- The Magazine for Brahmins
நீங்கா நினைவலைகள்
திருவையாறு என்றாலே ஐந்து நதிகள் சங்கமமாகும் இடம். திரு+ஐ+ஆறு. இங்கு உள்ள சிவாலயம் மிகச் சிறப்பு வாய்ந்த பழமைச் சின்னம். சிவன் பஞ்சநதிஸ்வரர் உடன் உறை பார்வதி-தர்மாம்பாள். சமயக் குரவர்கள் பாடிய திருத்தலம், புண்ணியபூமி.திருவாரூரில் பிறந்த தியாகப் பிர்மம் திருவையாற்றிலே குடிபுகுந்து ஸ்ரீ ராமரை தன் இஷ்டத் தெய்வமாக நினைத்து மனம் உருகப் பாடி அந்த ராமரே காட்சிகொடுத்த புண்ணிய பூமி திருவையாறு.
கர்நாடக இசை என்றாலே நமக்கு நினைவில் வருவது சத்குரு ஸ்ரீ தியாகராஜர் அவர்கள். அவருடைய இசையில் ஈடுபாடுகொண்டு அவரை மானசீகக் குருவாகவும், தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்த பெண்மணி பெங்களூர் திருமதி. நாகரத்தனம்மாள்.
என் சிறு வயதில் என் தந்தை ஆங்கிலேயர் காலத்தில் திருவையாற்றில் அரசுப் பணியில் (PWD) வேலை செய்தார். என் தந்தைக்கும் ஸ்ரீ தியாக பிர்மத்தின் மேல் அளவு கடந்த பக்தி, மரியாதையும்கூட.
அந்தக் காலகட்டத்தில் நாகரத்தினம்மாளுக்குக் கனவில் தியாக பிருமம் தோன்றி அருளாசி புரிந்தார். அதன் பொருட்டு பெங்களூரிலிருந்து திருவையாறுக்கு வந்து தன்னுடைய முழு கவனத்தைச் செலுத்தி தியாகராஜர் மணிமண்டபத்தைச் சிறப்புறச் செய்ய அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பல.
என் தந்தையிடம் தேவையான அரசு உதவிகளைப் பெற்று மேலும் சிறப்புற பாடகர்கள் பாடும் மேடை, இருந்த பள்ளமான இடத்தை மேடாக்கி சுடுகாடு என்ற இடம் மாறி, இசையான் பிறப்பிடமாகச் செய்த பெருமை இவருக்கு உண்டு. பாடகர்கள் வித்வான்கள் இவர்கள் தங்க, உணவு இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்துகொடுத்த பெருமை என் தந்தைக்கும் உண்டு.
நான் 9 வயதுச் சிறுவனாக இருந்த சமயத்தில் அவர் எனக்கு நல்ல பல கதைகளைச் சொல்லிக் காவிரியின் கரையில் உட்கார்ந்து வேலைகளை மேற்பார்வை செய்வார்.
என்னுடைய நினைவில் நின்ற அந்த மூதாட்டியின் திருவுருவத்தை இன்று 61 ஆண்டுகளுக்கு பிறகு “பிராமின் டுடே”யில் ஓவியமாக வரைந்து மேலும் அவருக்குப் பெருமை சேர்த்துள்ளதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
வாழ்க அவர் புகழ்!
V. ரகுநாத்-ஓவியர்
--- 000-----
பிராமின் டுடே இதழ் ஓவியர் திரு. ரகுநாத் காவிரிக் கரையில் பிறந்த கணக்கற்ற கலைஞர்களில் ஒருவர். சிறுவயது முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்டு அத்துறையில் பெரும் சிகரங்களை எட்டிய ரகுநாத் பல பத்திரிகைகளில் கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்தவர்.
பிராமின் டுடே இதழ் மூத்த வாசகர் திரு. KURA. ராமமூர்த்தி அவர்களின் கீழ் பணியாற்றியவர். ஓவியரை நமக்கு அறிமுகப்படுத்தி நம் இதழுக்கு பெரும் உதவிசெய்துள்ள KURA.அவர்களுக்கு இக்கட்டுரையைச் சமர்ப்பிக்கிறோம்.
