- The Magazine for Brahmins
நவம்பர் 2011 இதழில் Reflection என்ற பகுதியில் ஒரு வாசகர் “பிராமின் டுடே” இதழின் அடுத்த கட்ட முயற்சியாக வெளிநாட்டு மொழிகள் French, German போன்ற மொழிகளையும் திறமை வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்றுத்தர (‘குறைந்த கட்டணத்தில்’ அது ரொம்ப முக்கியம்!) முயன்றால் நன்றாக இருக்கும் என்று தமது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
தங்கள் சிறப்பான பத்திரிகையில் பிராமணத் தர்மங்களைப் பற்றி எழுதுவதை மட்டும் செய்துகொண்டிராமல் அதிகமான லௌகீக விஷயங்களை முன்னிலைப்படுத்தி எழுதுவதால் ஏற்படும் விளைவு இது. பிராமண இளைஞர்களும் யுவதிகளும் நமது பாரம்பரியமான ஸம்ஸ்கிருத மொழி கற்க “பிராமின் டுடே” முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
பிராமணர்கள் ஸம்ஸ்கிருத மொழி கற்பதுதான் சுயகௌரவமும் இன கர்வமும் என்பதை இன்றைய நவீன பிராமணர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சி. முரளி, சென்னை 24.
---0000---
நவம்பர் இதழில் சதம் கண்ட சாஸ்திர சஞ்சிகை “வைதீக ஸ்ரீ” என்ற தலைப்பில் வைதீக ஸ்ரீ மாதப் பத்திரிகையைப் பற்றி கட்டுரையைச் சிலாக்கியமாக எழுதியிருந்தீர்கள். நன்றி. ஆனால் அந்தப் பத்திரிகையை எவ்வாறு தருவிப்பது, சந்தா விவரங்கள், முகவரி இவற்றைக் குறிப்பிடாமல் இருப்பதால் அந்தப் பத்திரிகையைப் படித்துப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இம்மாதிரி ஆர்வத்தைத் தூண்டும் பாராட்டுக் கட்டுரைகளைப் பிரசுரம் செய்யும்போது முழுமையான விவரங்களையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சங்கர வெங்கடராமன், சென்னை-93
Vaithikasri
Old No. 488, Old No. 175, T.T.K Road, Alwarpet, Chennai - 600018.
Ph: 044-24361210
---0000---
நவம்பர் 2011 இதழில் அட்டைப்படக் கட்டுரையான “பிராம்மணர்களும் பெண் விடுதலையும்” (Brahmins and women's Liberation) மிக நன்றாக ஒலிக்கப்பட்டிருந்தது என்பது மட்டுமல்ல அதைவிட அற்புதம் அந்தக் கட்டுரைக்கான அட்டைப்பட கார்ட்டூன்கள். பெண் விடுதலை என்றால் உடல் உழைப்பு என்ற இயற்கையான தேகாப் பியாசங்களான வீடு பெருக்குதல், கிணற்றிலிருந்து ஜகடை, கயிறு, வாளி இவற்றுடன் கூடிய அமைப்பைப் பயன்படுத்தி தண்ணீர் சேந்துதல், தரையில் அல்லது ஒரு மணையின்மீது அமர்ந்து கல் இயந்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு அரைத்துச் சலித்துக் கலப்படமில்லாத சுத்தமான சமையலறை மூலப்பொருட்களை ஏற்பாடு செய்துகொள்வது போன்றவற்றிலிருந்து முழுமையான விடுதலை என்று தவறாகப் பொருள்படுத்திக்கொள்ளப்படுவது, யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக்கொள்வது போன்றது என்று சொல்வது மிகையல்ல. கம்ப்யூட்டர் மானிட்டர் திரையின் முன்பு கையில்லாத ரவிக்கையும் விரித்துப்போட்ட கூந்தலுமான அலங்கோல வேஷ பூஷணங்களுமாக வரை யப்பட்ட கார்ட்டூன் படமும் பெண் விடுதலை என்பது இவைதான் என்று புரிந்துகொள்ளப்பட்டிருப்பதை உள்ளது உள்ளபடி விவரிக்கின்றது.
ஆளவந்தான், அண்ணாநகர்.
---0000---
அன்புடையீர்,
நமஸ்காரம்
“பிராமின் டுடே” அக்டோபர் 2011 இதழில் ஸ்ரீ குருராகவேந்திரன் எழுதியுள்ள Reflectionsஐ ஒட்டிச் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.
வாத்யார் சம்பாவனை என்பது ஒவ்வொருவரின் சக்தி, விருப்பம், கர்மாவில் ஈடுபாடு இவற்றைப் பொருத்தது. நல்ல யோக்யதை உள்ள வாத்யார்களுக்குக் கொடுப்பதற்கு The sky is the limit. இருப்பவர்கள் தாராளமாகக் கொடுக்க வேண்டும். அவர் களிடம் வாத்யார்கள் கேட்டு வாங்குவதிலும் தப்பு இல்லை. ஆனால் இல்லாதவர்களிடம் கறாராக Demand செய்யாமல் அவர்கள் சக்தியானுசாரம் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு பிராமணச் சங்கத்தின் மூலமாக வாத்யார்களையும், கலந்துகொண்டு ஒவ்வொரு Functionக்கும் ஒரு Minimum Rate fix பண்ணினால்கூட நல்லதுதான்.
பூஜை புனஸ்காரங்களில் ஆர்வம்கொண்ட ஓரளவு வசதி படைத்த பிராமணர்கள் ஏழை மாணவர்களின் கல்விக்கு ஏழைக் குடும்பத்துப் பெண்களின் விவாகத்துக்கும் இயன்ற அளவு Donate செய்ய வேண்டும்.
