Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT95 Brahmin Today - January 2012 பிராமின் டுடே - ஜனவரி 2012     அட்டவணை






The Magazine for Brahmins




Sparks

Storm in the Tea Cup

காப்பி கோப்பைக்குள் ஒரு கலாட்டா தமிழகப் பிராமணர்கள் அனைவருக்கும் பொதுவான மற்றும் அவசரமாக, ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு சிக்கல் பற்றி இம்மாத Sparkபகுதியில் விவாதிக்க விரும்புகிறோம்.

உலகம் போகும் போக்கினை உணராமல், நம் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஏராளமான தற்கால இன்னல்கள் பற்றி எண்ணாமல், தங்கள் செயல்பாடுகளையும் திட்டங்களையும் மட்டுமே முன்னிறுத்த விழையும் தமிழ்நாடு பிராமண அமைப்புகளைப் பற்றி ‘மனம் திறந்த’ நம் சில மதிப்பீடுகளை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வது அவசியம்.

“தானே அழகி, தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணையை” என்ற கதையாய், ஏற்கனவே தமிழ்நாடு பிராமண மக்கள்தொகையின் பெரும்பான்மையினர் அங்கத்தினர்களாக இல்லாத ‘தாம்ப்ராஸ்’ என்ற ‘உழக்கில்’ கிழக்கு, மேற்கு தோன்றியிருப்பது நம்மை வேதனைப்படுத்துகிறது.

பார்ப்பனர்கள் எல்லாம் ‘பயந்தாங் கொளிகளாக’ அஞ்சி கிடந்த அந்த நாளில், ஆர்ப்பரித்து, “எங்களுக்கும் ஒரு இயக்கம் உண்டு” என்று உருவான தாம்ப்ராஸ் இயக்கத்தை நாம் ஏளனம் செய்யவில்லை. குடுமியை பிடித்து, கடும் சொற்கள் பேசி, சடுதியில் பூணூல் அறுத்து, புரட்டர்கள் பொய் சாகசம் செய்த சரித்திர தருணத்தில், விடுதலை இயக்கமாக, வீரத்தை காட்டும் ஒளி விளக்காக, தோன்றிய தாம்ப்ராஸ் இயக்கத்தின் பெருமையை நாம் உணராமல் இல்லை.

எந்த வித சுய இலாபமும் இன்றி, சொந்த பந்தங்களைக்கூட சரியாக கவனிக்காமல் எதிர்வந்த எல்லா இடர்பாடுகளையும் இன்முகத்தோடு ஏற்று இந்த இயக்கத்தை உருவாக்கிய தலைவர்கள் பட்டியல் மிக நீளமானது. இவ்வியக்கத்தின் நிறுவன செயலர் திரு. சின்னை.வெங்கட்ராமன் மற்றும் நிறுவன தலைவர்கள் அமரர். காசிராமன், திரு. CG வெங்கடராமன் போன்றவர்களும் இவ்வியக்கத்தின் எழுச்சிக்கு பாடுபட்ட திருவொற்றியூர் நாராயணன், திரு. தஞ்சை. ராமமூர்த்தி, திரு. S. கிருஷ்ணமூர்த்தி, திரு. K R சீனிவாசன், பம்மல். ராமகிருஷ்ணன், விருதுநகர். கண்ணபிரான், நெல்லை. சீதா ராமன், திரு. கல்யாணராமன் போன்ற பட்டியல்களுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ பெரியவர்கள் செய்த தியாகங்களும் பட்ட கஷ்டங்களும் இன்று பரிகாசத்திற்கும் பரிதாபத்திற்கும் உட்படுத்தப்பட்டிருப்பது நம் உள்ளத்தை உலுக்குகிறது.

‘சித்தாந்தங்களின் அடிப்படையிலும் செயல்திட்ட வேறுபாடுகளினாலும் பொதுநல அமைப்புகள் பிளவுப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிடினும் புரிந்துக்கொள்ள முடியும்’. அவ்வாறு பிளவுபடும் பிரிவுகள், ஒன்றோடு ஒன்று இணைந்து, சிறிது காலத்திற்கு பிறகு பாடுபடுவதை புரிந்துக்கொள்ள இயலாவிட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இங்கு நடக்கும் கதை விசித்திரமானது.

தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, இயக்க செயல்பாடுகள் நடைபெற தொடங்குவது எல்லா இயக்கங்களுக்கும் பொதுவானது எனினும் அதற்கு ஒரு எல்லை உண்டு. ‘இம்’ என்றால் சிறைவாசம் என்று ஆட்சி செய்த அரசர்களும் அமைப்புகளும் இருந்த இடம் தெரியாமல் அடியோடு அழிந்துவிட்டது நாம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்று படிப்பினை.

நடந்து முடிந்த கடந்த தாம்ப்ராஸ் தலைவர் தேர்தலுக்கு பிறகு, அவ்வியக்கத்தின்மீது படிந்த கரும்புள்ளிகள் பற்றி நடு நிலைமையோடு சில கருத்துகளை வெளிப்படுத்துவது, இடிந்துவிடாமல் அந்த மாளிகையைக் காக்கும் விதமாகவே கருதப்பட வேண்டும். “யாருடைய தவறு, யார் செய்தது சரி” என்ற அக்கப்போரினை தொடங்கி, சில பேர்களைப் பழிப்பது நம் நோக்கமல்ல. ஊர் இரண்டுபட்டால் உல்லாசம் அடைவது தேர்க் கோடியில் இருக்கும் கூத்தாடிதான் என்பதை நாம் சொல்லி எவரும் தெரிந்துகொள்ளத் தேவையில்லை.

‘எழுச்சி நாயகனாக’ விளங்கி ஒரு பிரம்மாண்டமான மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய பெருமைக்குத் தற்போதைய தாம்பிராஸ் தலைவர் முற்றிலும் தகுதியானவர் என்பதில் இரண்டுவிதக் கருத்துக்களுக்கு இடமில்லை. முனைப்புடன் எல்லாக் கிளைகளின் தலைவர்களையும் செயல்வீரர்களையும் சென்னைக்கு அழைத்து வந்து நம் சமூக வலிமையை உலகு அனைத்திற்கும் காட்டியச் சிறிது காலத்திற்குள்ளேயே, அவர்களுடன் பிணக்குக் காட்டி, இயக்கத்துடனான அவர்களின் நீண்ட தொடர்பு கணக்கை தலைவர் முடிக்க முயன்றது வருந்ததக்கது அல்லவா?

“வாரது வந்த மாமணியாய்” வளர்ந்து கொண்டிருந்த தாம்ப்ராஸ் இயக்கத்தை ‘போராடும் உட்குழுக்கள் மிகுந்த தேசிய கட்சியாக’ மாற்ற முயலும் ஒவ்வொரு தாம்பிராஸ் உறுப்பினர்களும், வேரோடு அந்த விருட்சத்தைச் சாய்க்கும் வேண்டாத வேலையை விரும்பிச்செய்பவர்கள் அல்லவா.

‘வலக்கரமாகச் சமீபம்வரை வலம் வந்தவர் எல்லாம் தற்போது அனைவருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தும் காரியங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது இல்லையா?

இவை போன்ற, நடுநிலையான, நல்ல சிந்தனைகளை உடைய சுமார் 80 பேர்கள் பொதுவான ஒரே இடத்தில் பொறுமையுடன் கூடி இந்தச் சிக்கலை அவிழ்ப்பதற்கான ஒரு முயற்சியில் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பு நமக்குக் கிட்டியது. இது பற்றி விவாதிக்க, ஒரு கூட்டத்தை திரு. வரதராஜன் (தலைவர், ரெட்டேரி கிளை தாம்பிராஸ் [பதிவு] ஏற்பாடு செய்திருந்தார். திரு. ஜானகிராமன், திரு. வைத்தியனாதன், திரு. பரசுராமன், திரு. ரவிச்சந்திரன் (ஆடிட்டர் மற்றும் ஆலோசகர்) திரு. தஞ்சை ராமமூர்த்தி, திரு. சின்னை. வெங்கட்டராமன், திரு. கல்யானராமன், திருமதி. பத்மினி ரவிச்சந்திரன் (ஆசிரியர் சுதேசி பல்சுவை இதழ்) மற்றும் பல மாவட்ட தாம்ப்ராஸ் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தின் அடிப்படையில் சில கருத்துகளை நாம் சொல்ல விரும்புகிறோம்.

