோ” நடத்திய நாடகத்திற்கு ப்ரம்ம ஸ்ரீசர்மா அவர்கள் “இங்கே பிராமணன்” என்று எழுதினாலும் எழுதினார். அவரைப் பஞ்சு பஞ்சாக ஆக்கிவிட்டார்கள். ஸ்ரீ அனந்தராமன் அவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரத்னம் அவர்களும் ஸ்ரீவெங்கட், திருமதி பூமா கணேசன் ஏனையோரும் ‘சர்மாவையும், பிராமணர்களையும் பற்றி பூமியைத் தோண்டி அகழ்வாராய்ச்சியே செய்துவிட்டார்கள். இதற்கு அநேக எடுத்துக்காட்டுகள் வேறு. தற்பொழுது பிராம்மணர்கள் கர்மா செய்வதையும், நித்ய கர்மா மற்றும் சிரார்த்தம் போன்ற திதிகளையும் தங்கள் வசதிக்கேற்ப விடாமல் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்துடனும் ச்ரத்தையுடனும் செய்து வருவதை நாம் வரவேற்க வேண்டும். ஸ்ரீ அனந்தராமன் அவர்கள் குறிப்பிடுகிறார். “பூணூல் போட்டுக்கொண்டு மூன்று வேளை ஸந்த்யா வந்தனம் செய்து கொண்டிருப்ப தால் (பிராமணன்) யாருக்கும் பொருந்திவிடாது”. ஆஹா, அருமை ஐயா, உங்கள் கருத்தைப் படித்தவர்கள், ஒழுங்காக ஸந்த்யா வந்தனம் செய்து வருபவர்களும் இனி செய்யமாட்டார்கள். நாம் என்ன வர்ணத்தைச் சேர்ந்தவன் என்று சந்தேகம் கொண்டு நொந்து நூலாகிவிடுவான்.
ஸ்ரீ கிருஷ்ணரத்னம் ஒருபடி மேலே போகிறார். அவர் எழுதுகிறார். எந்த ப்ரம்மச்சாரி, கிரஹஸ்தன், ஸந்தி, மாத்யான்னிகம், ஸாயம் ஸந்தி செய்கிறான்? அமாவாசை/ மாளய பக்ஷ்ம், ச்ரார்த்தம் காலை 7.30 மணிக்குள் ஒரு சம்ப்ராதாயமாக நடைபெறுவதே உண்மை என்கிறார். சர்க்கரை வியாதி உள்ளவர்கள், லீவு கிடைக்காமல் பல மைல்கள் தாண்டி வேலைக்குச் செல்பவர் என்று பல இடையூடுகளுக்கு நடுவில் விடாமல் கர்மாவை செய்பவர்களை (பாராட்ட வேண்டாம் ஐயா) நினைத்து சந்தோஷப்படுங்கள்.
“வாத்யார்களுக்கு கிடைக்கும் 10x6 வேஷ்டிகளை செட்டாக தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறார்கள் தெரியுமா?” என்று இவர் வினவுகிறார். வேடிக்கை என்னவென்றால், கோவில்களில் பல ஏழை ஸ்வாமியாக இருக்கிறார்களாம். அதுவும் ஆடையின்றி. அந்தக் கோயில்களுக்கு வாத்யாரிடம் தள்ளுபடி விலையில் 10x6 வாங்கி ஸ்வாமிக்கு இவர் கொடுக்க கேட்டாராம். வாத்யார் தரமறுத்து விட்டாராம். ஒருவகையில் தர மறுத்த வாத்யார்கள் அறிவில் சிறந்தவர்கள் என்பேன். காரணம், ச்ரார்த்தம், பிதுர்கார்யம், தானவகை என்று பலவகையில் 10x6 பெற்றுக் கொள்ளுகிறார்கள்.
