Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com

  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை


The Magazine for Brahmins
பிராமணர்களும் கலப்புத் திருமணங்களும்

கிணற்றில் தொலைத்ததை குளத்தில் தேடாதீர்கள்

நம் இதழ் தொடங்கிய 2004 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாத முகப்புத் தலைப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டு வரும் கலப்புத் திருமண விஷயம் தொடர்ந்து 10 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டு செம்டம்பர் மாத முகப்பு தலைப்பாகவும் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. “பேரு பெத்த பேரு, நீளு கூட லேது” என்ற கதையாக, பக்கம் பக்கமாக உக்கிரத்துடன் எழுதி, நாம் இவ்விஷயத்தை பற்றி ஒப்பாரி வைத்தாலும் அக்கறை உள்ள ஒரு சிறு பிரிவினர் தவிர, வேறு அதிகமாக எந்தப் பிராமண உடன்பிறப்புகளும் அலட்டிக்கொள்வதாக நமக்குத் தோன்றவில்லை. எடுத்த சங்கை இவ்வருடமும் ஊதுவதை நிறுத்தாமல் கலப்புத் திருமணங்களைப் பற்றி சில விஷயங்களை எடுத்து விடவே எண்ணுகிறோம்.

‘கூடாது, கூடாது’ என்று எத்தனை கூப்பாடு போட்டாலும், நம்மாத்து கூடத்திற்குள்ளேயே வந்து நம் சமூகப் பெண்களைக் கூட்டிக்கொண்டு சென்று, திருமணம் செய்யும் நடைமுறை தற்பொழுது படு ஜோராகவே நடக்கின்றது. 'அடுத்த ஜாதியில் கல்யாணம் செய்தால் அடுத்த நிமிடம் நாங்கள் இந்த வீட்டில் இருக்க மாட்டோம். முடித்துக்கொண்டு உன்னுடனான உறவை எல்லாம் எடுத்துவிடுவோம் ஓட்டம் எங்கள் ஊரை பார்த்து' என்றெல்லாம் நம் பிராமணப் பெற்றோர்கள் காட்டிய கோபம், சூளுரை, உதார் எல்லாம் தற்பொழுது அடிமட்டமாக படுத்துவிட்டது. எதனால் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் அதுதான் இன்றைய நிதர்சனம்.

“அடுத்த மாதம் ஆறாம் தேதி எங்கள் பெண்ணிற்கு கல்யாணம். பையன் ஃபாரின் கம்பெனியில் வேலை செய்கிறான். பிக்கல், பிடுங்கல் ஒன்றும் இல்லாத அந்த சமத்து பிள்ளையைப் பிராமணன் இல்லை என்ற ஒரு சின்ன விஷயத்திற்காக(?) விட்டுவிட எங்களுக்கும் மனசில்லை. இரண்டு வருடமாக ஒருத்தரையொருவர் 'புரிந்துகொண்டு, பழகியதை வைத்து பார்த்தால்' அவர்கள் நம் பிராமணர்களைவிட பல விஷயத்தில் ஓசத்தி என்று தோன்றுகிறது” என்ற நீண்ட சால்ஜாப்பு கவரில் கல்யாண பத்திரிகையை வைத்து, சொந்த பந்தங்களுக்கு கொடுத்து நடத்தப்படும் கலப்புத் திருமணங்கள் இன்றைய வாழ்வில் கண்கூடு.

