- The Magazine for Brahmins
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய
“சந்திரிகையின் கதை”
Maha Kavi Subramaniya Bharathy
cantirikaiyin katai
(The story stops abruptly in the 9th chapter, since the author passed away before completing the story. Thus this work is one of the last incomplete work of Bharathiyar. Bharathiyar who passed away in 1921. This work was first published in 1940. A distinctive feature of this work is extensive usage of the agaraharat Tamil.)Etext Preparation and Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland Source Acknowledgement: Mahakavi Bharathiyar KathaikaL, Sethu Alamelu Piracuram, Chennai -600 017, Tamilnadu, India © Project Madurai 2001 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
---000----
முதல் அத்தியாயம்
பூகம்பம்
பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புகள். எனவே, காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பட்சிகளின் ஒலிகள் கேட்டுக்கொண்டிருக்கும்.
இந்த ஊரில் மற்ற வீதிகளின்றும் ஒதுக்கமாக, மேற்றிசையில், நதிக்கருகே ஓர் அக்ரஹாரம் அதாவது பிராமணர் வீதி, இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் குழந்தைகளெல்லாம் எப்போதும் பட்சிகளின் நாதங்களுக்கிடையே வளர்ந்தது பற்றியோ வேறு எந்தக் காரணத்தாலோ மிகவும் இனிய குரலுடையனவாயிருந்தன. அக்குழந்தைகள்-விசேஷமாகப் பெண் குழந்தைகள்- பேசும்போது சாதாரணமாக நம்மைப் போலவே, மனுஷத் தமிழ் பாஷையே பேசுமெனினும், அந்த பாஷையைக் குயில்கள் போலவும் கிளிகள் போலவும் நாகணவாய்ப் புட்கள் போலவும் அற்புதமான குரலில் பேசின.
அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்கு பசுக்களும் ஒரு சில கழுதைகளும் மேய்ந்துகொண்டிருக்கும். அல்லது, சில பசுக்கள் கிருஷ்ணன் சந்நிதிக்கெதிரே படுத்துக்கொண்டு சுவாமியை நோக்கி ஜபம் பண்ணிக்கொண்டிருப்பது போல் அசைபோட்டுக்கொண்டிருக்கும். அவற்றின்மீது காக்கைகள் வந்து உண்ணிகளைக் கொத்தி இன்புறுத்தும். சில சமயங்களில் கண்ணோரத்தைக் கொத்துவது போல் விளையாடி மாட்டுக்குப் பொழுது போகச் செய்துகொண்டிருக்கும். இதையெல்லாம் மரக் கிளைகளின் மீதுள்ள பட்சிகள் பார்த்து வியப்புரை கூறிக்கொண்டிருக்கும்.
அன்புக்கும் அமைதிக்கும் சாந்திக்கும் அழகுக்கும் இலக்கியமாகத் திகழ்ந்தது அவ்வேளாண்குடியூர் அக்ரஹாரம். அங்கு, பெண்மக்கள் எல்லாரும் மகாசுந்தரிகள். ஆண்மக்கள் மிகவும் நல்ல குணமுடையோர், ஆனால் பெரும்பாலும் பரம ஏழைகள். பூர்வீக சொத்து, நிலம், தோட்டம் முதலியன-எல்லோருக்கும் சிறிது சிறிதுண்டு. ஆனால், அதிலிருந்து வரும் வரும்படி வெறுமே போஜனத்துக்குக்கூடக் காணாது. இதில் வேஷ்டிகள், புடவைகள், ரவிக்கைகள், பாவாடைகள், குடுமிக் கலியாணம், பூணூல் கலியாணம், விவாகங்கள், ருது ஸ்நானங்கள், ருது சாந்திகள், சீமந்தங்கள், பல பல பண்டிகைகள், உற்சவங்கள், விழாக்கள் என்பன ஓயாமல் நிகழுமாதலால், அவ்வூர் கிருஹஸ்தர்கள், மேன்மேலும் தம் நில முதலியன சுருங்கவும் வறுமை மேன்மேலும் வளரவும், ஏக்கம் பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், வயது முதிர்ந்தோரிடையே இத்தனை ஏக்கமும் மனக்குறைவும் குடிகொண்டிருந்தன என்ற செய்தி அவ்வூர்க் குழந்தைகளுக்குத் தெரியாது; பட்சிகளுக்குந் தெரியாது, கோயிலெதிரே எப்போதும் செழுமையாக வளர்ந்த புற்றரைகளில் மேய்ந்துகொண்டிருந்த பசுக்களுக்கும், கழுதைகளுக்கும் தெரியாது. இவை எப்போதும் மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும், பாட்டிலும், ஆனந்தக் களியிலும் மூழ்கிக் கிடந்தன.
இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லா பிராமணர்களைக் காட்டிலும் அதிக ஏழையான மகாலிங்கையர் என்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பம் மிகப் பெரிது. வீடு மிகச் சிறிது. அவருடைய கிழத் தாய் தந்தையர் இருவர்; விதவையான தங்கை ஒருத்தி; சுமார் முப்பது வயதுள்ள மனைவி ஒருத்தி; அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆறாவது பிரசவம் நெருங்கிய சமயம்.
இத்தனை பேருக்கும் ஆகாரம் வேண்டுமே? மகாலிங்கையருக்கு பூர்வ சொத்துக் கிடையாது. இளமையும், ஊக்கமும், எப்படியேனும் பணம் சம்பாதிக்கலாமென்ற நம்பிக்கையும் அவரை விட்டுப் பிரிந்து நெடுங்காலமாய் விட்டது. அவருக்கு சுமார் நாற்பது வயதுக்கு மேலாகவில்லை. அதற்குள்ளே குழந்தைகளின் தொகை வலியாலும், மனைவியின் வாய் வலியாலும், தாய் தந்தையரின் நோய் வலியாலும், விதவைத் தங்கையின் இளமை வலியாலும் மகாலிங்கையர் மனத்துயர் பெருகித் தலைமயிரெல்லாம் அன்னத் தூவிபோல் நரைத்துக் கூனிக்குறுகி மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழி வீழ்ந்து முகம் சுருங்கித் திரை கொண்டு, இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸமிகுதியால் மேகநோய் கொண்டு, முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப்படைகளுடையவராய் விளங்கினார்.
இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்திரவில், வானம் மைபோல் இருண்டிருந்தது. நட்சத்திரங்களெவையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கிராமத்தாரெல்லாரும் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கிடந்தார்கள். வெளியே பெருமழையும் சூறைக் காற்றும் மிகவும் உக்ரமாக வீசத் தொடங்கின. இரண்டு கணத்துக்கு ஒரு முறை, உலகம் தகர்ந்துவிடச் செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது. தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்துக் குன்றுகள் ஒன்றுக்கொன்று மோதிச் சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று.
அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கியிருந்த ஜனங்கள் இன்றுடன் உலகம் முடிந்து போய்விட்டது என்று தம் மனதில் நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். குழந்தைகளெல்லாம் பயமிகுதியால் கோ கோ என்று அலறின. மாதர்கள் புலம்பினர். ஆண்மக்கள் விம்மினர். சூறைக்காற்றின் ஆர்ப்பு மிகுதிப்பட்டது.
இப்படியிருக்கையில் பூகம்பம் தொடங்கிற்று. அந்த அக்ரஹாரத்திலுள்ள வீடுகளெல்லாம் பழைய வீடுகள். அத்தனை வீடுகளும் சிதறிப் போயின. அத்தனை ஜனங்களும் மடிந்து போயினர்.
மகாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை. வீட்டு ரேழியில் கூடியிருந்த கிழவர், கிழவி, மகாலிங்கையர், அவருடைய ஐந்து பெண் குழந்தைகள் - எல்லார்மீதும் வீடு விழுந்து, அவர்களத்தனை பேரும் பிணங்களாகக் கிடந்தனர்.
தொடரும்
பொய்மையும் வாய்மை எனப்படும்
ஏமா(ற்)றாதே