ச்ரார்த்தத்தில் ‘பிராமணாளாக’ அதாவது இறந்தவர்களை நினைத்து எள்ளைத் தூவி ஆவாஹனம் செய்து பிறகு பெற்ற 10x6 (அ) 9x5 வேஷ்டி அங்கவஸ்த்தரத்தை அவர்கள் தரித்த பிறகே ச்ரார்த்தம் நடைபெறுகிறது. அந்த வஸ்த்திரத்தை மனமுவந்து அந்த வாத்யார் கோவிலுக்குக் கொடுக்க மனம் வருமா? யோஜனை செய்து பாருங்கள். தள்ளுபடி விலையில் வாத்யார்கள் மட்டும் விற்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்.
எல்லாத் தொழில்களிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. (உதாரணம்) கட்டுமான பணியில் ஈடுபட்டுவரும், கொத்தனார், ஆசாரியார், டெரஸ் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு வீடு பூர்த்தியாகி கிரஹப்ரவேசம் நடைபெறும்போது கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊக்க போனஸ் வேஷ்டி சட்டைதுண்டு புடவை என்று கொடுக்கிறார்கள். இவை மிகக் குறைந்த விலையில் வாங்கப்படுபவை. இவற்றை ஒட்டு மொத்தமாக கடையில் போட்டு கிடைத்த பணம் அல்லது நல்ல துணி மணிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். வாத்யார்கள் சல்லடை போன்ற 10x6 வேஷ்டிகளைத் தான் தள்ளுபடி விலையில் கடையில் போடுகிறார்கள். நல்ல தரமுள்ள வேஷ்டி அ. வஸ்த்ரங்களை போடுவதில்லை.
நான் ப்ரோகிதன் இல்லை. வாத்யார்கள் என்ன விலையில் விற்கிறார்கள், எப்படி குடும்பம் நடத்துகிறார்கள் என்பதைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்து வருவது ஒரு க்ரஹஸ்தனின் வேலை யில்லை என்பதை அறியவும். தானம் வாங்கிப்பழகிப் போன ஒரு ஏழை பிராமணன், இரும்புச் சட்டியில் எண்ணெய் விட்டு அதைத் தானமாக பெற்றுவந்தவர் 10 இரும்புச் சட்டியை இரும்புக்கடையில் போட்டு கிடைத்ததை உப்பு, புளி, மிளகாய் வாங்குவது எப்படி தவறு என்று சொல்லமுடியும். இல்லாதவன் அதிகமாக இருப்பதை விற்று ஜீவனம் நடத்துகிறான். இது எப்படித் தவறாகும்?
பிராமணர்களும் கலப்புத் திருமணங்களும் படித்தேன். அருமை. மேலும் உயர்திரு. சுரேஷ் அவர்களின் அடக்கம், தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், பொறுமையாக, நிதானமாக மிகச்சிறந்த பதில்களைத் தந்ததோடு, அதிசயமாக ஆச்சர்யம் கலந்த ஒருபெரும் சாதனையை வேதத்திற்காகச் செய்துள்ளார்கள் என்பதை நினைக்கும்போது என் போன்றவர்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது. இந்தச் சின்ன வயசில் என்ன படிப்பு! எப்படியாகப்பட்ட வேதக் ஞானம்! உண்மையில் சுரேஷ் அவர்களின் பாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.
நன்றி கமஸ்காரம்
பழனி S. லக்ஷ்மிநரஸிம்மன் நாதஸ்வரம்
-000-
மீண்டும் “இதோ இங்கே பிராமணன்”
By சர்மா சாஸ்திரிகள்
எனது “இதோ இங்கே பிராமணன்” கட்டுரையை விமர்சித்து வந்துள்ள சில விமர்சனங்களுக்கு எனது அபிப்ராயத்தை எவ்வளவு சுருக்கமாக இந்தக் கட்டுரையில் கூற முடியுமோ அவ்வளவு சுருக்கமாகத் தெரிவிக்க முயல்கின்றேன்.