“ஆரம்பித்துவிட்டாரய்யா அவருடைய புலம்பலை” என நம் அருமை வாசகர்கள் அங்கலாய்பதற்கு அதிக இடம் தராமல், இந்த வருடம் புதிய கருத்துக்கள் சிலவற்றை நாம் வெளிப்படுத்த விரும்புகிறோம். தாமத திருமணங்கள் என்னும் தவிர்க்க முடியாத சூறாவளியில் அகப்பட்டுக்கொண்டு அல்லல் படும் நம் அருமை பிராமண இளைஞர்கள் கூட, சிந்திக்காத ஒரு விஷயத்தைப் பற்றி அவர்களின் பெற்றோர்கள் அடிக்கடி நினைத்து பார்க்கின்றனர். தங்கள் பையனுக்கு ஒரு பிராமணப் பெண்ணை தேடி தேடி, அலைந்து திரிந்து எத்தனை அவதிப்பட்டாலும் பலன் என்னவோ பூஜ்ஜியமாகதான் இருக்கின்றது. ஒரு சமயம் ஜாதகம் பிரச்சனை, இன்னொரு சமயம் பையனின் உத்யோகம் பிரச்சனை, மொத்தத்தில் எல்லா சமயங்களிலும் கல்யாணம் கைக்கூடுவதே பிரச்சனை.

'இன்னும் கொஞ்ச நாளில் சென்னை ஆட்டோக்களில் ஏறப்போகும் சூடு மீட்டர் ரீடிங் போல' பையனின் வயது ஏறிக்கொண்டிருக்கிறது. படிப்பு, பணம், உத்யோகம் ஆகிய எந்த வித வித்தியாசமும் இன்றி ஒட்டுமொத்தமாக எல்லா பிராமணப் பெண்களும் கல்யாண விஷயத்தில் உச்சாணி கொம்பில் ஏறிக்கொண்டு இருக்கிறார்கள். எந்த மந்திரவாதிக்கும் கட்டுப்படாத, எந்த பில்லி சூன்யக்காரனும் ஒட்டமுடியாத, பிடிவாத பேய் அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. தன்னுடைய வீடு மட்டும் இல்லாமல், அடுத்த வீட்டையும் எழுதிக்கொடுத்தாலும் கூட, 'என்னுடைய தகுதிக்கு இது குறைவு, இன்னும் கொஞ்சம் நல்ல பையனாகப் பார்க்கலாம்' என்ற வன்மத்துடன் வலம்வரும் பிராமணப் பெண்களைப் பார்த்து “என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை” என்று ஏங்கும் பெற்றோர்கள் தாங்கள் ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டோமோ என்று மனம் தடுமாற தலைப்பட்டுவிட்டனர்.

பிராமண ஆச்சாரம், நம்மாத்து வழக்கம், கட்டிக்காத்து வந்த வைதீக கர்மா, இவையெல்லாம் கெட்டு குட்டிச்சுவராகி விடக்கூடாதே என்று கெட்டியாக ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டிருந்தோம். சோத்துக்கு வழி இல்லாதவராக இருந்தாலும் நம் ஆத்துக்கு மாட்டுப் பெண்ணாக வரப்போகிறவள் குடும்பம் வேத்து மனுஷாளாக இருக்கக்கூடாது. ஜாதகம் பார்த்து, பொருந்தி, பெரியவர்கள் சம்மதத்துடன், நாள் நட்சத்திரம் பார்த்து பையனின் கல்யாணம் நடைபெற வேண்டும் என்று ஆசைப்பட்டது பேராசையோ?

'வேளை வந்துவிட்டது', 'வேளை வந்துவிட்டது' என்று பையனுக்கு ஒவ்வொரு புதிய வேலை கிடைக்கும்பொழுதும் ஜோசியரிடம் ஓடி, தோஷம் இல்லாத பெண் ஜாதகங்களாக பார்த்து, ஃபோன் செய்து, கடிதம் போட்டும் பலனின்றி துவண்டு போனோமே. 'இப்பதானே 28 வயது', இன்னும் ஒரு வருஷம் போனாலும் பரவாயில்லை. அதற்காக அப்பா அம்மா இல்லாத பெண்ணை எடுக்கமுடியுமா? என்று தப்புத்தப்பாக கணக்கை போட்டுவிட்டு, இன்று தவிக்கிறோமே. 'எல்லாம் சரிதான், பல்லுதான் பெண்ணிற்கு கொஞ்சம் எடுப்பாக இருக்கிறது. சுள்ளிகட்டையாய் கறுப்பு வேறு. நம் சொந்தகாரா எல்லாம் சிரிக்கமாட்டார்களா' என்று யாரோ ஒரு பெண்ணை எள்ளி நகையாடியதற்குத் தண்டனையாக, இன்று எல்லா பெண்களும் நம் பையனை தள்ளி வைத்துவிட்டார்களோ.

