Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com

  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை


The Magazine for Brahmins
ஆர்யத்தமிழன் பக்கம்

“கோவிந்தா என்றால் கேலியா?”

உ. நரசிம்மன், தேப்பெருமாள் நல்லூர்

கலியுகத்தில் நாம சங்கீர்தனமே மோக்ஷ சாதனம் என்பது பிரசித்தமானது. இதை நடைமுறைப் படுத்திக்காட்ட நாமசங்கீர்தனத்தினை பிரசாரம் செய்யவும் அவதரித்தவர் ஸ்ரீஆதிசங்கரர் வழி வந்த ஸ்ரீ போதேந்திராள். இதனாலேயே இவரது பெயர் “ஸ்ரீ ராம நாம போதேந்திராள்” என்று ஆனது.

திரௌபதியினது ஆடையை துச்சாதனன் வலுக்கட்டாயமாக களைத்தபோது மாவீரர்களாகவும், பெரியோர்களாகவும் இருந்த பீஷ்மரோ, த்ரோணரோ, கணவன்மார்கள் ஐவருமோ வாய்மூடி இருக்க, திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்ற சத்திய வாக்கியத்திற்கு இணங்க, திரௌபதி சர்வேஸ்வரனாகிய ஸ்ரீ கிருஷ்ணனை மனதில் நினைத்து அவனது திருநாமங்களை துதித்து அழைக்க, திரௌபதியின் சேலை பலவண்ணத்தில் வளரத்துவங்கி திரௌபதி மானம் காத்தது, திருமாலின் திருநாமமாகிய கோவிந்தா என்னும் திருநாமம்.

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தில் திருமாலின் ஆயிரம் திருநாமங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் “கோவிந்தா” என்னும் திருநாமம். இந்த திருநாமத்தின் சிறப்பு, இது மோட்சத்தினை தரும் திருநாமம் என்பதாம்.

நாம் தினசரி உணவு உண்ணும்போது பிறரிடம் பேசக்கூடாது என்பது சாஸ்திரம். இதன் பொருள் உண்ணும் உணவின் சுவையை நாம் அனுபவிக்க முடியாது போகும். இரண்டாவது உண்ட திருப்தியும் இருப்பதில்லை. சிலர் தனியாக உணவு உண்பதும் இதனால்தான். எப்போழுது உணவு உண்டாலும் மனதிற்கு அமைதியும் ஒருமுகத்தன்மையும் தேவை. மனத்தின் எண்ண அலைகள் வேறு விஷயங்களில் சிதறுமானால் (டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது) சுவை மற்றும் திருப்தி இரண்டும் கிடைப்பதில்லை. இதனால் உடலுக்கு சேர வேண்டிய சக்தியும் கிடைப்பதில்லை, இதை விளக்கும் அறிவுப்பூர்வமான கதை ஒன்று உண்டு.

அரசன் ஒருவன் ஆடு ஒன்றினை ஒருவனிடம் கொடுத்து அன்றைய தேதியில் ஆட்டின் எடை எவ்வளவு இருந்ததோ அதே எடையில் ஆறு மாதங்கள் கழித்து இருக்கவேண்டும் இதுதான் போட்டி... ஆட்டிற்கு தழைகளை அதிகம் கொடுத்தால் எடை கூடும், குறைவாக கொடுத்தால் எடை குறையும். ஆனாலும் ஒருவன் போட்டியில் பங்கெடுத்து ஆட்டின் எடை ஆறு மாதங்களில் கூடாமலும் குறையாமலும் அதே எடையுடன் தந்தான்.

அரசனுக்கு ஆச்சர்யம் எப்படி உன்னால் முடிந்தது என கேட்க ஆட்டினை பராமரித்து வந்தவன் சொன்ன பதில் இதுதான். ஆட்டினை உணவுகொடுக்கும் போது ஒரு கூண்டில் அடைத்து வைத்து கொடுப்பேன், அப்போது அருகில் மற்றொரு கூண்டில் புலி ஒன்றினை அடைத்து வைப்பேன். ஆடு உணவு உண்ணும் போது புலி தன்னை தாக்கிடுமோ என்ற பய உணர்விலேயே உண்ணும். ஆறு மாதமாக இதே முறையை கடைபிடித்தேன். அச்ச உணர்வும் கவனச்சிதறலுமே ஆட்டின் எடை அன்றிலிருந்து எவ்வளவு சாப்பிட்டாலும் கூடாததிற்கு காரணம் என்று விளக்கினான்.