விவாகம் நிச்சயம் ஆன ஏழைப் பெண்களுக்குத் தாலி தானம் செய்வது ஒரு மிகச் சிறந்த தர்மம். இன்றைய இளைஞர்கள்/ இளைஞிகளிடம் உதவி செய்யும் மனம் நிறையவே உள்ளது.
“பிராமின் டுடே”யில் அத்தகைய Deserving Candidates Listஐ வெளியிட்டால் உதவித் தொகை வழங்க ஏதுவாக இருக்கும். அவ்வாறு உதவி செய்வோர்களின் பெயரையும் உங்கள் இதழில் வெளியிட்டால் அது மற்றவர்களுக்கும் ஒரு Encouragementஆக இருக்கும். Tambras முதல் மாநாடு திருச்சி National College Higher Secondary Schoolஇல் திரு. C.G.V; Late Sri. N. காசிராமன், Late ஆடிட்டர். K. சந்தானம் மற்றும் பலருடைய பெரு முயற்சியால் வெற்றிகரமாக நடைபெற்றது.
நகரத்தார்கள் கடைப்பிடித்து வரும் பழக்கம் மெச்சற்பாலது. ஒவ்வொரு வீட்டினர்களும். அவரவர்களுக்கு உரிய கோயிலில் (பிள்ளையார்பட்டி, இளையாத்தங்குடி etc.) பதிவு செய்துகொள்ள வேண்டும். திருமணம் ஆகிவிட்டால் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பதிவுசெய்துகொள்ள வேண்டும். இதுபோல நாமும் ஒரு முறையை உருவாக்கினால் என்ன?
Old is Gold என்பார்கள். பெரியவர்களைப் புறக்கணிக்காது அவர்கள் ஆசியுடன் இளைய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படையுங்கள் அவர்கள் பெரியவர்களின் வழிகாட்டலில் நல்ல காரியங்களைச் செய்ய ஊக்குவிப்போம்.
V. நடராஜன், திருச்சி
---0000---
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்.
‘பிராமின் டுடே’ பத்திரிகை நம் பிராமணச் சமூகத்தின் சீரழிவைப் பல இதழ்களில் அலசி ஆராய்ந்து வருகிறது. இது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ என்று தெரிகிற உண்மை. நம்முடைய முக்கியமான கடமைகளை நாம் கைகழுவிவிட்டது அதற்கு முக்கியக் காரணம் என்பதைத்தான் நாம் உணர்ந்திருக்கிறோமா என்று தெரியவில்லை.
சந்தியாவந்தனம், ச்ராத்த தர்ப்பணாதிகள் குலகுரு, குலதெய்வ ஆராதனை, சிறிய அளவிலாவது தெரிந்தவரை நித்ய பூஜை இவையே குறைந்தபட்சக் கடமைகளாகப் பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் ஆண்களுக்கே விதிக்கப்பட்டிருந்தாலும் மனைவி அவற்றுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது ஸ்திரீயின் கடமை. இனியாவது இவற்றைத் தவறாமல் செய்து வருவேன் என்ற சங்கல்பத்தை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டாலே நம் சமூகம் மேலும் பள்ளத்தை நோக்கிப் போவதிலிருந்து காப்பாற்றிக்கொள்ளலாம். பொருளாதார ரீதியாக எத்தனையோ முன்னேறியிருந்தாலும் பெரியவர்களுக்குள் பிரச்சினை, விவாஹப் பிரச்சினை, விவாகரத்துப் பிரச்சினை, குழந்தையில்லா பிரச்சினை, ஊனமுள்ள குழந்தைகள் பிரச்சினை, கலப்புத் திருமணப் பிரச்சினை போன்ற ஏதாவது ஒன்றில் மாட்டிக்கொள்ளாத பிராமணக் குடும்பங்கள் இருந்தால் அது மிகவும் அபூர்வமே. அப்படியிருந்தால் அதற்குத் தங்களுடைய குறைந்தபட்ச கடமைகளை அவர்கள் ஓரளவாவது ஆற்றிய குடும்பமாக இருப்பர். ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கப்போகிறோம். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முயற்சிக்கலாமே!
இந்தக் கடமையைச் செய்ய அடிப்படை சமஸ்கிருத அறிவு அவசியம் என்பதைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறைந்தபட்சம் அட்சரங்கள், அவற்றை உச்சரிக்கும் விதம் இந்த அறிவுகூடப் போதும். இந்த நிலைமை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. பல ஸம்ஸ்க்ருத வகுப்புகள் நடந்தாலும் அதற்கு வரும் பிராமணர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இந்த நிலைமை மாற ‘பிராமின் டுடே’ செய்ய வேண்டிய கடமை ஒன்றிருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்தின் அவசியத்தைப் பிராமணர்கள் உணரச்செய்து அதைக் கற்றுக்கொள்வதற்கும் வசதி ஏற்படுத்துவதுதான் அது. பல வகுப்புகள் தாங்கள் நடத்தத் தீர்மானித்திருந்தும் அதில் ‘சம்ஸ்க்ருதம்’ சேர்க்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. வாசகர்களும் ஃப்ரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளும் கற்றுக்கொடுக்கக்கூடாதா என்று கேட்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. இதைச் செய்யாமல் வேறு என்ன செய்தாலும் நம் பிராமணச் சமூகத்தின் சீரழிவைத் தடுக்க யாராலும் முடியாது என்பது உறுதி. சர்வ வல்லமை பொருந்திய குருநாதரும் அம்பாளும்தான் எல்லோர் மனத்திலும் சத்தியத்தை உணர்த்தி நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
நன்றியுடன்
வஸந்தி