இப்படி எல்லாம் புலம்பி, மனதிற்குள் அழும் பையனின் பெற்றோர்கள், பேசாமல் இவன் வேறு ஜாதி பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கலாமே என்று நினைக்கத் தொடங்குவதுதான் நம்மை மனம் பதைக்கச் செய்கிறது. பிராமணச் சமூக வரலாற்றின் ஒரு திருப்புமுணையாக அமைந்துவிடக்கூடிய இந்த சிந்தனை மாற்றத்தை எண்ணி, நொந்துபோவது பிரச்சனையின் தீர்வு அல்ல. அப்பொழுதே, ஆபிஸில் நல்ல பெண் இருந்தால் சொல். இப்பொழுதே அவர்கள் வீட்டிற்கு போய் திருமணத்தை முடிவு செய்துவிடலாம் என்று சொல்லாமல் விட்டது ஒரு வேளை ஒரு பெரிய தவறோ என்று நம் பெற்றோர்களின் உள்ளத்தில் ஓரமாக எட்டிப்பார்க்கும் நினைப்பை பற்றி நாம் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறோம்.

30 அல்ல, 35 அல்ல, 40 வயது ஆனாலும் எப்போதும் நான் பிராமண அல்லாத பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று தற்போதைய சூழலிலும் தீவிரமாக இருக்கும் நம் பிராமண இளைஞர்களை கர்ம வீரர்கள் என்று சொல்வது மிகையல்ல. கண்ணோடு கண் கலந்து, கையோடு கை கலந்து, மெய் பொய் எல்லாம் ஒன்றாக தெரிந்து, உன்னோடு நான், என்னோடு நீ என்று காதலிகளின் பின்னாடி செல்லும் சில பிராமண இளைஞர்களைத் தவிர, பெரும்பான்மையானவர்கள், இன்றும், அப்பா அம்மா சம்மதம் மற்றும் ஜாதக பொருத்தமுள்ள பெண்கள்தான் சக தர்மினிகளாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதை நாம் பெருமையோடு பதிவுசெய்து, அவர்களுக்குத் தலை வணங்குகிறோம். இந்த உறுதிப்பாடு இருக்கும்வரை பிராமணச் சமூகத்திற்கு அழிவு வராது என்று அறுதியிட்டு கூறவும் ஆசைப்படுகிறோம்.

நாம் இந்தக் கட்டுரை வாயிலாக, 'தாமதத் திருமணங்களுக்கு கலப்புத் திருமணங்கள் ஒரு தீர்வாக இருக்க முடியுமா' என்று சிந்திக்க தொடங்கியிருக்கும் நம் சமூக பெரியவர்களின் சிலரின் சந்தேகத்தைப் போக்கும் விதமாக, அடிப்படை உண்மை சிலவற்றை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

நேரடியாக சொல்வதென்றால், கலப்புத் திருமணங்கள் தாமதத் திருமணங்களுடன் தொடர்புடையது அல்ல. ஒரு போதும் கலப்புத் திருமணங்கள் மூலம் தாமதத் திருமணங்களை குறைக்க முடியாது. இதை சற்று விளக்குவது அவசியம்.

ஏதோ, பிராமணர் அல்லாத பெண்கள் எல்லாம் நம்மாத்து அம்பிகளைத் திருமணம் செய்துகொள்வதற்கு வரிசையில் இருப்பது போல நாம் எண்ணிக்கொள்வது ஒரு காட்சி பிழையாகும். படித்து, வேலையில் இருக்கும், பார்ப்பதற்கு அழகாக உள்ள பாப்பாத்தியை வேண்டுமானால் திருமணம் என்ற விலங்கை பூட்டி, மருமகளாக ஆக்கிக்கொள்ள மற்ற சமூகத்தினர் விரும்புவார்களேயன்றி, அப்பா அம்மா கோண்டு அம்பிகளை மாப்பிள்ளையாக்கி கொள்ள யாரும் முன்வரமாட்டார்கள்.

