- The Magazine for Brahmins
“பொய்மையும் வாய்மை எனப்படும்”
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.
மேற்குறித்த “திருக்குறள்” வாக்குப்படி, பிறரது நலன் கருதிச் சொல்லப்படும் ஒரு பொய்யானது தவறாகக் கருதப்படாமல், அது உண்மையாகவே கொள்ளப்படும். அதே போல், சில சந்தர்ப்பங்களில் குற்றம் என்று தோன்றும் செயல்கள், உயர்ந்த நோக்கத்தோடு, பிறர் நலன் கருதி செய்யப்படுமேயானால், அது ஏற்புடையதாகவே அங்கீகரிக்கப்படும் என்று பாகவத புராணம் கூறுகிறது.
“க்வசித் குணோபி தோஷஸ்யாத் தோஷோபி விதினா குணா:
குணதோஷார்த்த நியம்: தத்பிதா மேவ பாததே||”
(ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் // அத். 21 சுலோ. 16)
வேத, தர்ம சாஸ்திர அடிப்படையிலே இயற்றப்பட்ட உன்னதமான ஸ்ரீமத வால்மீகி ராமாயணம் என்ற இதிஹாஸத்தில் சில கால கட்டங்களில் பேசப்படுவது, பொய்யுரை போலத் தோற்றமளித்தாலும், அதன் பின்னணியை நோக்கினால், அவை தவறானவை அல்ல என்றே கொள்ளப்படல் வேண்டும் என்பது புலப்படும்.
1. அயோத்யா காண்டம் அத்யாயம் 40இல் ஒரு நிகழ்ச்சி:
தசரத மன்னர் ஆணைப்படி, கானகம் செல்லத் தீர்மானித்து, மக்கள் எல்லோரும் கண்ணீர் வடிக்க, ராமர் ரதத்திலே ஏறி அமர்ந்தார். ரதம் புறப்படத் தயாரானது. புத்திர பாசம் மேலோங்க, பிரிவாற்றல் தாங்க முடியாத தசரதர்; தேரோட்டி சுமந்திரரை நோக்கி “ரதத்தை நிறுத்துங்கள்” என ஆணையிடுகிறார். ஆனால் ராமரோ சுமந்திரரைப் பார்த்து, “ரதத்தை விரைந்து செலுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுக்கிறார். இப்போது சுமந்திரரின் நிலை, சக்கரத்தின் நடுவிலே சிக்கிக்கொண்டது போல் பரிதாபமாக இருக்கிறது.
திஷ்டேதி ராஜா சுக்ரோச யாஹி யா ஹீதி ராகவே:|
சுமந்த்ரஸ்ய பபூ வாத்மா சக்ரயோரிவ சாந்தரா||
(அயோத்யா காண்டம் சர்கம் 40, சுலோ 46)
அப்போது ராமர் சுமந்திரரைப் பார்த்து; சாரதியாரே! இந்த மக்கள் வெள்ளத்திலே எழுந்த கூக்குரலால், மன்னரின் உத்தரவு காதில் விழவில்லை என்று கூறிச் சமாளித்து விடலாம், ரதம் வேகமாகப் போகட்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய, சாரதியும் தேரை விரைவாகச் செலுத்துகிறார்.
நாஸ் ரௌஷமிதி ராஜானம் உபாலப்தோபி வக்ஷ்யஸி|
வ்ரஜதோபி ஹயான் சீக்ரம் சோதயாமாஸ ஸாரது:||
(அயோத்யா காண்டம் சர்கம் 40, சுலோ 47 & 48)
இந்த இடத்திலே, ராமர் கூறியது பொய் இல்லையா? அதை ஏற்று சுமந்திரர் செயலாற்றியது சரியா? என்று சர்ச்சை எழுகிறது. அரசாட்சிப் பொறுப்பிலே இருக்கும் தசரதருக்குத்தான் சாரதிக்குக் கட்டளையிடும் உரிமை உண்டு. முடி சூட்டப்படாத ராமருக்குக் கட்டளையிடும் அதிகாரம் கிடையாது. அதை ஏற்க வேண்டிய அவசியமும் சுமந்திரருக்கு இல்லை. இருந்தாலும், ராமரை வனத்துக்கு அனுப்புகிறேன் என்று கைகேயிக்குக் கொடுத்த தசரதரின் சத்திய வார்த்தை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கமே, இந்த நிகழ்ச்சிக்குப் பின்னணியாக அமைந்துள்ளது. ஆகவே இதில் தவறு காண்பது சரியாகாது.
