Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT95 Brahmin Today - January 2012 பிராமின் டுடே - ஜனவரி 2012     அட்டவணை






The Magazine for Brahmins




மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய

“சந்திரிகையின் கதை”

Maha Kavi Subramaniya Bharathy

cantirikaiyin katai

முதல் அத்தியாயம்: பூகம்பம் (தொடர்ச்சி)

மகாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை. வீட்டு ரேழியில் கூடியிருந்த கிழவர், கிழவி, மகாலிங்கையர், அவருடைய ஐந்து பெண் குழந்தைகள் - எல்லார்மீதும் வீடு விழுந்து, அவர்களத்தனை பேரும் பிணங்களாகக் கிடந்தனர்.

வாயிற் குச்சிலில் பிரசவ வேதனையிலிருந்த மகாலிங்கயைருடைய மனைவியும் அவளுக்குத் துணையாக அவருடைய விதவைத் தங்கையுமிருந்தனர்.

இரவு சுமார் ஏழு மணிக்குத் தொடங்கிய சூறைக்காற்றும், மழையும், காலை நான்கு மணி சுமாருக்கு, பூகம்பத்துடன் முடிவுபெற்றன. அரைமணி நேரத்துக்கெல்லாம் உலகம் அமைதி பெற்று விட்டது. மறுநாள் பொழுது விடிந்தது. விதவைத் தங்கை-அவள் பெயர் விசாலாட்சி-வெளியே வந்து பார்த்தாள்.

எல்லா வீடுகளும் விழுந்திருந்தன. எங்கும் மனிதருடல்களும், மிருக பட்சிகளின் உடம்புகளும் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. முழுக்காட்சியும் அவள் பார்க்க நேரமில்லை. காற்றினாலும் மழையினாலும் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களை மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்துக் கிடக்கும் ஜனங்களை அவள் காணவில்லை. எனினும், தன் வீட்டில் எல்லாரும் செத்தது அவளுக்குத் தெரியுமாதலால், மற்ற வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டுமென்றும் அதுகொண்டே தெருவில் ஆட்களைக் காணவில்லையென்றும் அவள் ஊகித்துக் கொண்டாள். அப்பொழுது மீண்டும் அவளுடைய மனதில், சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த பயங்கரமான செய்திகள் நினைப்புறலாயின. பூகம்பம் தோன்றினவுடனே மகாலிங்கையருடைய தந்தையாகிய கிழவர், “ஐயையோ, பூமி ஆடுகிறதே! நாமெல்லாரும் வாயிற்புறத்திலுள்ள குச்சிலுக்குப் போய் விடுவோம். அதுதான் இவ்வீட்டில் சற்றே உறுதியான இடம். என்னை அங்கே கொண்டு விடுங்கள்” என்று அலறினார். அந்தச் சத்தம் மாத்திரம் விசாலாட்சியின் செவியிற்பட்டது. அப்புறம் நடந்த பேச்சொன்றும் அவள் செவியிற் படவில்லை. வாயிற் குச்சிலுக்குள் வெளித் திண்ணை வழியாகத்தான் புகலாம். வீட்டுக்குள்ளிருந்தபடியே அங்குவர வழியில்லை. எனிலும், ஒரு சாளரப் பொந்து வழியாக அந்தக் கிழவருடைய பேரோலம் மாத்திரம் புயற் காற்றொலியையும் மிஞ்சி அவளுடைய செவியிற்பட்டது.

