- The Magazine for Brahmins
சத்திய விஜயம் அல்லது மெய்ப் பொருள் விளக்கம்
ஸ்ரீ ஓம்கார கிரி சுவாமிகள்
பூர்வாசிரம பெயர்: வத்தலக்குண்டு K. கோபாலகிருஷ்ண அய்யர்
தொடர் - 16
பகவத் கீதையில் 18 அத்தியாயங்களிலுள்ள கர்மயோக சாஸ்திரத்தைப் பாரதத்தின் 18 நாள் யுத்தமாக இதிஹாசமாய் வர்ணிக்கப்பட்டதென்று தெரிந்துகொள்வதுபோல, வாசிஷ்டத்தில் சொல்லப்பட்ட ஏழு ஞான பூமிகளின் தத்துவங்களை, ராமாயணத்தில் ஏழு காண்டங்களில் சரித்திரமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறதென்று அறிந்துகொள்ளலாம். வால்மீகி ராமாயணத்தைக் கதா உபாயமென்றே சொல்லுகிறார். வாசிஷ்டத்தில் பாலன் கதையைப் படித்துணர்ந்தால் உண்மை விளங்கும்.
அஸ்வமேத யாகசாலையில் லவ, குசர்கள் இராமாயண கானம் செய்யும்போது, ஸ்ரீ ராமர் அவர்களைப் பார்த்து “இந்தக் காவியமானது எவ்வளவு பிரமாணமுடையது? இதற்கு மூலம் எது? இதை உங்களுக்கு உபதேசம் செய்த குரு எங்கேயிருக்கிறார்?” என்று கேட்டதாகவும் அவர்கள் ஸ்ரீ ராமரைப் பார்த்து, “தங்களது இந்தச் சரித்திரத்தை உபதேசித்த வால்மீகி பகவான் யாக பூமியில் வந்திருக்கிறார். இது 24000 ஸ்லோகங்களுடையது. ஏழு காண்டங்களை யுடையது. இந்த உலகமுள்ளவரை இந்தச் சரித்திரம் விளங்கும். நாங்கள் கானம் செய்யும் இந்தக் காவியத்தை ஸ்ரவணம் செய்யும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்” என்று பதில் சொன்னதாகவும் பொருளுள்ள ஸ்லோகங்கள் ஏற்கனவே வால்மீகியால் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிற 24,000 ஸ்லோகங்களுக்குள் சேர்ந்திருக்கின்றன. லவ, குசர்களால் கானம் செய்யப்பட்டதை வால்மீகி பின்பு செய்தாரோ என்ற சந்தேகத்தையுண்டாக்குகிறது.
அப்படியானால் ஏற்கனவே 24,000 ஸ்லோகங்களையும் லவ, குசர்கள் வால்மீகியிடம் கற்றிருக்க முடியாது. ஆகையால் ராமாயணத்தை வேதத்தைப் போல் அமானுஷேயம் அல்லது மனிதனால் செய்யப்படாததென்று தெரிந்துகொண்டாலன்றி உண்மை விளங்காது. இது எப்படி உண்டாயிற்றென்று சொல்ல முடியாத மாயையால் கல்பிக்கப்பட்ட வேத துல்யமானது. கதாபாத்திரங்களைப் போலவே வால்மீகி யென்ற கர்த்தாவும் கல்பிதம். ராமாயணத்தை ஞானயோக சாஸ்திரமாகவும், வால்மீகியை யோகாப்யாச முறையாகவும் தெரிந்துகொள்ள வேண்டும்.
உபநிஷத்துகள் வேதத்தின் ஞான காண்டத்தைச் சேர்ந்தவை. ராமாயணம் ஞானயோக சாஸ்திரமாகையால் உபநிஷத்தில் சம்பந்தப்பட்டதாகும். ராமாயணத்தில் சம்பந்தப்பட்ட முக்கியமான சில ரிஷிகளின் உற்பத்தியைப் பற்றி வஜ்ரசூசிகா உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ரிஸ்யஸ்ருங்கர் மான் வயிற்றிலும், கௌசிகர் தர்ப்பைப் புல்லிலும், வால்மீகி கரையான் புத்திலும் கௌதமர் முயலின் முதுகிலும், அகஸ்தியர் கும்பத்திலும், வசிஷ்டர் தேவதாசியிடத்தும் உண்டானார்கள் என்று வர்ணனை. இந்த அமானுஷ்யமான கல்பனா புருஷர்களை மண்ணுலக சம்பந்தப்பட்டவர்களென்று எப்படிச் சொல்ல முடியும். மேலும் கதாநாயகனான இராமனுக்கும், கதா நாயகியான சீதைக்கும் தனித்தனி உபநிஷத்துகளிருக்கின்றன. முக்திகோபனிஷத்தில் கண்ட விஷயங்களை ஸ்ரீராமன் ஹனுமாருக்கு உபதேசம் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
பாகவதம் 5வது ஸ்கந்தம் 19வது அத்தியாயத்தில் ஸ்ரீராமர் இப்பொழுதும் கிம்புருஷ வர்ஷத்தில் ப்ரசன்னராயிருக்கிறரென்றும், ஹனுமார் அவரை உபாசித்துக்கொண்டிருக்கிறாரென்றும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஜம்பூத்வீபத்தில் ஒன்பது வர்ஷங்கள் அடங்கியிருக்கின்றன.