பிராமண பையன்களைத் திருமணம் செய்துக்கொண்டு, பிதுர்காரியம் செய்வதற்குதான் நேரம் சரியாக இருக்குமேயன்றி, பிறந்த வீட்டில் உண்டு மகிழ்ந்த, நண்டு, மீன், நாரை கொக்குகளை என்றும் சாப்பிடமுடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். திரும்பி பார்த்தால் தீட்டு, ஏகாதசி, பாட்டி திவசம், தாத்தா திவசம் என்று போட்டு பொசுக்கி விடுவார்கள் நம் பொழுதையெல்லாம் என்பது நம் பெண்களைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தவள் பக்கமும் போகாமல், 'இல்லை! இப்படித்தான் எங்காத்து வழக்கம்' என்று யதேச்சிகாரமாக நடந்து கொள்ளவும் இல்லாமல், வாழப்போகும் இந்த இரண்டுங்கெட்டான் வழவழ கொழகொழ இருமாண்டிகள், ஒரு போதும் விருமாண்டிகளாக ஆக முடியாது என்பது எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமே.

தங்களைப் பற்றியும் தங்கள் குடும்ப பெருமைகள் பற்றியும் பேசி, பேசியே புத்தி பேதலிக்கச் செய்துவிடும் இந்தப் பிராமண அம்பிகளை கல்யாணம் செய்துகொண்டு கஷ்டப்படுவதைவிட, நம் ஜாதியில் பையன்களே கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. இப்படியே கன்னிகளாகவே இருந்துவிடலாம் என்பதே பிராமணர் அல்லாத பெண்களின் எண்ணமாக இருக்கின்றது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சிக்கலான இந்தப் பிரச்சனை பற்றி, நக்கல் அடித்து நகைப்பூட்டுவதற்காக இதையெல்லாம் நாம் செல்லவில்லை. உண்மையான அக்கறையுடனும், ஊரில் பார்த்து கேட்டு, உணர்ந்த விஷயங்களின் அடிப்படையில்தான் இதையெல்லாம் நாம் உரைக்கின்றோம்.

நமக்கு தெரிந்த, நம்மோடு பழகுகின்ற, நன்கு பரிட்சியமுள்ள பலரின் அனுபவங்களாகவே நாம் கூறியவையெல்லாம் அமைந்திருக்கின்றன. சமீபத்தில்கூட, ஒரு பிராமணப் பையனை திருமணம் செய்துகொள்ள தீர்மானித்து கல்யாண சத்திரம் பார்க்கும் வரை சென்றுவிட்ட ஒரு பிராமணர் அல்லாத பெண்ணின் பெற்றோர்களை, அவர்களின் சொந்த பந்தங்கள் பிராமண சம்பந்தம் வேண்டாம் என்று வற்புறுத்தி அந்த முடிவு கைவிடப்பட்டது, நம் கருத்தை உறுதி செய்கின்றது.

உதாரணமாக எடுத்துக்காட்டிய இது போன்ற ஓராயிரம் சம்பவங்கள் நமக்கு உணர்த்துவது ஒன்று மட்டுமே. தாமதத் திருமணங்கள் ஏற்படுவதற்கு உண்டான காரணங்கள் நம் சமூகத் தொடர்புடையது மட்டுமே. அந்த சிக்கலான பிரச்சனையின் தீர்வை, கலப்புத் திருமணங்கள் மூலம் கண்டெடுக்கலாம் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்.

கலப்புத் திருமணங்கள் எந்தப் பிரச்சனைக்கும் எப்பொழுதும் தீர்வாக இருக்க முடியாது. கிணற்றில் தொலைத்ததை குளத்தில் தேடாதீர்கள்.


பிரியமுள்ள பிராமணச் சொந்தங்களே! Brahmins and Inter-Caste MarriagesDesigned and maintained by AKR Consultants