ஆனால், ‘அங்ஙனம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் சாத்தியமில்லை’யென்பதை அவள் உடனே ஊகித்துக்கொண்டாள். ஏனெனில், உள்ளேயிருந்தவர்கள் வீட்டு வாயிற்கதவைத் திறந்தன்றோ, திண்ணையிலேறி அதன் வழியாகக் குச்சிலுக்குள் வரவேண்டும்? வாயிற்கதவைத் திறந்த மாத்திரத்திலே சப்த மேகங்களும், ஊழிக்காற்றும் வீட்டுக்குள் புகுந்து விடுமன்றோ? ஆதலால், அவர்கள் வெளியேறவில்லையென்று நினைத்துக் கொண்டாள். ஓரிரண்டு கணங்களில் திடீரென்று உள் வீடெல்லாம் இடிந்து விழுந்த ஒலியும், அங்கிருந்தோர் எல்லாம் கூடியலறிய பேரொலியும், அவள் செவியிற்பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று நிச்சயித்துக்கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழுமென்று அவள் மிகவும் எதிர்பார்த்தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்று போய்விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கிப் போயின.

இச்செய்திகளையெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு விசாலாட்சி தன்னைச் சூழ இடிந்து கிடக்கும் வீடுகளையும் ஒடிந்து கிடக்கும் மரங்களையும் பார்த்து நிற்கையிலே, குச்சிலுக்குள்ளிருந்து “குவா! குவா!” என்ற சத்தம் வந்தது. உள்ளே போய்ப் பார்த்தாள். அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாட்சி அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்துகொண்டிருக்கையில், கோமதிக்கு மரணாவஸ்தை நேர்ந்துவிட்டது. அவள் சாகும்போது:- “விசாலாட்சி! விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடனிருக்கமாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்துகொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாதத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக, நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர் வை” என்றாள்.

விசாலாட்சி ‘சரி’ என்றாள். கோமதியின் உயிர் பரலோகஞ் சென்று விட்டது.

---000---

இரண்டாம் அத்தியாயம்

விசாலாட்சிக்கு ஜீ. சுப்பிரமணிய அய்யர் செய்த உதவி.

சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியான மூன்று வருஷங்களாயின. 1904ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்பொழுது சென்னைப் பட்டணத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திராதிபராகிய ஜீ. சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக் கப்பால் பம்பாயில் நடைபெறப் போகிற ‘காங்கிரஸ்’ என்ற பாரத ஜன சபைக்கொரு பிரதிநிதியாகச் செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள் தின்பண்டங்கள் முதலியன தயார் செய்துகொண்டிருந்தார். அக்காலத்தில் திருவல்லிக் கேணி வீரராகவ முதலித் தெருவில் ஜீ. சுப்பிரமணிய அய்யர் மகா கீர்த்தி பெற்று விளங்கினார். அவருக்குக் கொடிய ரோக மொன்றினால் உடம்பெல்லாம் முக மெல்லாம் சிதைந்து முள்சிரங்குகள் புறப்பட்டிருந்தன. இருந்தாலும் நிகரற்ற மனோ தைரியத்துடன் அவர் தேசப் பொதுக் காரியங்களை நடத்தி வந்தார். மேற்கூறிய 1904 டிசம்பர் மாதத்திடையே ஒரு நாள் காலையில் அவர் தம் வீட்டு மேடையின் மேல் தம்முடைய விஸ்தாரமான புத்தகசாலையினருகே ஒரு சாய் நாற்காலியின் மீது சாய்ந்துகொண்டு பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார்.

அவர் முன்னே ஒரு சுமங்கலிப் பெண்-அவருடைய இளைய மகள் ஒரு பிரமாண்டமான ஊறுகாய்ப் பரணியைக் கொண்டு வைத்தாள்.

“இதில் என்னம்மா, வைத்திருக்கிறாய்?” என்று அய்யர் கேட்டார்.

“நெய்யிலே பொரித்த எலுமிச்சங்காய் ஊறுகாய்; நல்ல காரம் போட்டது” என்று மகள் சொன்னாள்.

“இதையெல்லாம் எப்படிச் சுமந்து கொண்டு போகப் போகிறோம்? அந்த வேலைக்காரனோ பெரிய குருட்டு முண்டம்” என்று அய்யர் முணுமுணுத்தார்.

(தொடரும்)

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  



நிகழ்வுகள் தேதியூர் பக்கம்



Designed and maintained by AKR Consultants