“உடைந்த கண்ணாடி ஒட்டாது”, “அடைந்த அவமானம் போதாதா”, “நடந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா”, “கடந்துவிட்டால் கட்டுப்பாட்டுக் கோட்டை, அதற்கான தண்டனையை அடைந்துதான் தீரவேண்டும்” என்றெல்லாம் நாம் கேட்ட தாம்ப்ராஸின் இருபிரிவு வசனங்களை புறம் தள்ளவில்லை. தாம்ப்ராஸ் வளர்ச்சிக்காக மனத்தாலும் உடலாலும் பணத்தாலும் சேவை செய்த ஒவ்வொரு பிராமண உள்ளங்களின் ஆதங்கத்தையும் மனக்குமுறல்களையும் நாம் மதிக்கிறோம். முற்றிலுமாக மனதில் ஏற்கிறோம். அவர்கள் சொல்கின்ற வாத பிரதிவாதங்களையும் நியாய, அநியாயங்களையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் ஒரு முக்கியமான நமது கருத்தை மட்டும் முன்வைக்க விரும்புகிறோம்.

தனிமனித விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒரே இயக்கமாக தாம்ப்ராஸ் இயங்க முடியும் என்றால் அதற்கு எல்லோரும் முதலில் பாடுபடுவோம். பிரிவினை நடவடிக்கைகளை தவிர்ப்போம். அறிக்கை-பதில் அறிக்கை, கண்டனம், அதிக கண்டணம், தனி நபர் புகழ், தனிநபர் இகழ் இவையெல்லாம், ‘வேதத்தை வாழ்க்கை நெறியாககொண்டிருப்பவர்கள்’ என்று கருதப்படுகின்ற பிராமணர்களாகிய நமக்கு ஏற்புடையது அல்ல. தன்னை அழித்துக்கொண்டு உலகத்திற்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திகளாக விளங்கவேண்டிய பிராமணர்களாகிய நாம், பணம், புகழ், பதவி போன்ற பிணம் தின்னும் கழுகுகளாகத் தெரியத் துவங்குவது அழுகுகின்ற நமது சமுதாயத்தின் அறிகுறிகளே இன்றி வேறல்ல.

ஒன்றுபட்டு இயங்க உள்ளங்கள் இடம் தரவில்லை என்றால், “சென்று விடுங்கள் அவரவர் பாதையில்” பிறர்மீது அவதூறு ஒன்றும் சொல்லாமல் செய்கின்ற நற்காரியங்கள், முடிவில் வென்று அதற்குண்டான விளைவுகிட்டும் “எல்லோரும் ஒன்று மட்டும் உள்ளத்தில் நிறுத்திக்கொள்ளுங்கள்”. கடவுளைப் பற்றி நன்கு அறிந்தவர்களாகக் கூறப்படும் பிராமணர்கள் இன்று சமுதாயத்தின் கடைநிலையில் நின்றுக்கொண்டு நல்வாழ்வு வாழ விடை தெரியாமல் அந்தக் கடவுளைக் கும்பிட்டு நிற்கும் காட்சியினைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஜாதக பரிவர்த்தனை, எளிதில் திருமணங்கள் நடைபெறும் முயற்சிகள், நலிந்தோர்க்கு உதவி, பராம்பரிய பற்றுடன் வைதீக கர்மாக்களை பின்பற்றுதல், மூடநம்பிக்கை, தேவையற்ற அளவுக்கதிகமான ஜோதிட ஈடுபாட்டை விட்டுவிடுதல் போன்ற செயல்களை செய்ய முன்வருகின்ற தாம்ப்ராஸ் அல்லது தாம்ப்ராஸ் பதிவு அல்லது வேறு எந்த பிராமண இயக்கங்கள் ஆகிய எதுவாயினும் அவை எல்லாவற்றுக்கும் ‘பிராமின் டுடே’ தன் ஆதரவை வழங்கி, முடிந்த எல்லா உதவிகளையும் செய்ய சித்தமாய் இருக்கும். போட்டி போட்டுக் கொண்டு நற்காரியங்களை செய்வது நம் சமுதாய வளர்ச்சியை நங்கு ஊட்டி விடும் உன்னத செயலே ஆகும்.

ஏக்கம் எதுவும் இல்லாத எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்புகூட, பிராமணர்களின் கொள்கை “லோக ஷேமம் வஹாம்யஹம்”, “சர்வஜனோ சுகினோ பவந்து” என்ற இரண்டு மட்டுமே இருந்தன. “நன்றும் தீதும் பிறர் சொல்லிவாரா” என்ற நம் சமூக மூதாட்டி அவ்வையின் வாக்கு ஒன்றை மட்டும் நினைவில்கொண்டு வேறுபாடுகளை விட்டு ஒன்றுபடுங்கள்.

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  



சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும் சத்திய விஜயம் அல்லது மெய்ப் பொருள் விளக்கம்



Designed and maintained by AKR Consultants