அவையாவன இளாவிருதம், ரம்யகம், ஹிரண்மயம், குரு, ஹரி, கிம்புருஷம், பாரத, கெதுமாலம், பத்ராஸ்வம் என்பவையாம். இந்த வர்ஷத்தின் தத்வார்த்தத்தை ஏற்கனவே விவரித்திருக்கிறது. பாரத வர்ஷத்தை இந்தியா தேசமென்று சொல்லுகிறவர்கள், மற்றைய எட்டு வர்ஷங்களையும் எந்த தேசங்களாகச் சொல்லுவார்களோ தெரியவில்லை. வால்மீகி இராமாயணம் உத்தரகாண்டம் 87, 88வது சர்க்கங்களில் கிம்புருஷ உற்பத்தியைப் பற்றி வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இல மகாராஜன் ஸ்திரீ ரூபத்தையடைந்த விவரமும், மாதாமாதம் ரூபம் மாறின விஷயமும், கடைசியில் அஸ்வமேத யாக பலத்தால் ஸ்திரமாய் புருஷ ரூபத்தைப் பெற்ற கதையும் பாகவத புராணத்திலும், ராமாயணத்திலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
கிம்புருஷன் என்றால் ‘ஆத்மாவாகிய புருஷன் யார்?’ என்று விசாரிக்கும் புத்தியேயாம். மது உலக நாட்டத்திலிருக்கும்வரை இந்த விசாரணை ஏற்படுகிறதில்லை. மனதாகிய குதிரையை யடக்கியாளக்கூடிய சக்தி வெளியில் இல்லை. ஆத்ம ஞானத்தால்தான் அது அடங்கும் என்ற உண்மையை வெளியிடுவதற்காகவே அஸ்வமேத யாகம் என்ற வர்ணனை பிரஹதாரணிய உபநிஷதத்துடக்கத்தில் விளங்குகிறது. இதிஹாசமாக மனதைக் குதிரையாகவும் வெளிநாட்டத்தை உலகமாகவும், ஞானத்தை யாக அக்கினியாகவும் உருவகப்படுத்தியிருக்கிறது, அஸ்வம் என்றால் நிலைத்திராத மனதென்றும், மேதஸ் என்றால் சங்கல்பமாகிய கொழுப்பென்றும், யாகமென்றால் சங்கல்பமாகிய கொழுப்பை ஞானாக்னியில் ஹோமம் செய்வதென்றும் கருத்து. மஹாபாரதத்தில் சிகண்டியை ஆணும், பெண்ணுமல்லாத அலியென்றும், அசங்கல்பம் என்ற த்வஜம் அல்லது கொடியைத் தாங்கினவ னென்றும் வர்ணித்திருப்பதன் தத்வத்தை ஞாபகத்துக்குக் கொண்டுவர வேண்டும். மனம் நசிதாலொழிய பேதப் புத்தி ஒழியாது. பேதப் புத்தி மாறினாலன்றி ஆத்மாவாகிய புருஷனைத் தெரிந்துகொள்ள முடியாது.
ஆத்மாவாகிய புருஷன் யாரென்று வால்மீகி ரிஷி கேட்டதாகவும் நாரதர் பதிலளித்ததாகவும் கல்பிக்கப்பட்ட நூல் ராமாயணமாகும். இதர ஞான நூல்களைப் போலவே ராமாயணமும் இதர ஞான நூல்களைப் போலவே ராமாயணமும் குரு சிஷ்ய சம்வாதம் போலவே ஆரம்பித்திருக்கிறது. குருவினுடைய பெயரும், சிஷ்யனுடைய பெயரும் கல்பனைகளே. நாரம் என்றால் தத்வ ஞானம். நாரதர் என்றால் தத்வஞானத்தைக் கொடுக்கிறவர். வால்மீகி என்றால் வால்மீகம் என்ற மண் புத்திலிருந்து வெளிவந்தவர். மண்ணாசை அல்லது உலகப் பற்றற்றவர் என்று பொருள். ராமாயணத்தைச் சொல்லவும் கேட்கவும் அதிகாரிகளின் லக்ஷணம் நாரதர் வால்மீகி என்ற சொற்களால் விளங்குகிறது.
பாரத வர்ஷமாகிய மஹாபாரதத்தைச் சொல்லவும் கேட்கவும் அதிகாரிகள் கர்ம யோகிகள். ஆனால் கிம்புருஷ வர்ஷமாகிய ராமாயணத்தைச் சொல்லவும கேட்கவும் அதிகாரிகள் ஞானயோகிகளாவார்கள். சொல்லுகிறவர்களை ஞான யோகீஸ்வரராகவும் கேட்கிறவர்களை யோகாப்யாசிகளாகவும் கருத வேண்டும். இவர்களே கிம்புருஷ வர்ஷ வாசிகளாவார்கள். ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியமே ஞானயோகமாகும். பரமாத்மாவைச் சூரியனாக உருவகப்படுத்தியிருப்பதால் தசரதர் முதலானவர்களைச் சூரியவம்சத்தரசர்களென்று இதிஹாசமாகக் கூறப்பட்டிருக்கிறது.
பாலர்களான ராஜ குமாரர்களுக்குப் பஞ்சதந்திரக் கதைகள் மூலம் அரசாங்க ஞானத்தைப் போதித்தது போல, மந்தாதிகாரிகளுக்கு வேதாந்த ஞானத்தைப் போதிப்பதற்காகவே இதிஹாச புராணங்கள் அநாதியாகவே ஏற்பட்டிருக்கின்றன. கதைகளின் கருத்துரையைக் கவனித்துக் கதை கல்பனையென்று தெரிந்துகொண்ட ராஜ குமாரர்களைப் போல இதிஹாச புராணங்களின் தத்வத்தை யுணர்ந்து கதாபாகத்தைக் கல்பனை யென்றறிய வேண்டும்.
(தொடரும்)
Sparks
Biography Of Sri Thyagaraja Swami