மையக் கருத்து
துவக்கத்திலேயே ஒரு விஷயத்தை அறுதியிட்டுக் கூற விரும்புகிறேன். எனது “இதோ இங்கே பிராமணன்” கட்டுரையின் மையக் கருத்தை எந்த விமர்சனக் கடிதமும் Contradict செய்யவேயில்லை. த்விஜன்ம விசேஷ வாழ்க்கையை அனுசரித்து வாழ்பவர்கள் இன்றும் பலர் உள்ளனர் என்றும், சோ கூறுவது போல் “பிராமணன் ஒருவர் கூட இன்று இல்லை”, என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்பதே எனது முந்தைய கட்டுரையின் ஆணித்தரமான வாதம்!
இந்த எனது கருத்தோடு ஒத்துப்போகிறவர்களிலும் சிலர் அங்கலாய்த்து விமர்சிப்பது என்னவென்றால் பிராமணீய வாழ்க்கையை வாழ்பவர்கள் இன்று மெஜாரிட்டியாக இல்லை என்பதுதான் இதுவும் ஒரு விதத்தில் negative outlookன் பிரதிபலிப்புதான். நல்லதைப் பார்ப்போமே, நல்லதை எடுத்துக்கொள்வோமே, நல்லதைக் கண்டு சந்தோஷப்படுவோமே நல்ல உதாரணங்களை நாலு பேருக்குச் சொல்வோமே என்றில்லாமல் “போச்சு போச்சு” என்று கூறி Negativeஆக ஏன் யோசிக்க வேண்டும்? ஒரு வேளை கூர்ந்து நோக்கினால் இந்த மாதிரி கூறுபவர்கள் பிராமணீயத்தில் பிடிப்பில்லாதவர்களாக இருக்கலாம். ஏன்? த்ரிகால சந்தியா வந்தனத்தைக்கூட செய்யாதவர்களாக இருக்கலாம். நான் யாரையும் குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். எனது யூகம்தான் இது.
பிராமணங்களில் இன்று பலர் “பிராமணர்களாக” வாழாமல் இருக்கலாம். நான் மறுக்க வில்லை. அதற்காக அப்பேர்பட்டவர்கள்தான் நமது சமுதாயத்தில் உள்ளார்கள் என்றும், பிராமண வாழ்க்கையை வாழத் துடிப்பவர்கள் இல்லை என்றும், ஒருவேளை சிலர் அப்படியிருந்தாலும் அவர்கள் மெஜாரிட்டியாக இல்லையென்றும் கூறுவதும் “Sadism” இல்லாமல் வேறு என்ன? பிராமணர்களில் எவ்வளவு பேர் பிராமணீயத்தைச் சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பட்டியலிட நான் தயாரில்லை. பிராமின் டுடே போன்ற பத்திரிகைகளும் இதற்காக நடத்தப்படவில்லை. மாற்றாக, பிராமணீயத்தை வளர்ப்பதுதான் இந்தக் காலத்தின் கட்டாயம் என நான் நினைக்கிறேன். அதைப் பற்றி யோசிப்போம்.
தனிப்பட்ட தாக்குதல்
சோவைப் பற்றி நான் எந்தக் கட்டத்திலும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. மாறாக அவரது தைரியமான, நேர்மையான பத்திரிகை மற்றும் சமுதாய வாழ்க்கையைக் கடந்த 30 ஆண்டுகளாக மிக அருகாமையில் இருந்து, கண்டு, வியந்து, அனுபவித்து வந்தவன் அடியேன். எல்லாவற்றிற்கும் மேல் அவர் ஒரு தேசாபிமானி என்பதை யாரால் மறுக்க முடியும்? இதை ஏற்கெனவே எனது முந்தைய கட்டுரையில் கோடிட்டுக் காட்டியுள்ளேன். என்னை விமர்சித்தவர்களில் என்னை கிண்டலாக “அறிவு ஜீவி” என்றும் “எண்ணெய்யில் போட்ட அப்பம் போல் குதிப்பதாகவும்” “வயிற்றெரிச்சல் படும் சர்மா” என்றும் “பக்குவமில்லாத சர்மா” என்றும், இன்னும் பலவிதமாக என்னைத் தனிப்பட்ட விதத்தில் விமர்சித்துள்ளார்கள். இவை தேவைதானா என்று அவர்கள் யோசிக்கட்டும். நான் இதனால் வருத்தப்படவில்லை. எனக்குப் பரிதாபம்தான் ஏற்படுகிறது.