II
அயோத்யாகாண்டம் அத்யாயம் 107இல் ஒரு நிகழ்ச்சி:
தந்தை தசரத மன்னரின் உத்தரவை ஏற்று ராமர் கானகம் வந்தடைந்து சித்திரக் கூடம் என்ற இடத்திலே பர்ண சாலை அமைத்து வனவாசகத்தைத் தொடங்குகிறார்.
தாய் மாமனோடு கேகயராஜ்யம் சென்றிருந்த பரதன், வசிஷ்டர் அனுப்பிய தூதர்கள் துணையோடு தலைநகர் அயோத்தி திரும்புகிறார். தனது தாயார் கைகேயி கொண்ட ஆசை காரணமாக ராமர் கானகம் அனுப்பப்பட்டு, தனக்கு ராஜ்ய பாரிய செய்யும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டுத் துடிதுடித்த பரதன், ராமரைக் காட்டிலிருந்து திரும்ப அழைத்து வந்து அவரிடம் ராஜ்யத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற திடமான தீர்மானத்தோடு, அடர்ந்த காட்டிலே மந்தாகினீ நதிக்கரையில் அமைந்த சித்திரக் கூடம் வந்து சேர்ந்தார். ராமரிடம், ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தந்தையின் கட்டளையைப் புறக்கணிக்கப் புதல்வர்களுக்கு உரிமை இல்லை என்று எடுத்துக்கூறும் ராமர்; பரதனே! நமது தந்தையார் உனது தாயான கைகேயியைத் திருமணம் செய்துகொள்ளும் வேளையில், கன்யாசுல்கமாக, அவளுக்குப் பிறக்கும் புதல்வனுக்கே, தனக்குப்பின் ராஜ்யத்தை ஆளும் உரிமையைக் கொடுக்கிறேன் என்று வாக்களித்திருக்கிறார். அதன்படி ராஜ்யத்தை ஆளும் உரிமை உனக்குத்தான் என்று கூறிப் பரதனைக் கட்டாயப்படுத்துகிறாரே!
புரா ப்ராத: பிதா ந: ஸ மாதரம் தே ஸமுத்வஹன்|
மாதமஹே ஸமாஸ்ரௌ ஷீத் ராஜ்ய சுல்கம் அனுத்தமம்||
(அயோத்யாகாண்டம் சர்கம் 107, சுலோ3)
ராமர் இவ்வாறு அரசாளும் உரிமை பெற்றவனாவான் என்று கைகேயின் தந்தை அஸ்வபதி மன்னரோடு ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்குமேயானால், கைகேயி தேவியார் தேவா சுர யுத்தத்தில் தசரதரால் தனக்கு அளிக்கப்பட்ட வரங்களை வியாஜமாகக் கூறி, பரதனுக்கு "யுவராஜ" பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டிய தேவையே இல்லை/ தசரதரும் இந்த விஷயத்தில் மனக்கலக்கம் அடைவதற்கோ கைகேயியை நிந்தனை செய்வதிலோ நியாயம் இல்லையே// இப்படி ஒரு ஏற்பாடு ஒப்புக்கொள்ளப்பட்டிருக்குமேயானால், அது வசிஷ்டருக்கும், சுமந்திரருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லையே///
தர்மத்தின் மொத்த உருவமாகத் திகழ்கின்றவர், சத்தியத்திலிருந்து வழுவாதவர் என்றெல்லாம் போற்றப்படும் ராமர், இந்த இடத்திலே கூறியது அப்பட்டமான பொய்தானே, என்றுமே மோலோட்டமாகத் தோன்றினாலும், இது பொய்யாகாது!
ஒரு தாயார் அடம்பிடிக்கும் தன் குழந்தைக்கு நிலாவைக்காட்டி, அந்த நிலவைப் பிடித்துத் தருகிறேன் என்று ஏமாற்றிச் சோறு ஊட்டுகிறாளே? குழந்தையின் உடல் நலம் மற்றும் வளர்ச்சிதான் முக்கியம் என்பதால், இப்படி நடக்க முடியாதவையெல்லாம் கூறிக் குழந்தையை, திசை திருப்பிச் சமாதானப்படுத்துவது தர்ம விரோதம் ஆகாது.