ஒருமுகப்பட்ட மனது தேவை என்பதற்காகவே சாப்பிடும்போது பேசாமல் இருப்பது. எண்ணச் சிதறலால் மனது அலைபாய்வதைத் தடுக்கவே சாப்பிடும்போது மனதில் “கோவிந்த நாமம்” உச்சரிப்பது வழக்கம். இதனால் புண்ணியமும் சேரும்.

மோட்சம் தரும் கோவிந்த நாமம்

உண்ணும் போது மட்டுமல்ல யாருமற்ற ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடலினைத் தகனம் செய்யும்போது அவருக்கு “கோவிந்தா” எனச்சொல்லி தீ மூட்டி அவர் மோட்சத்தினை அடைய வழி செய்வது நமது வழக்கம். இறந்தவர்­களின் சடலத்தினை தூக்கிச் செல்லும்போதும் இறந்தவர் ஒருவரின் இறுதியாத்திரை நம்மை கடக்கும் போதும் கோவிந்த நாமத்தினை உச்சரிப்பது அவர்களுக்கு நாம் செய்யும் ஆத்மார்தமான ஆன்மிக உதவி. மோட்சதினை திருமால் ஒருவனே தரமுடியும் என்பதால் அவன் திருநாமமான “ கோவிந்த நாமம்” மோட்சம் தரும் மந்திரமாகிறது.

இப்படிப்பட்ட கோவிந்த நாமத்தினை உச்சரித்தபடி திருமண் இட்டுக்கொண்டு, திருமண் இடப்பட்ட பாத்திரத்தில் பிட்சை எடுத்து புரட்டாசி மாதத்தில் உண்பவர்களினை பிட்சை இடுபவர்கள் விழுந்து சேவிப்பது இன்றும் சில கிராமங்களில் நடைமுறையில் உள்ள பழக்கம்.

ஆதிசங்கரரும் “பஜ கோவிந்தம்” என்னும் நூல் ஒன்றினை எழுதி நமக்கு கோவிந்தா என்னும் நாமத்தின் பெருமையை உணர்த்தியுள்ளார். பஜ கோவிந்தம் என்பதின் பொருள், “பஜ” என்றால் பஜனை செய் எப்படியெனில் “கோவிந்தா” என்று பஜனை செய்.

இப்படிபட்ட புனிதமான திருமாலின் திருப்பெயர் கோவிந்தா. பலரால் பல ஆண்டுகளாக ஏமாற்றத்தின் அடையாளமாக, அதாவது கோவிந்தா என்றால் ஏமாற்றம் என கிண்டல் செய்யப்படுவது மத, மன உணர்வுகளை புண்படுத்துவதாகும். இதனால் கிண்டல் செய்பவர்களின் பாபம்தான் அதிகரிக்கும். கோவிந்தா என்னும் நாமத்தினை ஏமாற்றத்தின் அடையாளமாக எண்ணி கிண்டல் செய்து பாபத்தினை சேகரித்துக்கொள்வதை தவிர்ப்போமாக.

கோவிந்தனான ஸ்ரீ கிருஷ்ணனை அவனது நாமாவான “கோவிந்தா” எனக் கூறி துதித்து பயனுறுவோம், இன்புறுவோம். கோவிந்தா என்னும் அவன் நாமம் சொல்வோம் பாபம் நீங்கி மோக்ஷம் பெறுவோம்.

ஸ்ரீ கோவிந்தா கோவிந்தா கோவிந்தா


சத்திய விஜயம் அல்லது மெய்ப் பொருள் விளக்கம் தமிழ்த்தாயின் சகோதரி ஸமஸ்கிருதம் - 3Designed and maintained by AKR Consultants