மீண்டும் கூறுகின்றேன். சோவின் “பிராம்மணன் என்று ஒருத்தன்கூட இன்று இல்லை” என்ற கருத்தை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. எனது வாதம் Aruguments எல்லாம் இந்த ஒரு கருத்தைச் சுற்றித்தான். என்னை விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். எனது முந்தைய கட்டுரையை மீண்டும் ஒருமுறை திறந்த மனதுடன் படித்துப் பாருங்கள். உங்களது மனம் மாற வாய்ப்புண்டு. அடியேனையும் சரியாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படலாம்.
வைதிகாள்
“வைதிகாளின் வண்டவாளங்களை எடுத்துக் கூற என்னிடம் நிறைய சரக்கு உண்டு...” என்ற வகையில் ஒரு விமர்சனம் இடம்பெற்றுள்ளது. இந்த அன்பர் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது. வைதிகாளில் ஒரு சிலர் “அப்படி இப்படி” இருக்கலாம். யார் மறுத்தது? இன்று எந்தத் துறையில்தான் இம்மாதிரி அவலங்கள் நுழையவில்லை? காவல், நீதி, கல்வி, ஆலயம் மற்றும் அரசாங்கத்தின் பல துறைகளில் இன்று பல அவலங்களும், தர்ம விரோதங்களும் நுழையவில்லையா? அதற்காக அவற்றை வெறுக்கலாமா? காவல் துறை, நீதித் துறை போன்ற அனைத்தையும் இழுத்து மூடிவிடலாமா? இவை தேவையில்லையா? தலைவலி என்றால் மருந்தைத் தேடுவோமா அல்லது தலையைக் கன்னாபின்னா வென்று திட்டித் தீர்த்து தலையை வெட்டி எடுத்து விடுவோமா? வைதிகாள் இல்லாத நமது சமுதாயத்தை நாம் கற்பனை செய்ய முடியுமா?
இதைச் சொல்லும் அதே நேரத்தில் நான் “அப்படி இப்படி” என்று இருக்கும் வைதிகாளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். இன்றைய வினோதமான சமுதாயத்தின் தாக்கம் சில வைதிகாளிடம் காணப்படுவது உண்மைதான். அதற்காக பூர்வ, அபர பிரயோகங்களை யதோக்தமாக செய்துவைக்க பரோபகாரிகளான வைதிகாளை ஒட்டுமொத்தமாக தூஷிப்பது எந்த விதத்தில் நியாயம்?
இதில் வேதனை என்னவென்றால், இம்மாதிரி விமர்சிப்பவர்கள் நம்மவர்களாக இருப்பதுதான். நமக்கு நாமே எதிரியா?
நாம சங்கீர்த்தனம்
பஜனை கேட்கவரும் பெண்களின் ஆடை அலங்காரத்தைப் பற்றியும் ஒரு விமர்சனம். இதுவும் தேவையில்லாத விமர்சனம். அங்கே வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் எண்ணிக்கையையும், அவர்களின் மெய்மறந்த பக்தியையும் கண்டு என்னைப் போல் பலர் வியந்து ஆனந்தப்படுகின்றார்கள். அனால் இந்த விமர்சனத்தை முன்வைத்த நபர் (அம்மையார்?) போல் இருப்பவர்கள் அங்கே வந்திருந்த சிலரின் டிரஸ் போன்றவற்றை மட்டும் பார்த்து அங்கலாய்ப்பது சரியா? மேலும் எனது கட்டுரையிலும் நான் இந்த மாதிரி ஆடை அலங்காரங்களை அணிந்து வருபவர்களை நியாயப்படுத்தவில்லையே. நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபட்டுள்ள பாகவதர்களைப் பற்றித்தானே பெருமையாகக் கூறியுள்ளேன். பின் ஏன் இந்தத் தேவையில்லாத விமர்சனம்?