அதே போல், “தந்தையின் கட்டளையான பரதன் ராஜ்யத்தை ஆள வேண்டும்” என்பதில் மாற்றம் வந்திடக் கூடாது; தந்தையின் வார்த்தை சத்தியமானது என்று நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கமே இதற்குப் பின்னணியாக இருப்பதால், ராமரின் வார்த்தை பொய்யுரை அல்ல, தர்ம விரோதமும் அல்ல என்றே கொண்டிடல் வேண்டும்.
III
சுந்தரகாண்டம் அத்யாயம் 42இல் ஒரு நிகழ்ச்சி:
இலங்கையிலே, அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் சீதா தேவியை, கடல் கடந்து வந்த ஆஞ்சனேயர் சந்தித்து, தான் ராம தூதன் என்பதை நிரூபித்து, நம்பிக்கையை ஏற்படுத்தியதோடு ராமர் பெயர் பொறித்த முத்திரை மோதிரத்தையும் கொடுத்து விட்டு, சீதாதேவியிடம் சூடாமணியைப் பெற்றுக்கொண்டு தனது விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினார். அதே பெரிய உருவத்தோடு அசோகவனத்தை அழித்தார். பயந்துபோன அரக்கிகள், சீதாதேவியிடம் உங்களோடு பேசிக்கொண்டிருந்த இந்த வானர வீரன் யார்? எதற்காக இங்கு வந்துள்ளான் என்று கேட்க, சீதாதேவியோ தனக்கு இந்த வானர வீரனை யாரென்றே தெரியாது, பாம்பின் கால் பாம்புக்குத்தான் தெரியும் என்பது போல், அரக்கிகளான உங்களுக்குத்தான் இவன் யாரென்று தெரியும் என்றும், தானும் இந்த வானரத்தைக் கண்டு பயந்துள்ளதாகவும் யாரோ ஒரு அரக்கனே மாய உருவில் வந்திருப்பான் போலும் என்று தெரிவிக்கிறாளே! இது அப்பட்டமான பொய்தானே.
தனக்கு முழுமையாகத் தெரிந்த ஒரு விஷயத்தை அப்படியே தெரியாது என்று மறுக்கிறாளே!
யூய மே வாலி ஜா னந்தி யோயம் யத்வா கரிஷ்யத்|
அஹிரேவ சி அஹே பாதான் விஜானாதி நஸம்ஸய:||
(சுந்தரகாண்டம் சர்கம் 42 சுலோ9)
அஹம ப்யஸ்ய பீதாஸ்மி நைவ ஜானாமி கோன்வயம்|
வேத்மி ராக்ஷஸ மே வைனம் காம ரூபிண மாகதம்||
(சுந்தரகாண்டம் சர்கம்42, சுலோ10)
விசேஷ தர்மம் கூறுவது யாதெனில்; நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமணம் தடைபட்டு விடுமோ என்ற ஒரு சூழ்நிலையில், அந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு சொல்லப்படும் ஒரு பொய்யோ, பிரிந்து வாழும் தம்பதிகளை ஒன்றுசேர்த்து வைப்பதற்காக, கூறப்படும் பொய்யோ, ஒருவனது செல்வமெல்லாம் பறிபோய்விடுமோ என்ற சூழ்நிலையில் அதைத் தடுப்பதற்காகச் சொல்லும் ஒரு பொய்யோ ஒருவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற சந்தர்ப்பத்தில், அதைத் தடுப்பதற்காகக் கூறப்படும் ஒரு பொய்யோ; (உத்வாஹகாலே, ரதிசம்ப்ரயோகே, பிராணாதயயே, சர்வ தனாபஹாரே) இவை எல்லாமே தர்ம விரோதமாகக் கருதப்படமாட்டாது.
இந்த இடத்திலே, வானர வீரன் ஆஞ்சனேயர் யார்? என்று தெரிந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினாலே அவரைக் காப்பாற்றும் உன்னத நோக்கத்தோடு, சீதாதேவியால் சொல்லப்பட்ட பொய் தவறாகக் கொள்ளப்படாமல், அதை சரியென்று ஏற்பதே உசிதமாகும்.
நெல்லை வைத்யநாதன்
சத்திய விஜயம் அல்லது மெய்ப் பொருள் விளக்கம்
பாரதி பக்கம்