சோவின் மன்னிப்பு
“எங்கே பிராமணன்” சீரியலில் இறுதி எபிசோட் முடியும் தருவாயில் சோ அவர்கள் கைகூப்பி கூறியதை ஒருதடவை மீண்டும் இங்கு நினைவுகூருவோமா?
“நான் வேதம் பயின்றவன் அல்ல; கற்றவன் அல்ல; நான் மேற்கோள் காட்டிய நூல்களை அனைத்தையும் முழுமையாகப் படித்துவிட்டேன் என்றும் யாரும் நினைக்க வேண்டாம். Just referதான் செய்துள்ளேன் எனது கருத்தில் தவறு இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு...” இதைத்தானே நானும் எனது கட்டுரையில் கூறியுள்ளேன்.
அது மட்டுமா? சோவின் இறுதி punch வார்த்தை ஞாபகம் இருக்கின்றதா? “நான் தவறு செய்திருந்தால் அதனால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்” இது சோவின் டயலாக்.
இதற்கு முன் சோ அவர்கள் எத்தனையோ நாடகங்கள், படைப்புகள் படைத்துள்ளதை நாம் அறிவோம். அவற்றில் இம்மாதிரி சோ ஒன்றிலாவது கூறியுள்ளாரா? எனக்குத் தெரிந்து இல்லை. அப்படி இருக்கும்போது இந்தக் குறிப்பிட்ட படைப்பின் முடிவில் மட்டும் சோ ஏன் மன்னிப்புக் கோர வேண்டும்? என்னை விமர்சிப்பவர்கள் யோசிக்கட்டும்.
சாக்கடைக்கு வெளிச்சம்
சரி, பிராம்மணர்கள் பலர் இன்று பிராமணியத்திற்குப் புறம்பாக வாழ்க்கை நடத்துகிறார்களே என்று sincereஆகக் கவலைப்படுபவர்களுக்கு ஒரு வார்த்தை. இந்தக் கவலையில் உண்மை இல்லாமல் இல்லை. எந்த இல்லத்தில்தான் சாக்கடை இல்லை? அதற்காக சாக்கடையை நட்டநடுக் கூடத்தில் அமைத்து அதற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோமா? இல்லையே! அதே மாதிரிதான் ஒரு சமுதாய விஷயத்திலும் நமது கண்ணோட்டத்தைச் செலுத்த வேண்டும். ஒத்துக்கொள்கிறேன். தனிநபர்களின் சேர்க்கைதான் சமுதாயம். அதனால்தான் தனிநபரின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஆசார அனுஷ்டானங்களை விதித்துள்ளது. அனாசார தனிநபர்களை நினைத்து நினைத்து அழாமல், ஆசார சீலர்களைப் பார்த்து மகிழ்வோம். ஆசார சீலர்களை “ரோல் மாடல்”களாக வைத்துக்கொள்வோம். நாம் தனிப்பட்ட முறையில் முன்னேறியுள்ளோமா என்று யோசிப்போம். அதற்காக பகவானை வேண்டுவோம்.
Think Positive
“அப்படி இப்படி” இருக்கும் பிராமணர்களைப் பற்றி நினைத்து அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தால் எப்படி? இந்தக் கலியுகத்திலும் கூடுமானவரையில் ஆசார சீலர்களாகவும், வேத விற்பன்னர்களாகவும், வைதிகத்தில் ஈடுபட்டுப் பரோபகராம் செய்பவர்களாகவும், க்ருஹஸ்த தர்ம அடிப்படையில் வாழ்க்கை நடத்துபவர்களாகவும், தேவ பித்ரு கார்யங்களில் ச்ரத்தை இருப்பவர்களாகவும் வாழும் பலரைப் பார்த்து சந்தோஷப்படுவோமே; அவர்கள் போல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகாதா என்று ஏங்குவோமே! அதை விட்டுவிட்டு “போச்சு, போச்சு” “இல்லவே இல்லை;” “யாருமே ஒழுங்கு இல்லை” என்று புலம்புவது எந்த விதத்தில் சரி?
எனது கருத்தை விமர்சித்த ஒட்டுமித்த அன்பர்களுக்கு ஒரு வார்த்தை. சமுதாய அக்கறையுள்ளவர்கள் Negativeஆக யோசிக்கமாட்டார்கள். விதண்டாவாதத்தில் ஈடுபடமாட்டார்கள். Positiveஆக விஷயங்களை எடுத்தும் சொல்லி சமூகத்தினரை, குல தர்மத்தில் ஈடுபட (இதில் வர்ணம், ஜாதி என்று குழப்பிக்கொள்ள வேண்டாம். பிராமண வர்ணம், பிராமண ஜாதி என்பதெல்லாம் ஒன்றுதான். வேறு வேறு அல்ல. ஆசிரியர் விரும்பினால் இந்த வர்ணம், ஜாதியைப் பற்றிப் பிறகு தனிக் கட்டுரை எழுதத் தயார்.) செல்வார்கள். Healthy debate என்று வந்தால் சர்ச்சையில் ஈடுபட்டு சமுதாய மேன்மைக்குப் பாடுபடுபவர்கள்.
எண்ணிலடங்கா பிறவிகள் பல எடுத்து, நாம் பின் ஜன்மாக்களில் செய்த புண்ய கர்மாக்களின் பலனால்தான் இந்த பிராமண ஜன்மம் நமக்குக் கிடைத்துள்ளது. பெரியோர்கள் காட்டிய வழியில் அதற்குத்தக வாழ முயல்வோம். ஒருவேளை இந்த ஜன்மத்தில் முடியாவிட்டால் அடுத்த ஜன்மத்திலாவது நமக்கு அந்த பாக்யம் கிடைக்க இறைவனை வேண்டுவோம்.
நமது ஆச்சார்யாள் ஸ்ரீ ஸ்ரீ மஹா ஸ்வாமிகளின் ஒரு அமுதமொழியுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
“நான் எத்தனையோ அனுஷ்டானங்களைச் சொல்கிறேனே, அவற்றில் எவ்வளவு நாம் பண்ணுகிறோம் எவ்வளவு பண்ணவில்லை, எவ்வளவு பண்ண முடியும் என்று யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றையும் பண்ண முடியாவிட்டாலும், ஜீவனோபாயத்தை அனுசரித்து முடிந்தவைகளையாவது தவறாமல் பண்ண வேண்டும். மற்றவற்றைப் பண்ணவில்லையே என்று பச்சாதாபமாவது பட வேண்டும்.”
ஸ்ரீ சந்த்ரசேகரேந்த சரஸ்வதி ஸ்வாமிகள்
-000-
" Kandara Manikkam" page no 15 of your issue of August 09. I refer to the above item regarding "Dharmasaastra" compiled by Brahmasri Vaidyanatha deekshithar of Kandramanikkam lived in 16th century AD.
The above refered books of Sri Deekshithar i.e.,"Smruti muktaaphalam" or "Vaidyanatha deekshiteeyam" with latest additions of additional explanations in Tamizh with having quotations in devanagari script are under reprint. Our Guru peetam. i.e., Sri Kanchi Kamakoti Peetham has taken intiative in bringing back these books. The price for 6 or 7 volumes of the new ones is fixed as Rs.2500/-.
Interested people can contact Sri. Rama Sharma. Manager. Sri Kanchi Kamakoti Sankara mutt.No.1. Salai Street. Kanchi puram. 631 502. Phone. 9443405965 or 044-2723 1101.
Dr.venugopalan. Tiruvallur
-000-
Dear Editor
All Brahmins are cunning:
All Brahmins are cunning fellows. They talk well they are like knives cutting the butter, you would not even know what they are upto. The good Brahmins vanished 2000 years ago.
my id 200298@gmail.com
Namaskaram and thanks for the mail. pl explain what do you mean by cunning. Hope it is your personal experience to form such a opinion. As there are good and bad elements in every caste so also in Brahmins. I am sure you will agree
pl reply.
editor
-000-
Namaskaram, I appreciate your sincere help to uplift the Brahmins, your book is very much interesting,
Now in this period of internet era, your thoughts and your action is multiplied in many fold..
S. Ravichandran
